இங்கிலாந்து பிரிமியர் லீக்: 44 வருடங்களின் பின் மன்செஸ்டர் சிட்டி சம்பியன்

சமபுள்ளிகளைப் பெற்றும் மன்செஸ்டர் யுனைடட் 2ம் இடம்:    

லிவர்பூல், செல்சி பின்னடைவு: நியூகாஸ்டில் முன்னேற்றம்

-MJ
இங்கிலாந்து மக்களையும் உலக இரசிகர்களையும் உதைப்பந்தாட்டத்தால் வருடந்தோரும் மகிழ்ச்சிப்படுத்திவரும் இங்கிலாந்தின் பிரிமியர் லீக் (EPL – BARCLAYS PREMIER LEAGUE) நேற்று 13-05-2012 ஞாயிறுடன் இவ்வருடத்துக்கான சுற்று (2011-2012) முடிவுக்கு வருகின்றது.

இங்கிலாந்தின் பலம் பெரும் கழகமும் உலகின் 660 மில்லியனுக்கு மேல் இரசிகரகளைக் கொண்டமைந்த இங்கிலாந்தின் வரலாற்று சிறப்பு மிக்க கழகமும் உலககின் முன்னணிக் கழகங்களுள் ஒன்றுமான மன்செஸ்டர் யுனைடட், இம்முறை தனது 20வது வெற்றியை நிலைநாட்டி இங்கிலாந்தின் பிரிமியர் லீக் வரலாற்றில் 20வது வெற்றியைப் பெற்று, வரலாறு படைக்கும் என்றே இங்கிலாந்து மக்களும் மன்செஸ்டர் யுனைட்டட்டின் உலக இரசிகர்களும் எதிர்பார்த்திருந்தனர். சென்ற மாதம் 8 மேலதிகப் புள்ளிகளைப் பெற்று முன்னணியில் இருந்த மன்செஸ்டர் யுனைட்டட், எதிர்பாராத இரு தோல்விகளாலும் ஒரு சமனான முடிவைக்கொண்ட போட்டியாலும் இன்று தனது இலட்சியத்தை நிலைநாட்டத் தவறியிருக்கிறது.

1968ம் வருடம் மன்செஸ்டர் சிட்டி தனது கண்ணி வெற்றியைப் பெற்றிருந்தது. அதன்பின்னர் சோபிக்கத் தவறிவந்த இக்கழகம் 2008 ஆம் ஆண்டுக்குப்பின்னர் மீண்டும் பேசப்படக்கூடிய ஓர் அணியாக  இருந்து வந்தது.

எனினும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வந்த இக்கழகத்தை இந்த அளவுக்கு கொண்டுவந்ததில் புகழுக்குரிய ஒருவர்தான் இக்கழகத்தின் தற்போதைய உரிமையாளர் செய்ஹ் மன்சூர் பின் சயிட் எனப்படும் ஓர் அறபி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 1970 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் அபுதாபியில் பிறந்த இவர் ஒரு அரச பரம்பரையைக் கொண்டவர். எண்ணெய் பொருளாதாரம், ஸ்கை (SKY) செய்தி ஊடகப்பிரவு (அரபு), இன்னும் பல பொருளாதார துறைகளுக்குச் சொந்தக்காரர். சுமார் 500 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களை வீசி எறிந்து இக்கழகத்தை தன்வசம் கொண்டுவந்தார். உலகின் முன்னணி வீரர்களை பணத்துக்குப் பேரம் பேசி தன் கழகத்தில் இணைய அழைப்பு விடுத்தார். குறிப்பாக ஆர்ஜன்டீனா நாட்டின் தேசிய வீரர்கள் சுமார் 5 வீரர்கள் இக்கழகத்தில் இடம்பெற்றிருப்பதும் முக்கிய விடயம்.

மன்செஸ்டர் நகரில் இரு துருவங்களாக விளங்கும் யுனைட்டட்-சிட்டி ஆகிய இருக கழகங்களுக்கும் ஆரம்பம் முதல் இன்றுவரை போட்டிகளும் சவால்களும் நிறைந்தே வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் பிரிமியர் லீக் வரலாற்றில் மன்செஸ்டர் யுனைட்டட் மற்றும் லிவர்பூல் ஆகிய இரு கழகங்களும் இது வரை தலா 19 தடவைகள் வெற்றிக்கிண்ணங்களைச் சுவீகரித்திருக்கின்றன. இம்முறை 20வது வெற்றியை தக்கவைப்பதில் மன்செஸ்டர் சிட்டி பலத்த சவால்களை ஆரம்பம் முதல் மன். யுனைட்டட்டிற்கு கொடுத்து வந்ததும் கவனிக்கத்தக்கது.

எனினும் உள்நாட்டிலோ வெளிநாடுகளிலோ குறிப்பிடத்தக்க இரசிகர்களைக் கொண்டிராத மன்செஸ்டர் சிட்டி இன் புகழ் இனிமேலும் பிரகாசிக்குமா என்பது இவர்களது தொடர் வெற்றிகளிலேயே தங்கி இருக்கும்.

இதைவிட இங்கிலாந்தின் முன்னணிக் கழகங்களான லிவர்பூல், செல்சி ஆகியவை முதல் நான்கு இடங்களுக்குள் வரத் தவறி இருப்பதும், நியூகாஸ்டில் 5ம் இடத்துக்கு முன்னேறி இருப்பதும் மற்றும் ரெடிங் மீண்டும் பிரிமியர் லீக் போட்டிகளில் கலந்து கொள்ள இருப்பதும் விசேட அம்சங்களாகும். ஆர்சனல்  3ம் இடத்தைப் பெற்றிருக்கின்றது. தொட்டன்ஹம் 4வது இடத்தில் மீண்டும் வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் யூரோ கிண்ணத்துக்காக தற்பொழுது ஐரோப்பா நாடுகள் தயாராகி வருகின்றன. இத்தொடரில் பிரகாசிக்கும் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் அதிக விலைக்கு பிரிமியர் லீக் போட்டிகளுக்காக பிரபல கழகங்களால் உள்வாங்கப்படுவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

மன்செஸ்டர் சிட்டியை இந்த அளவுக்கு கடந்த 3 வருடங்களாக பாடுபட்டு புகழடைய வைத்தவர்களுள் ஒருவர்தான் இவ்ணியின் முகாமையாளர் ரொபேர்டோ மன்ஸினி. இவர் ஒரு இத்தாலியர். மூக்கில் கோபம் கொண்ட இவர் பல சிரமங்களுக்கு மத்தியில் ஓர் சரித்திரத்தைப் படைத்திருக்கின்றார். இவருக்கான சம்பளம்  மேலும் அதிகரிக்கப்படும் என மன்.சிட்டி கழகம் அறிவித்திருக்கிறது.

இரு அணிகளுமே தலா 89 புள்ளிகளைப் பெற்றிருந்தன. எனினும் கோல் வித்தியாசத்தில் மன். சிட்டி 64 உம், மன். யுனைட்டட் 56உம் கொண்டிருந்தன. புள்ளிகள் சமமானால் மொத்த கோல் வித்தியாசம் கருத்திலெடுக்கப்படும். இதன்படி இரு அணிகளும் சம புள்ளிகளைப் பெற்றும், கோல் வித்தியாசத்தில் சிட்டி முடிசூடியுள்ளது. என்றும் சவாலுடனும் விளையாடும் யுனைட்டட் அணிக்கு இது ஒரு தோல்வி அல்ல. கிண்ணம் கைநழுவிச் சென்றது. அவ்வளவுதான். ஏனெனில் இறுதிவரை அவர்களின் விளையாட்டு விளையாட்டாகவே இருக்கும். அது அக்கழகத்தின் இரகசியமும்கூட. இது உலக இரசிகர்களுக்கும் தெரிந்ததே.

என்னதான் போட்டியும் பொறாமையும் இருந்தாலும் 25 வருடங்களுக்கும் மேலாக யுனைட்டட் அணிக்கு முகாமையாளராக இருக்கும் சேர் அலக்ஸ் பேர்கிஸன், தனது எதிர்கழகமான சிட்டி இக்கு மனம் திறந்து தனது வாழ்த்தைக் கூறியிருக்கிறார். இது அவரது பெருமனதுக்கு என்றும் ஓர் எடுத்துக்காட்டாகவும் இருக்கின்றது.

Published by

Leave a comment