இலங்கையர்களுக்கு தொடர்ந்தும் அதிக வேலை வாய்ப்புக்களை வழங்க இத்தாலி, ஈராக், குவைத் மற்றும் தென் கொரிய அரசாங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளனவென வெளிநாட்டு வேலைவாய்ப்பு நலனோம்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
இதற்கென, மேற்படி நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தங்கள் நீடிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் டிலான் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இலங்கை ஆண்களுக் கென அதிக வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும் அதிக சம்பளத்துடன் கூடிய தொழில்களுக்கு இலங்கையர்களை அமர்த்துவது தொடர்பிலும் அந்நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
வெளி நாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களின் நலன்புரியினை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைச்சர் டிலான் பெரேரா தலைமையில் ஜோர்தான் நாட்டின் “அம்மான்” நகரில் இருநாள் உத்தியோகபூர்வ மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இம் மாநாட்டில் அபுதாபி, ஓமான், குவைத், பஹரேன், மலேசியா, சிங்கப்பூர், சவூதி அரேபியா, கட்டார், லெபனான், சைப்பிரஸ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் இலங்கை தூதுவர்கள், நலன்புரி நிலைய அதிகாரிகள், ஐ. எல். ஓ. மற்றும் ஐ. ஓ. எம். ஆகிய சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
பொதுவாக வெளிநாட்டு வேலைவாய்ப் புக்கென இலங்கையிலிருந்து பெண்களே அதிகமாக வேலைக்கமர்த்தப்படுகின்றனர். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்களே அதிகளவில் செல்கின்றனர். இந் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஆண்களுக்கும் வெளிநாடுகளில் அதிக வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதே மஹிந்த சிந்தனையின் கொள்கையாகும்.
அந்த வகையில், இத்தாலி, ஈராக், குவைத் மற்றும் தென்கொரிய நாடுகளில் இலங்கை ஆண்ளுக்கும் அதிகளவிலான வேலை வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்பட வுள்ளன.
இதேவேளை, வீட்டுப் பணிப்பெண் தொழிலுக்கும் மேலதிகமாக அதிக சம்பளத்துடன் கூடிய தாதியர், தாதி உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொள் வது தொடர்பிலும் அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இதன் கீழ், முதற் கட்டப் பேச்சுவார்த்தை விரைவில் ஓமான் நாட்டில் நடத்தப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வருடந்தோறும் எமக்கு கிடைக்கும் வெளிநாட்டு அந்நிய செலாவணியின் தொகை அதிகரித்துச் செல்கின்றது. 2011 ஆம் ஆண்டில் 5.1 பில்லியன் டொலர் எமக்கு அந்நிய செலாவணியாக கிடைத் துள்ளது. உலக நாடுகளுக்கு வருடந்தோறும் 450 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணி கிடைக்கின்றது. இதில் 5 பில்லியன் இலங்கை தனக்கு உரித்தாக்கியுள்ளது. பிலிப்பைன்ஸ் வருடந்தோறும் 19 பில்லியன் அந்நிய செலாவணியை பெறுவது குறிப்பிடத்தக்க தெனவும் அமைச்சர் கூறினார்.
Leave a comment