‘கோல் பேஸ்’ இல் தொடரும் இராணுவ ஒத்திகை நிகழ்வுகள் (படங்கள்)

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இம்மாதம் 18ஆம் திகதியுடன் மூன்று வருடங்களாகின்றன. இதற்கான வெற்றிக் கொண்டாட்ட ஏற்பாடுகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகின்றது.

இந்தநிலையில்,நேற்று கொழும்பு காலி முகத்திடலில் படையினரின் பிரதான அணிவகுப்பு நிகழ்வுக்கான ஒத்திகைகளும் இடம்பெற்று வருகின்றன.

படையினரின் ஒத்திகை நடவடிக்கைகளுக்காக 13ம் நாள் தொடக்கம் 19ம் நாள் வரை காலிமுகத்திடல் வீதி போக்குவரத்திற்காக மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்குகின்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டதை குறிக்கும் முகமாக இடம்பெறும் இராணுவத்தின் மூன்றாவது வெற்றி விழாவில் முப்படைகளிலிருந்தும் 13 ஆயிரத்து 679 வீரர்கள் அணிவகுப்பில் கலந்து கொள்ள உள்ளதுடன் 32 தாக்குதல் விமானங்களின் சாகசங்களும் 72 தாக்குதல் கப்பல்களினதும் விசேட கண்காட்சியும் இடம்பெறவுள்ளது.கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெறும் இந்த நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசேட உரையினை நிகழ்த்த உள்ளார். அத்துடன் வெளிநாடுகளின் இராஜதந்திரிகளுக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் இராணுவப் பேச்சாளர் பிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவிக்கையில், எதிர்வரும் சனிக்கிழமை 19 ஆம் திகதி விடுதலைப்புலிகளுடனான மூன்றாவது வெற்றி விழாவை இராணுவம் கொண்டாடுகின்றது.

சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் மேற்படி விழாவில் உயர்நிலை இராணுவ அதிகாரிகள் 852 பேரின் தலைமையில் 12 ஆயிரத்து 827 முப்படைகளையும் சார்ந்த வீரர்கள் அணி வகுப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன் வன்னியில் பயன்படுத்தப்பட்ட 148 தாக்குதல் வாகனங்கள் அணிவகுப்பில் கலந்துகொள்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடற்படையினரினதும் விமானப் படையினரதும் சாகச நிகழ்வுகள் பொதுமக்களின் பார்வைக்காக நிகழ்த்தப்படவுள்ளன.

கிழக்கில் ஆரம்பிக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் முறைக்கு அமைவாகவே படைப் பிரிவுகளின் அணி வகுப்புகளும் இடம்பெற உள்ளன. அங்கவீனமான 175 வீரர்களும் அணிவகுப்பில் கலந்துகொள்ளவுள்ளனர் எனக் கூறினார்

Published by

Leave a comment