திருடர்களின் கைவரிசைகளும் கிலி கொள்ளும் பெண்களும்….

-MMS

காத்தான்குடியில் அண்மைக்காலமாக திருடர்களின் திருட்டு நடவடிக்கைகளால் குறிப்பாக பெண்களும் சிறுவர்களும் பீதியடைந்து வீட்டுக்குள் ஒழிந்து இருக்கும் பரிதாப நிலைக்கு இன்று தள்ளப்பட்டிருக்கின்றனர்.

வியாபார நிமித்தம் வெளியூர்களில் தொழில் செய்கின்றவர்களின் வீடுகளும் மற்றும் வெளிநாடுகளில் இருப்போரின் வீடுகளும் அண்மைக்காலத்தில் இவ்வாறான களவு எனும் கொள்ளையில் இலக்கு வைக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல்  ஊரிலும் தினமும் தொழிலுக்கும் உத்தியோகத்துக்கும் போய் வருவோரின் வீடுகளும் குறிப்பாக ஆண்கள் இல்லாத வீடுகளும், ஆண்களின் உதவி இல்லாத வீடுகளும் கள்வர்களின் கைவரிசைகளுக்கு இலக்குவைக்கப்பட்டு வந்துள்ளன.

பொலிசாருக்கு தெரிவித்தும் இதவரைக்கும் இக் கைவரிசையில் ஈடுபடுவோர் பிடிபட்டதாக எந்தத் தகவலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவில்லை. பறிகொடுக்கப்பட்ட பொருட்களும் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் ஏதும் இல்லை!

சென்ற வருடம் இலங்கையில் ஏற்பட்டிருந்த ‘கிறீஸ் மனிதன்’ எனும் புரட்சியால் அப்பாவி பெண்களும் சிறுவர்களும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் இருந்ததை நாங்கள் மறந்துவிட முடியாது. இதே நிலைமைதான் இன்றும் ஊரில் ஏற்பட்டிருக்கின்றது.

கலகலப்பாக 24 மணிநேரங்களும் காத்தான்குடியின் பிரதான வீதியும் உணவகங்களும் ஜொலித்துக்கொண்டிருந்தாலும் இரவு வேளைகளில் ஊரின் மூன்றின் இரண்டு பங்கு இருளில் மூழ்கி இருப்பது இக்கல்வர்களின் நடமாட்டத்திற்கு முதலாவதாக வழிசமைக்கின்றது. தெருக்களில் மின்கம்பங்கள் இருந்தாலும் அதில் இருக்கும் மின்குமிழ் எரிந்ததாக சரித்தரமே கிடையாது. அத்தெருவில் இருக்கும் மக்களுக்கும் இதைப்பற்றிய அக்கரை இருப்பதில்லை.

காத்தான்குடியின் ஒவ்வொரு பகுதிக்கும் ஆகக் குறைந்தது 3 பள்ளிகளாவது இருக்கும். அதில் ஒரு ஜூம்ஆ பள்ளி இடம் பெற்றிருக்கும். அப்பகுதியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் இருப்பார்கள். விளையாட்டுக் கழகங்கள் இருக்கும். பொதுவாக இளைஞர்கள் இருப்பார்கள். எனவே அவ்வப்பகுதி பள்ளிவாயல் ஊடாக தற்பொழுது ஏற்பட்டிருக்கும் கள்வர்களின் பீதிக்கு ஒரு முடிவினை எடுக்கமுடியும். இந்நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் கடைப்பிடிக்கும் பொலிசாரின் உதவியுடன் பள்ளிவாயலகள் ஊடாக இத்திருடர்களை கண்காணிக்க முடியும்.

குழந்தைகளையும் சிறுவர்களையும் வைத்துக்கொண்டு பாவம் பல பெண்கள் மாலையானதும் வீட்டுக் கதவுகளை மூடிக்கொண்டு சிறையிலிருப்பதுபோல் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. எத்தனை நாட்களுக்குத்தான் இப்படியே இருப்பது? சுமைக்குமேல் சுமையாக வானைத்தொட்டுச் செல்லும் விலைவாசியும், பஞ்சமும், பட்டிணியும் இவ்வாறான குற்றச் செயல்களை தோற்றுவித்திருக்கின்றன. இருந்தும் எரியும் வீட்டில் விறகைப் பிடுங்கவதுபோல் இல்லாதவர்களின் வீடுகளிலும் புகுந்து  கண்ணுக்குப் புலப்படுவதைக் களவாடிச் செல்லும் நிலையும் இன்று தோற்றம் பெற்றிருப்பது பரிதாபத்திலும் பரிதாபம்!

கொள்ளை எனும் ரீதியில் ஒரு வீட்டை உளவு பார்த்து குழுக்களாக இணைந்து இவ்வாறான களவுகள் எமது ஊரில் பல வருடங்களாக நடைபெற்றே வருகின்றன. இவர்களுக்குப் பின்னணியில்  ஓர் தலைமையோ அல்லது ஓர் இயக்கமோ இருக்கலாம் என சந்தேகப்படத் தோன்றுகிறது. ஏனெனில் இவர்களால் முன்னெடுக்கப்பட்ட காரியங்கள் அனைத்தும்  கச்சிதமாக முடிந்துள்ளதும் மிக நிதானமாக பல நாட்கள் அவதானித்து அல்லது உளவு பார்த்து செய்யப்பட்டது போல் இருப்பதும் தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

வியாபாரிகள் அல்லது வீட்டுக்கு வேலை கேட்டு வருபவர்கள் போலவும், பொது நிறுவனங்களில் இருந்து ஏதாவதொன்றை பற்றி தங்களிடம் வினவ வந்துள்ளதுபோலவும், உதவி கேட்டு அல்லது தர்மம் கேட்டு வருபவர்கள் போலவும் இவ்வாறான கள்வர்களும் கொள்ளையர்களும் ஊரில் தகவல் திரட்டுகின்றனர் அல்லது அவதானிக்கின்றனர். எனினும் உண்மையாக வேலை கேட்டுவருபவர்களும், தர்மம் கேட்டு வருபவர்களும், வியாபாரிகளும் ஊரில் பலவருடங்களாக இருந்துவருகின்றனர். எனவே குறிப்பாக பெண்கள் இவ்விடயங்களில் அவதானமாக இருக்கவேண்டும்.

கள்வர்கள் எவ்வாறு கச்சிதமாக தனது காரியத்தை முடிக்கின்றார்களோ அந்தளவுக்கு கள்வர்களைப் பிடிப்பதற்கு மக்களுக்கு விழிப்புணர்வோ அவதானமோ இருப்பதில்லை. எமது இளைஞர்கள் பலர் சந்திகளிலும், கடற்கரையிலும் வீணாக பொழுதைக் களிக்கின்றனர். இன்று ஒவ்வொரு வீடுகளிலும் கைத்தொலைபேசிகள் இருக்கின்றன. குறைந்தது ஒரு வீட்டில் ஒன்றாவது இருக்கும். எனவே தனது வீட்டில் கள்வர்களின் நடமாட்டத்தை அறிந்தால் அல்லது அயல்வீட்டில் ஏதும் கள்வர்களின் நடமாட்டம் என உணர்ந்தால் குறிப்பிட்ட பள்ளிவாயலுக்கோ அல்லது திருடர்களைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுக்கோ உடனடியாக தொலைபேசி சமிக்ஞை அல்லது தகலை கொடுக்கலாம்.

தனது உறவினர்களின்  திருமணத்துக்கோ, அழைக்கப்பட்ட விருந்துகளுக்கோ அல்லது மையித் வீடுகளுக்கோ தங்களது வீடுகளைப் பூட்டிவிட்டு போக முடியாத ஓர் நிர்க்கதியான நிலைக்கு இன்று எமது ஊர் தாய்மார்கள் இருக்கின்றனர். எமது ஊர் இளைஞர்களுக்கு சவாலாக அண்மைக்காலமாக இவ்வாறான திருட்டுகளிலும் கொள்ளைகளிலும் ஈடுபட்டுககொண்டிருக்கும் இந்த சமூகத்துரோகிகளை இணங்கண்டு அவர்களை சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும். மக்களின் இயல்பு நிலைக்கு தடையாகவும் பீதியையும் ஏற்படுத்தும் இச்செயல்களைத் தடுக்க எமது இளைஞர்களும் எமது தலைவர்களும் முன்வரவேண்டும் என பணிவுடன் கேட்கின்றோம்.

Published by

Leave a comment