குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்து கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண்களைத் தலைமையாகக் கொணட குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துதல், அவர்களுக்கான தொழில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்திற்கும் கொழும்பு அபேக்சா நம்பிக்கை நிதியத்தினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை காலை கல்லடியில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் முன்னாள் செயலாளர் மாமாங்கராஜாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச் சந்திப்பில், அபேக்சா நம்பிக்கை நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நில்கான் டி மெல், டிவா ஆனல்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இணையத்தின் சார்பில், இணையத்தின் தலைவர் ஏ.செல்வேந்திரன், உப தலைவர் கமல்தாஸ், செயலாளர் ரமேஸ்காந், பிரதிச் செயலாளர் சள்மா ஹம்சா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களில் பல்வேறுபட்ட பிரச்சினைகளும் ஆராயப்பட்டது. அதில், அவர்களின் நிரந்தர வருமானத்தினை உறுதிப்படுத்தும் வகையில் தொழில்களை ஏற்பாடு செய்தல், வாழ்வாரார மற்றும் வாழ்விடத்தினை உறுதிப்படுத்துதல் தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்பட வேண்டிய விதம் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதேவேளை, 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள விதவைகளை பிரதானப்படுத்தி சிறு கைத்தொழில் பேட்டைகளை நிறுவுதல், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டு முரண்பாடுகள், உள்ளூர் நிறுவனங்களின் செயற்திட்டங்கள் உள்ளிட்ட பலவிடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

Published by

Leave a comment