ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதான அபிவிருத்தி: ஓர் பார்வை: (படங்கள்)

-படங்கள்: MTM. ரஸ்லான்

படத்தினைப் பெரிதாகப் பார்ப்பதற்கு படத்தின் மேல் ‘கிளிக்’ செய்யவும்

காத்தான்குடியின் மத்தியில் அமைந்திருக்கும் ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானம் சுமார் 30 வருட வரலாற்றைக் கொண்டமைந்த ஓர் மைதானமாகும்.

1980களின் ஆரம்ப காலங்களில் காத்தான்குடியின் பிரதான இரு கால்வாய்களுக்கிடையில் புற்புதர்களாக அமைந்து குப்பை மேடாகவும் குழிகளாகவும் காட்சியமைந்த இம் மைதானம் அன்றைய உதைப்பந்தாட்ட விளையாட்டு வீரர்களினது  வேண்டுகோளுக்கிணங்க அப்போது பிரதி அமைச்சராக இருந்த மர்ஹூம் டொக்டர் அகமட் பரீட் மீராலெவ்வை (பா.உ.) அவர்களால் அரசிடம் இருந்து இக்காணியை கொள்வனவு செய்து விளையாட்டு வீரர்களுக்கான பரீட் பொது விளையாட்டு மைதானம் என 1985களில் இம்மைதானம் உத்தியோகபூர்வமாக அமைக்கப்பட்டு,  போட்டிகளும் நடைபெற்று வந்தன. இதற்கு முன்னர் சக்கிலிய வெட்டை எனவும் பொதுமைதானம் எனவும் அழைக்கப்பட்டு வந்த இம்மைதானம் 1998-1999 காலப்பகுதியில் மீண்டும் ஓர் அபிவிருத்திக்கு உள்ளாக்கப்பட்டது.

அப்போதைய பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதி அமைச்சராகவும் இருந்த எம்.எல்ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் (பா.உ.) அவர்களால் இம்மைதானம் புணரமைக்கப்பட்டது. எனினும் இம்மைதானத்தை அப்போது தொட்டுப்பார்க்காமல் ஓர் பார்வையாளர் அரங்கையும் ஓர் விருந்தினர் அரங்கையும் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் அமைத்து கொடுத்திருந்தார்.

எனினும் விருந்தினர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த அரங்கில் சில வசதி வாய்ப்புக்களும் செய்யப்பட்டிருந்தன. எனினும் இவ்வரங்கை (கட்டடத்தை) பராமரிக்கத் தவறியதால் அங்கிருந்த சில பொருட்கள் களவாடப்பட்டன. ஓர் பிரயோசனமற்ற முறையில் இவ்வரங்கு கட்டப்பட்டிருந்தது விளையாட்டு வீரர்களுக்கும் இரசிகர்களுக்கும் தெரிந்த விடயமாகும்.

கடற்கரை வீதியும் ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதான வீதியும் இணையும் சந்தியில் ‘ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு அரங்கு’ எனும் வரவேற்பு கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இரும்பைக் கொண்டு அமைக்கப்பட்ட இக்கோபுரம் பல வருடங்களாக துருப்பிடித்து,  எப்போது விழும் என்ற அர்த்தமற்ற நிலையில் காணப்பட்டது. இரும்பு கொள்வனவு செய்வோர் இதனை வாங்குவதற்கும் முற்பட்டிருந்தனர். இக்கோபுரத்தைச் சுற்றிலும் புற்புதர்கள் காணப்பட்டது. விசப்பாம்புகள் குடியிருக்கும் ஓர் புதராகவும் மக்களால் விசனம் தெரிவிக்கப்பட்டு வந்தது. மேலும் இவ்வீதியில் மழை காலங்களில் சுமார் 3 அடி ஆழத்திற்கு மழைநீர் நிரம்பி இருக்கும். மழை நின்றாலும் பல மாதங்கள் இப்பகுதியில் நீர் தேங்கி நிற்கும். இரவு நேரங்களில் பாம்புகளும் இந்நீருக்குள் நீந்திச் செல்வதாக பலர் கூறி வருகின்றனர்.

பொதுமைதானத்தை அபிவிருத்தி செய்யும் இத்தருணத்தில் அதனைச் சூழவுள்ள வீதிகளும் அபிவிருத்தி செய்யப்பட இருப்பதாக அறியப்படுகிறது. உண்மையில் மகிழ்ச்சியான விடயம். எனவே முதலில் வீதிகளை உயர்த்தி அமைத்துவிட்டு மைதானத்தை புணரமைக்கும் வேலையில் ஈடுபட முடியும். ஏனெனில் வீதிவழியாக வரும் மழை நீர் நேரடியாக மைதானத்துக்குள் வந்து பல மாதங்களாகத் தேங்கி நிற்பது இன்றுவரை நடந்துவரும் ஓர் விடயம். இறுதியாக நவம்பர் மாதம் விளையாடினால் பின்னர் மார்ச் மாதம்தான் அங்கு விளையாட மக்கள் போகிறார்கள்.

எப்படி இருப்பினும் விளையாட்டு மைதானத்தை சுமார்  1 அடி வரைக்கும் உயர்த்தப்பட்டு, மழைநீர் வடிகாண்கள் வழியாக ஓடக்கூடயவாறு அமைக்கப்பட வேண்டும். இல்லையேல் மீண்டும் ஓர் ஆறு போலவே இம்மைதானம் தோற்றம் பெரும். நவீன முறையில் இரவு நேரங்களிலும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறக்கூடய வகையில் மின்னொளி வசதிகள் செய்யப்பட்டால் சிறப்பாக அமையும்.  விளையாட்டுக்கு மாத்திரமன்றி இஜ்திமா, கருத்தரங்குகள் போன்ற விடயங்களுக்கும் இம்மைதானத்தை உபயோகிக்க முடியும். இதனால் நகரசபைக்கும் வருமானம் கிடைக்கும்.

நேர்மையான பராமரிப்பாளர்களைக் கொண்டு இம்மைதானம் எதிர்காலத்தில் மிளிர வேண்டும். மைதானத்தை மேலும் விளம்பரங்களால் அழகுபடுத்த தனியார் நிறுவனங்களிடம் கோரமுடியும். ஏனெனில் ஓர் மைதானத்தின் பிரதான வருமானம் விளம்பரதாரர்களில் இருந்தே உலகில் பெறப்பட்டு வருவது வழக்கமாகும்.

ஏனெனில் காத்தான்குடி விளையாட்டு வீரர்களுக்கும் இரசிகர்களுக்கும் உள்ள ஓரே மைதானம் இது ஒன்றுதான். காத்தான்குடி விளையாட்டுக் கழகம் அண்மைக்காலமாக கிரிக்கட்டில் புகழ் பெற்று வருகின்றனர். பல வெற்றிகளையும் கிண்ணங்களையும் தொடர்ச்சியாக பெற்று வருகின்றனர். இவர்களுக்கு இம்மைதானம் நிச்சயமாக உதவ வேண்டும். இதே போல் வெளிமாவட்ட கழகங்களையும் அழைத்து இம்மைதானத்தில் விசேட போட்டிகள் நடைபெற வழிவகுக்க வேண்டும்.

வரவேற்பு கோபுரமும், சுற்றுப்புற வீதிகளும் அதன் சூழலும் அழகுபடுத்தப்பட வேண்டும். அது உலகம் போற்றப்பட வேண்டும். உங்கள் பணிகள் தொடரட்டும்.. அவைகள் நிலைக்கட்டும். வாழ்த்துக்கள்.

-yourkattankudy/sports

Published by

Leave a comment