நாட்டின் அனை த்து பாடசாலை மாணவர்களுக்கும் சிறந்த தகவல் தொழில்நுட்ப அறி வினை பெற்றுக் கொடுக்கும் வகையில் விசேட பாடசாலை தகவல் தொழில்நுட்ப திட்டமொன்று இவ்வருடம் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் வருடமொன்றுக்கு ஒரு பில்லியன் ரூபா செலவில் 10 ஆயிரத்துக்கு அதிகமான கணினிகள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.
முதன் முதலில் இத்திட்டம் பதுளை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும். வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ள இவ்வேலை திட்டத்திற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கல்வியமைச்சு, தொலைத் தொடர்புகள் அமைச்சு, ஜனாதிபதி செயலகம் ஐ. சி.ரி.ஏ. நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து பாடசாலை மாணவர்களுக்கென முன்னெடுக்கப்படவிருக்கும் மேற்படி தொழில்நுட்ப திட்டத்திற்கான அனைத்து நிதியுதவிகளையும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பொறுப்பேற்றிருப்பதாகவும் அதன் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
பாடசாலை மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் 2013 ஆம் ஆண்டிலிருந்து தரம் 6 முதல் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தொழில்நுட்பத்தினை கட்டாய பாடமாக்கும் யோசனையை கல்வியமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்திருப்ப தாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கணினி மற்றும் இணைய வசதிகளை பெற்றுக்கொடுக்கவுள்ளோம். இதற்கென இது வரையில் எவ்வித தொழில்நுட்ப வசதிகளுமே இல்லாத பாடசாலைகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அப்பாடசாலைகள் அங்கிருக்கும் வளங்கள், மாணவர் எண்ணிக்கை தொடர்பில் மாவட்ட செயலகங்கள் தோறும் தற்போது மீள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறதெனவும் அவர் கூறினார்.
மாவட்டமொன்றிற்கு 500 முதல் ஆயிரம் வரையிலான கணினிகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன. இவற்றின் எண்ணிக்கை தேவையை பொறுத்து வித்தியாசப்படலாம்.
கொழும்பு மற்றும் அதனை அண்டியநகர் பிரதேசங்களில் ஏற்கனவே தொழில்நுட்பம் ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது. எனவே இத்திட்டத்தின் கீழ் இதுவரை எவ்வித தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத கிராமிய மற்றும் மலைநாட்டு பாடசாலைகளுக்கென இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிறந்த பயிற்றுவிப்பாளர்கள் இல்லாத பாடசாலைகளில், தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் அம்மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கும் கணனிப் பயிற்சிகளை வழங்க ஐ.சி. ஏ. நிறுவனம் முன்வந்துள்ளது.
இதற்கான நிதி ஒதுக்கீட்டினை மேற்கொள்ள தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தயாராகவுள்ளதெனவும் அதன் பணிப்பாளர் நாயகம் கூறினார்.
இவ்வருடத்திற்கான சர்வதேச தொலைத் தொடர்புகள் தினத்தின் தொனிப் பொருள், தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்தில் பெண்கள் மற்றும் யுவதிகள் என்பதாகும். எம்மிடம் மிகவும் குறைந்தளவிலான வளங்களே உள்ளன.
இதனை பெண்களுக்கு மட்டுமென மட்டுப்படுத்தாது அனைத்து மக்களுக்கும் பரந்தளவிலான ‘ப்ரோட் பேண்ட்’ வசதி பெற்றுக் கொடுக்கும் வகையில் நாம் செயற்படுகிறோம். அந்த வகையில் பாடசாலை மாணவர்களே இதற்கான அடிப்படையெனவும் அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்திற்காக நாம் ஒதுக்கீடு செய்யும் நிதி பொது மக்களின் பணம். இது சரியான முறையில் மாணவர்களை சென்றடைகிறதா என்பது குறித்து, இத்திட்டம் அறிமுகப்படுத்தும் பாடசாலைகள் தோறும் கண்காணிக் கப்படும். இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளை கல்வியமைச்சு ஜனாதிபதி செயலகத்துடன் ஒன்றிணைந்து முன்னெடுக்குமெனவும் அவர் உறுதியாக கூறினார்.
Leave a comment