துபாயிலிருந்து கொழும்புக்கான உல்லாச பயணக் கப்பற் சேவை

டீத்தெம் டிரவல்ஸ் ஸ்ரீலங்கா மற்றும் ஜேர்மனியின் முன்னணி உல்லாசப் பயண நிறுவனமான FTI குழுமம் ஆகியன இணைந்து எதிர்வரும் குளிர்காலத்தில் மஸ்கட், மும்பாய், கோவா மற்றும் கொச்சி இடைத்தங்கல்களுடன், துபாய் மற்றும் கொழும்புக்கிடையிலான உல்லாசப்பயண கப்பற் போக்குவரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. இதன் மூலம் நான்கு மாத காலத்தில் கொழும்பு துறைமுகத்துக்கு ஆஸ்திரியா, ஜேர்மன் மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 4000 உயர் வாடிக்கையாளர்களை தொடர்ச்சியாக கொண்டு வரும் முதலாவது உல்லாசப் பயண கப்பற் சேவையாக பிஹியி FTI BERLIN காணப்படும்.

ஹேமாஸ் ஹோல்டிங்சின் இணை நிறுவனமான டீத்தெம் டிரவல் ஸ்ரீலங்காவின் தலைவர் அப்பாஸ் யூசுப்அலி, இலங்கையின் உற்சாகமாக வளர்ந்து வரும் உல்லாசப் பயணத்துறைக்கு இந்தக் கப்பற் சேவை சிறப்பானது எனத் தெரிவித்தார். “அதிக செலவு செய்யும் உல்லாசப் பயணிகளை கொண்டு வரும் ஒரு சிறப்பான திட்டம் இதுவாகும். உயர் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதனால், சாதாரண பத்திக் விற்பனையாளர்கள், முகமூடி விற்பனையாளர்கள் முதற்கொண்டு கொழும்பின் உணவு விடுதிகள் மற்றும் நாடு முழுவதுமுள்ள நட்சத்திர தரம்மிக்க ஹோட்டல்களை உள்ளடக்கிய எமது உல்லாசப் பயணத்துறைக்கு இது இன்றியமையாததாகும். நீண்டகால அடிப்படையில் இது உல்லாசப் பயணத்துறைக்கு நன்மைகளை வழங்கும். இது இத்துறையை ஊக்குவிப்பது மாத்திரமல்லாது, இலங்கையை சர்வதேச ரீதியில் அழகான இடமாக வெளிக்கொணரும்” என்றார்.

Published by

Leave a comment