1000 பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டம்

 வறிய மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்

-கல்வி அமைச்சர்:

ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்படும் 50 மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றை அறிமுகப்ப டுத்துவது தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்ப ட்டிருப்பதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இப்புலமைப் பரிசில்களை வழங்கவென பல புண்ணியவான்கள் முன்வந்துள்ளார்களெனவும் அமைச்சர் கூறினார். இப்புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் தனவந்தர்களால் முழுமையான கல்வி நடவடிக்கைகளுக்குமென பொறுப்பேற்கப்படுவர். இம்மாணவர்கள் ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வரும் ஹோமாகம பிட்டிபான மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

இவர்களுக்கான தங்குமிட வசதி உணவு உட்பட கல்வி நடவடிக்கைகளுக்கான அனைத்து செலவீனங்களையும் மேற்படி தனவந்தர்கள் பொறுப்பேற்க முன்வந்துள்ளரெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் சீரான கல்வியை பெற்றுக் கொடுக்க வேண்டுமெனும் ஒரே நோக்கிலேயே ஒரு பிரதேச செய லாளர் பிரிவிற்கு ஆகக் குறைந்தது மூன்று பாடசாலைகள் வீதமாக ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆதர்ஷ புருஷர்களை உருவாக்கும் விதத்தில் முதற்கட்டமாக 50 மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில் திட்டத்தினை வழங்குவது குறித்தே ஆராயப்பட்டு வருகிறதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த கல்வியில் அதிக ஆர்வம் கொண்ட மாணவர்களே இதற்காக தெரிவு செய்யப்படுவர். மாவட்டத்திற்கு இரண்டு மாணவர்கள் வீதம் 25 மாவட்டங்களிலிருந்தும் 50 மாணவர்கள் இப்புலமைப் பரிசிலை பெற்றுக் கொள்வர்.

பொறுப்பேற்கப்படும் மாணவர்கள், வெற்றிகரமாக தமது பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டதன் பின்னர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவரென்ற உறுதி மொழியுடனேயே பெற்றோரிடமிருந்து தனவந்தர்களால் பெற்றுக் கொள்ளப்படுவர்.

பெற்றோரின் பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மாத்திரம் அமைச்சின் தலையீட்டினூடாக புண்ணியவான் ஒருவரிடம் ஒப்படைக்கப்படுவரென்பதனை நான் பெற்றோரிடம் கூறிக் கொள்ள விரும்புகிறேன் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது போல பல புண்ணியவான்கள் ஏழை சிறுவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை வழங்க முன்வரும் பட்சத்தில் நாளடைவில் திட்டத்தை பாரியளவில் விஸ்தரிக்க முடியும்.

இப்புலமைப்பரிசிலினை வழங்குவதற்காக மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தில் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி வளத்தில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Published by

Leave a comment