ஜோர்தான் அரசுடன் இலங்கை நேரடி பேச்சுவார்த்தை
உரிய தீர்வின்றேல் பணிப்பெண்களை அனுப்புவதற்கு தடை
ஜோர்தானில் பணிபுரியும் இலங்கைப் பணிப் பெண்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்பது குறித்து அடுத்த வாரம் ஜோர்தானுக்கு சென்று பேச்சு நடத்த உள்ளதாகவும் இதற்கு தீர்வு ஏற்படாவிடின் ஜோர்தானுக்கு பணிப்பெண்கள் அனுப்புவதை தடை செய்ய உள்ளதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலனோம்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். வாய்மூல விடைக்காக ரஞ்சன் ராம நாயக்க எம்.பி.எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜோர்தானில் இலங்கைப் பணிப் பெண்கள் தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடி குறித்து எழுப் பப்பட்ட கேள்விக்கும் பதிலளித்தார்.
ஜோர்தானில் சகல தொழில்களுக்கும் பிரச்சினை எழவில்லை. பணிப் பெண்கள் தொடர்பிலே பிரச்சினை காணப்படுகிறது. இதற்கு முன்னரும் பணிப்பெண்கள் தொடர்பிலான பிரச்சினை ஏற்பட்டபோது அங்கு பணிப்பெண்கள் அனுப்புவதை இடை நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் அங்கு பணிப்பெண்களை அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
200 க்கும் அதிகமான இலங்கைப் பணிப் பெண்கள் ஜோர்தான் தூதரகத்தில் உள்ளனர். இவர்களுக்கு உணவு மற்றும் வசதிகள் வழங்கப்படுவதில்லையென எதிர்க் கட்சி முன்னெடுத்த பிரசாரம் பொய் என்பது பின்னர் உறுதியானது. இவர்களில் 30 பேர் கடந்த மாதம் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டனர். மேலும் 26 பேரை தொழில் அமைச் சினூடாக தருவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூதரகத்தில் தங்கியுள்ளவர்கள் சிறப்பாக கவனிக் கப்படுகின்றனர்.
ஜோர்தான் பணிப்பெண்கள் பிரச்சினை குறித்து கடந்த மாதம் நான் ஜோர்தான் தொழில் அமைச்சருடன் பேசினேன். கடந்தவாரம் இலங்கையில் மீண்டும் பேச்சு நடத்த இருந்தாலும் அந்த சந்திப்பு இடம்பெறவில்லை. அடுத்த வாரம் நான் ஜோர்தான் அதிகாரிகளுடன் இந்த பிரச்சினை குறித்து பேச்சு நடத்த உள்ளேன். இதில் தீர்வு ஏற்படாவிட்டால் ஜோர்தானுக்கு பணிப் பெண்கள் அனுப்புவது தடை செய்யப்படும். இந்த பிரச்சினை தொடர்பில் எமது அமைச்சு முழுமையான தலையீடு செய்யும்.
-Thinakaran
Leave a comment