‘கோல் பேஸ்’ சதுக்கத்தில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது.

எதிர்வரும் மே 19ஆம் திகதி காலி முகத்திடலில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கலந்து கொண்டு பிரமாண்ட அணிவகுப்பைப் பார்வையிடுவார். இதற்கான பிரமாண்டமான இராணுவ மற்றும் இராணுவத்தளபாட அணிவகுப்பு ஒத்திகைகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அரசாங்கம் வெற்றியீட்டி மூன்றாண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, சுமார் 13 ஆயிரத்துக்கும் அதிகமான படையினர பங்கேற்கும் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு நிகழ்வுக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த அணிவகுப்பில் இலங்கையின் முப்படைகள் மற்றும் காவல்துறை, சிவில் பாதுகாப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 852 அதிகாரிகள் மற்றும் 12 828 படையினர் பங்கேங்கவுள்ளனர்.

இந்த இராணுவ அணிவகுப்புக்கு மேஜர் ஜெனரல் ஜெகத் ரம்புக்பொத்த தலைமை வகிப்பார். பாதுகாப்புச் சேவைகள் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் தளபதியான இவர், போரின் போது 56வது டிவிசனின் தளபதியாக இருந்தவராவார்.

இந்த அணிவகுப்பில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 398 அதிகாரிகள் மற்றும் 4628 படையினரும், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 115 அதிகாரிகள் மற்றும் 2651 படையினரும், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 78 அதிகாரிகள் மற்றும் 1383 படையினரும், சிறப்பு அதிரடிப்படை உள்ளிட்ட காவல்துறையைச் சேர்ந்த 61 அதிகாரிகள் மற்றும் 963 காவலர்களும், குடிமக்கள் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 30 அதிகாரிகள் மற்றும் 462 படையினரும், 115 மாற்றுத் திறனாளிகளான படையினரும் பங்கேற்கவுள்ளனர்.

சமிக்ஞை, பொறியியல், காலாற்படை, இயந்திரப் பொறியியல், மற்றும் சிறப்புப் படைப்பிரிவுகளின் 148 வாகனங்கள் இலங்கை இராணுவத்தின் சார்பில் அணிவகுப்பில் இடம்பெறவுள்ளன.

இலங்கை விமானப்படையின் 23 அதிகாரிகள் மற்றும் 167 விமானப்படையினருடன் 33 விமானங்களும், உலங்குவானூர்திகளும் வானில் அணிவகுக்கவுள்ளன.

இலங்கை கடற்படையின் சயுர, சமுத்ர, சுரனிமல, நந்திமித்ர, ரணஜய, சாந்தி உள்ளிட்ட போர்க்கப்பல்களும், 12 அதிவேகத் தாக்குதல் படகுகள் உள்ளிட்ட 72 போர்க்கலங்களும் அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளன.

இலங்கை கடற்படையின் 147 அதிகாரிகளும் 1574 மாலுமிகளும் இந்தக் கடல் அணிவகுப்பில் கலந்து கொள்வர். இதற்கிடையே, இந்த இராணுவ அணிவகுப்புக்கான ஒத்திகைகள் நடைபெறுவதால், இன்று தொடக்கம் காலி முகத்திடல் பகுதியில் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.

காலிமுகத்திடல் சுற்றுவட்டத்திற்கும் பழைய நாடாளுமன்றக் கட்டடத்துக்கும் இடையிலான வீதி இன்று தொடக்கம் வரும் 18ம் நாள் வரை காலை 6.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை அவ்வப்போது மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment