தகவல் தருமாறு பொலிஸார் கோரிக்கை
ஐந்து ரூபா நாணயக் குற்றிகளைப் பயன்படுத்தி தங்கச் சங்கிலிக்குச் சமனான சங்கிலிகளைத் தயாரிப்பது தொடர்பான தகவல்கள் அறிந்திருப்பின், உடனடியாக பொலிஸ் திணைக்களத் தின் போலி நாணயம் தொடர்பான விசேட பிரிவுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கொழும்பு பஸ்தரிப்பு நிலையங்கள் முதல், நடைபாதைவரையில் 5 ரூபா நாணயக் குற்றிகளில் தயாரிக்கப்பட்ட சங்கிலிகள் எனக் கூவியவாறு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். கண்டி பல்லேகல பகுதியில் இந்தச் சங்கிலிகள் தயாரிக்கப்படுவதாகக் கூறுவதுடன், இவை கறுப்பதில்லை.
சுறண்டினாலும் மினுமினுப்பு போவதில்லை எனக் கூவியவாறும், கத்தியினால் சுரண்டியும் காண்பிக்கின்றனர்.
நாணயக் குற்றிகளை, நாணயத் தாள்களை சேதப்படுத்தல் மற்றும் அழித்தல் திறைசேரியின் சுற்றுநிருபத்தின் படி குற்றச் செயலாகும் அத்துடன் இது தண்டனைக்குரிய குற்றமுமாகும். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹனவிடம் தினகரன் கேட்டபோது, நாணயக் குற்றிகளை அழித்து, சங்கிலிகள் தயாரிப்பது தொடர்பான தகவல்கள் தெரிந்திருப்பின் உடனடியாக அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
-Thinakaran
Leave a comment