மட்டக்களப்பு கோட்டையை கலாசார நிலையமாக மாற்றுவது குறித்து ஆராய்வு

மட்டக்களப்பு கோட்டையை பாதுகாத்து சுற்றுலா துறைக்கு பயன்படும் வகையில் கலாசார நிலையமாக மாற்றுதல் தொடர்பான ஆலோசனை கலந்தரையாடல் ஒன்று இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு வாவி சுற்றாடல் கற்கை நிலையத்தில் நடைபெற்றது.

பாலமீன்மடுவில் உள்ள இக்கற்கை நிலைய கேட்போர்கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலை நகர திட்டமிடல் கற்கை நிலையத்தினருடன் சுற்றாடல் திட்டமிடல் சேவைகள் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இக்கலந்துரையாடலில், சிரேஸ்ட நகர திட்டமிடலாளர் பாலி விஜயரத்ன இத்திட்டம் தொடர்பான விளக்கத்தினை வழங்கினார். இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ், அமெரிக்க தூதரக அதிகாரி நியாம்பி யூஓங், மட்டு. மாவட்ட மேலதிக செயலாளர் கே.விமலநாதன், மட்டு. பிரதி மேயர் ஜோர்ச் பிள்ளை, பேராசிரியர் சி.மௌனகுரு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

குறித்த திட்ட விளக்கமளிக்கப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது, மட்டக்களப்பு கோட்டையினை காலாசார நிலையமாக மாற்றினால் மாவட்ட செயலகம் எவ்வாறு செயற்பட முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு விளக்கமளித்த மேலதிக அரசாங்க அதிபர், ‘ மட்டக்களப்பு கச்சேரியை அனைத்து திணைக்களங்களும் உள்ளடங்கியதாக வேறு இடமொன்றுக்கு மாற்றத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அதற்கு திராமடு உட்பட பல இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்’ தெரிவித்தார்.

ஆனாலும் திராய்மடு பிரைதேசத்துக்கு மாற்றுவதில் சிலர் மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இங்கு கருத்துத் தெரிவித்த பாலி விஜயரத்ன இயற்கை பாராம்பரியங்கள் பிரச்சினைக்குட்படாதவாறு மட்டக்களப்பினைத் தான் புனரமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

‘இதேநேரம், இந்த மாவட்டத்தின் அபிவிருத்தியிலும், பாரம்பரியங்கள் பாதுகாக்கப்படுவதிலும், பொதுமக்கள், சமூக அமைப்பினர், திணைக்கள உத்தியோகத்தர்கள் என அனைத்து தரப்பினருடைய ஆலோசனைகளுக்கமையவே செயற்படுவேன்.

சிறப்பான சுற்றுலாத்துறை வளங்களைக் கொண்ட மாவட்டம் என்றவகையில், நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்கு வகிப்பதாகவும் உள்ளது. அதேபோன்று சமூகப் பொறுப்புள்ளவர்களான உத்தியோகத்தர்கள் சமூக அமைப்புகள் ஏனைய நலன் நோக்குக் கொண்டவர்கள் செயற்பட வேண்டும் என மாவட்ட செயலாளர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

 -Tamilmirror

Published by

Leave a comment