-MJ
பலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அவர் மீண்டும் பலஸ்தீன் சென்ற ஒரு வாரத்துக்குள் இஸ்ரேலிய ஊடுறுவல் இலங்கையில் அதிகரித்து வருகின்ற இந்நிலையில் தற்பொழுது இஸ்ரேலியத் தூதரகத்தை இலங்கையில் அமைப்பதற்கு அரசு முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா தனது அமைப்பின் கண்டணத்தை பகிரங்கமாகத் தெரிவித்திருக்கின்றமை வரவேற்கத்தக்கது.
இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆழ்ந்த வேதனையை தெரிவிக்கும் அதேவேளை, இதனை மிக வன்மையாகக் கண்டிக்கிறது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இஸ்ரேல், பலஸ்தீனர்களை அநியாயமாகக் கொன்று குவிப்பது மாத்திரமன்றி, முஸ்லிம்களின் புனிதத் தலங்களில் ஒன்றான பைத்துல் முகத்தஸை ஆக்கிரமித்துள்ள நிலையில், இலங்கைக்கான இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதானது, முஸ்லிம் சமூகத்தை மிகவும் வேதனை கொள்ளச் செய்கிறது. முஸ்லிம் அரபு நாடுகளோடு நட்புறவு கொண்டுள்ள நம் நாட்டுக்கு இச்செயல் ஆரோக்கியமானதல்ல என்பதாகவே ஜம்இய்யத்துல் உலமா கருதுகிறது.
பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரான மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்விடயமாக நல்லதொரு முடிவை எடுக்க வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.”
1984ல் இஸ்ரேலியத் தூதரகம் அமைப்பதற்கான இவ்வாறான நடவடிக்கை அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜயவர்த்தனாவால் முன்னெடுக்கப்பட்போது, நாடளவிய ரீதியில் முஸ்லிம்கள் கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்தி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.அப்போது இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை ஜயவர்த்தனா முன்னெடுத்து வந்ததால் முஸ்லிம்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க இவர் விரும்பவில்லை. இதனால் இஸ்ரேலிய தூதரக முயற்சி கைவிடப்பட்டது. காத்தான்குடியிலும் இவ்வாறான எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று 1984 ரமழான் மாதத்தில் நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment