நேபாளத்தின் வடக்கே விமானநிலையமொன்றில் தரையிறங்க முற்பட்ட விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 21 பேரில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிர்தப்பிய 6 பேரும் போக்கரா நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களில் பலர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மத யாத்திரிகளுக்கான தலமான ஜொம்சொம் விமானநிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது, அக்னி எயார் பளேன் நிறுவனத்தின் இந்த விமானம் மலைப்பாங்கான பகுதியொன்றின்மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
போக்கரா நகரிலிருந்து 18 பயணிகள் மற்றும் 3 பணியாளர்களுடன் இந்த விமானம் ஜொம்சொமுக்கு பயணித்துள்ளது.
13 இந்திய பயணிகளும் 2 நேபாள விமானிகளும் விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் முக்கிய யாத்திரை தலமாக விளங்கும் ஜொம்சொம் பகுதியில் அமைந்துள்ள முக்திநாத் கோவிலுக்கு சென்ற இந்தியர்களே இந்த விமானத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
உள்ளூர் நேரம் 9.45 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கடந்த ஆண்டிலும் தலைநகர் காத்மண்டுவுக்கு வெளியே, எவரெஸ்ட் மலைப்பகுதியை பார்க்கச் சென்ற பயணிகள் 19 பேர் விமான விபத்தில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment