இறந்த கோழிகள் மற்றும் பழுதடைந்த உணவுகளை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை

இன்று காலை ஏறாவூரில்  சுகாதார உத்தியோகத்தர்களின் திடீர் பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம். தாரிக்கின் ஆலோசனையின் பேரில் இடம்பெற்ற இத் திடீர் சுற்றிவளைப்பில் மேற்பார்வைச் சுகாதாரப் பரிசோதகர் எம்.எச்.எம். பழீல் சுகாதாரப் பரிசோதகர்களான எஸ். சந்திரசிறி, யூ.எல். முஹம்மட் ஜின்னா ஆகியோரும் பங்கெடுத்திருந்தனர்.

உணவகங்கள், பலசரக்குக் கடைகள், பூட் சிற்றிகள், இறைச்சி விற்பனை நிலையங்கள் என்பனவற்றில் இந்தத் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது மனிதப்பாவினைக்கு உதவாத பழுதுபட்டுப்போன சோறு, இடியப்பம், பராட்டா, மீன், இறைச்சி, விற்பதற்குத் தயாராக வைத்திருந்த இறந்த கோழி, என்பன கைப்பற்றப்பட்டன.

இன்றைய தினமே ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குற்றத்தை ஒப்புக் கொண்ட ஹோட்டல் உரிமையாளர்கள் மூவருக்கு தலா ஆறாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரலிப்புத்தன்மையுடன் கூடிய பிஸ்கட்டுக்களை விற்பனை செய்ததை அரசாங்கப் பகுப்பாய்வுத் திணைக்களம் உறுதிப்படுத்தியதை அடுத்து பலசரக்குக்கடை உரிமையாளர் ஒருவருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட வேளையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதனால் ஆறாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

இறந்த கோழிகளை விற்பனை செய்ய முயற்சி செய்த இரு நபர்களுக்கு தலா பன்னிரெண்டாயிரம் ரூபாய் செலுத்துமாறு நீதிவான் ஆணை பிறப்பித்தார்.

மனிதப் பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த ஒரு ஹோட்டல் உரிமையாளர் நீதிமன்றத்தில் பிரசன்னமாகாததால் அவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

Published by

Leave a comment