கொடுங்கோல் ஆட்சியின் உச்சக்கட்டமே கிழக்கு மாகாணசபை கலைப்புக்கான முயற்சி: இரா.துரைரெத்தினம்

‘கிழக்கு மாகாண சபையைக் கலைக்க எடுக்கும் முடிவு பாசிச ஜனநாயக கொடுங்கோல் ஆட்சியின் உச்சக்கட்டமே’ என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.ஆர்.எல்.எப்.முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை விரைவில் கலைக்கப்படுவது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘கிழக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் முடியும் முன்பே மாகாணசபையை கலைக்க மாண்பு மிகு ஜனாதிபதி எடுக்கும் முடிவு தமிழ் மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளன.

உண்மையில் ஒரு மாகாணசபை கலைப்பு என்பது பின்வரும் காரணங்களில் ஏதாவது ஒன்றை அடிப்படையாகக்கொண்டு அமைதல் வேண்டும்.

ஒரு மாகாணசபையில் ஆயுட்காலம் ஜந்து ஆண்டுகள் ஆகும். ஆனால் 4 ஆண்டுகள் நிறைவுற்றபின் அம்மாகாணசபையின் முதலமைச்சரின் ஒப்புதலுடன் தகுந்த காரணங்களை காட்டி மாகாணசபையை ஜனாதிபதி கலைக்க முடியும்.

அல்லது, தேசத்துரோகம் அல்லது ஊழல் மோசடியில் மாகாணசபை ஈடுபட்டால் கலைக்கமுடியும். இந்தவகையில் 8.5.2012 அன்றுடன் கிழக்கு மாகாண சபைக்கு நான்கு வருடங்கள் முடிவுறுகின்றது.

இந்நிலையில் கிழக்கு மாகாணசபை கலைப்பு தொடர்பாக எழுந்துள்ள வதந்திகள் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை உருவாக்கி உள்ளதோடு தமிழ் மக்களின் உணர்வுகளையும் மனங்களையும் உதாசீனப்படுத்துவதாகவும் காயப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

1988ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணசபை தமிழ்பேசும் மக்களின் அபிலாசைகளை தீர்ப்பதற்கான ஆரம்பப்படியாக உருவாக்கி பல்வேறு காரணங்களை காட்டி இழுத்தடிப்பு செய்து 1990இல் இச்சபையையும் அன்றைய ஆட்சியாளர்கள் கலைத்தனர்.

இன்று கிழக்கு மாகாணசபை மீண்டும் உருவாக்கப்பட்டு நான்கு வருடங்கள் நிறைவுற்றபோதும் கிழக்கு மாகாண சபைக்கான ஒரு கொடிச்சின்னத்திற்கே அங்கிகாரம் தரமறுக்கும், இந்த சியோனிஸ்ர பாணியிலான இனவாத சித்தாந்த அரசு, விற்பனைவரி தொடர்பான அதிகாரத்தை ஒரு வருடம் வலதுகையால் தந்து மீண்டும் அதை இடதுகையால் பறித்துக்கொண்டது.

எந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக இந்த மாகாணசபை உருவாக்கப்பட்டதோ அந்த மக்களின் யுத்தப்பாதிப்பின் இழப்புகளிலிருந்து மீண்டும் இயல்பு வாழ்கைக்கு திரும்புவதற்கான நிதியை ஒதுக்காமலும், பொலிஸ், காணி தொடர்பான அதிகாரங்களை வழங்காமலும் பூச்சாண்டிகாட்டி வருகின்றது. காணி தொடர்பான விடயங்களில் இனவாத பாணியில் மத்திய அரசின் தலையீடுகள் அமைந்துள்ளன.

கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிப்பிரச்சினையை கிழக்கு மாகாண சபையாலே தீர்க்கமுடியாமல் இருக்கும் போது சிறுபான்மை மக்களின் அதிகாரப்பரவலாக்கல் விடயங்களை நடைமுறைபடுத்துவது போல் கபடநாடகம் ஆடுகின்றது.

தங்களது சொந்த அரசியல் சுயலாபத்திற்காக மட்டும் சர்வ அதிகாரங்களையும் தன்வசம் கையில் வைத்துக்கொண்டு எடுத்த எடுப்பில் கிழக்கு மாகாண சபையை கலைப்பது தனது அதிகார வெறியையும் மமதையும் காட்டுவதோடு ஒரு அதிகாரத்தை எவ்வாறு துஸ்ப்பிரயோகம் செய்யலாம் என்பதற்கு இதைவிட சிறந்த முன்னுதாரணம் வேறொன்றுமில்லை.

இந்தவகையில் எதிர்காலத்தில் அமையவிருக்கின்ற மாகாணசபையையும் இடைநடுவில் சொந்த நலன்களுக்காக கலைக்கமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது .

சர்வதேச அரங்கில் தமிழ்மக்கள் மீதான பார்வையும் பதிவும் அதிகரித்திருக்கும் வேளையில் ஜெனிவா தீர்மானத்தின்படி நல்லிணக்க ஆணைக்குழுவின் முடிவை நடைமுறைப்படுத்துமாறும் இலங்கை விவகாரத்துக்காக அமெரிக்கா, இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டும் இந்தியக் தூதுக்குழு இலங்கை வந்துசென்ற நிலையிலும் இராஜதந்திர நகர்வுகள் அதிகார பரவலாக்கல் தொடர்பாக வெளிச்சத்துக்குவரும் நிலையில் பாராளுமன்ற தெரிவிற்குழுவிற்கு அழைப்புவிடும் நிலையில் தீர்வு விடயம் தொடர்பான ஆரம்ப கருத்துக்கள் வலுவடைகின்றது .

வட கிழக்கு விடயம் உட்பட ஏனைய அதிகாரப்பரவலாக்கலை செயல்படுத்த காலம் கனிகின்ற நிலையில் மத்திய அரசு இச்சாதகமான நிலைமையை இல்லாதொழிப்பதற்கு கிழக்கு மாகாணம் தங்களது கட்டுப்பாட்டில் உள்ளது எனக்காட்டி வடக்கில் மட்டும் பிரச்சினை உள்ளது எனக்கூறுவதற்கும் மாகாணசபையை கலைத்து தேர்தலை நடாத்தி கிழக்கில் பிரச்சினை இல்லை எனக்கூறுவதற்கும் பல தசாப்தங்களாக போராட்டம் நடாத்தி வலியுடன் இருக்கும் தமிழர்கள் எவரும் சோரம் போகமாட்டார்கள்.

இவ்வாறான நிலையில் அரசின் சூழ்ச்சிவலைக்குள் சிக்காமல் இருக்க தமிழ் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் திடசங்கற்பம்பூண வேண்டும். அவ்வாறு இணைந்தவர்களை எதிர்காலத்தில் தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும்.

விரும்பியோ விரும்பாமலோ இத்தேர்தல் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டால் தமிழ் சமூகம் எமது போராட்ட வலிமையையும் வலிமைமிக்க தியாகத்தையும் பறைசாற்றுவதற்கு தயங்க மாட்டார்கள்.

எமது சமூகம் கடந்த கால இழப்புக்களில் இருந்து எமது சமூகத்தை கட்டியெழுப்புவதற்காகவும் ஒரு தீர்வுத்திட்டத்தை நோக்கி நகர்த்துவதற்காகவும் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதற்கும் அதிகாரப்பரவலாக்களை உறுதியாக செயல்படுத்தவதற்கும் நானும் எங்களது கட்சியும் தமிழர்களின் ஒற்றுமையை பலமடையச்செய்வதற்கு செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் செயல்படும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடன் ஒற்றுமையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்மக்களின் ஒற்றுமையை பலப்படுத்த தமிழ் தேசியகூட்டமைப்புடன் செயல்பட முடிவெடுத்துள்ளோம் என்னும் செய்தியையையும் மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

-Tamilmirror

Published by

Leave a comment