PMGGயின் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை பற்றிய அறிவித்தலை ஜும்ஆவின் பின்னர் அறிவிப்பு செய்வதற்கு சம்மேளனத் தலைவர் மறுப்பு

தம்புள்ளை பள்ளிவாயல் விவகாரம் தொடர்பாக PMGG தொடங்கி வைத்துள்ள கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை பற்றிய அறிவிப்புகளைச் ஜும்ஆ தொழுகையின் பின்னர் அறிவிப்பு செய்வதற்கு சம்மேளனத்தின் தலைவர் அனுமதி வழங்க மறுத்துள்ளார்.

தம்புள்ளை ஹைரிய்யா ஜும்ஆ பள்ளிவாயல் சம்பவம் நடைபெற்று சரியாக மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் பள்ளிவாயலுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கைகளோ அல்லது அப்பிரச்சினையை நியாய பூர்வமாக தீர்ப்பதற்காக எவ்வித காத்திரமான நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படாத நிலையில் இது பற்றிய பொதுமக்களின் கண்டனத்தினையும், கோரிக்கையையும் ஜனாதிபதிக்கு பொதுமக்களின் கையெழுத்துக்களுடன் அனுப்பிவைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை PMGG இன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஆரம்பித்து வைத்தது. ஜும்ஆ தொழுகைக்கு வருகை தந்த பொதுமக்களிடமிருந்து கையெழுத்துக்களைப் பெறுவதற்கான PMGGயின் வேண்டுகோள் துண்டுப்பிரசுரம் ஒன்றின் மூலமாக பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டது. இது பற்றிய அறிவித்தல் ஒன்றினை ஜும்ஆ தொழுகையின் பின் செய்வதற்கான ஏற்பாடுகளை PMGG மேற்கொண்டிருந்தது. இதற்கான அனுமதியினை சம்மேளனத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக முயற்சிக்கப்பட்டபோது சம்மேளனத்தின் செயலாளரும், பிரதி செயலாளரும் இன்றைய தினம் காத்தான்குடியில் இல்லையென தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்மேளனத்தின் தலைவர் MIM. சுபைர் (CC) இடமிருந்து இந்த அனுமதியை பெற முயற்சிக்கப்பட்டபோது அதனை அவர் நிராகரித்துருக்கிறார். அனுமதிகோரும் கடிதம் உரிய நேர கால அவகாசத்துடன் கிடைக்கவில்லை எனவும், கையெழுத்துத் திரட்டும் இம்முயற்சி ஒரு அரசியல் குழுவினரால் மேற்கொள்ளப்படுவதனால் ஏனைய உறுப்பினர்களுடன் தாராளமாக கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே அனுமதி வழங்குவது பற்றி தீர்மானிக்க முடியும் என்ற காரணத்தைக் காட்டியே இந்த அனுமதியை வழங்குவதற்கு சம்மேளனத் தலைவர் மறுத்துள்ளதாக PMGGக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அரசியல் தரப்புக்கள் பள்ளிவாயலில் தமது நிகழ்வுகள் தொடர்பாக அறிவிப்பு செய்ய முற்படும்போது இவ்வாறான நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பதும், அவர்களுக்கு அனுமதிகள் தாராளமாகவே வழங்கப்பட்டுள்ளன என்பதும் தமது கடந்த கால அனுபவங்களாகும். மாத்திரமன்றி தேர்தல் பிரச்சாரத்தோடு தொடர்புபட்ட நடவடிக்கைகளுக்காகக்கூட அறிவிப்புக்களைச் செய்வதற்கு பள்ளிவாயல் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதும் கடந்த கால உண்மைகளாகும். இந்நிலையில் PMGGயின் அறிவிப்புக்கு அனுமதி வழங்குவதற்கு சம்மேளனத் தலைவர் மறுத்துள்ளமையானது ஒரு தெட்டத் தெளிவான அரசியல் பக்கச் சார்பு நடவடிக்கையாகவே கருத வேண்டி இருக்கிறது.

அண்மையில் ஜெனீவா விவகாரத்தின்போது பிரதேச அரசியல்வாதி ஒருவரின் வேண்டுகோளுக்கு அமைய கடையடைப்பு ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளனம் அழைப்பு விடுத்திருந்தமை மற்றும் தம்புள்ளை விவகாரத்தின்போது அதனை கண்டிக்க வேண்டுமென பெரும்பான்மையான சம்மேளன உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்த வேளையில் அதனை நிராகரித்திருந்ததும் இங்கு நினைவூட்டப்படவேண்டிய சம்பவங்களாகும்.

-pmgg.org

Published by

Leave a comment