மர்ஹூம் அல்ஹாஜ் அபூபக்கர் மௌலவி அவர்கள்

-MJ

மபாஸ் ஹஜ் நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல சமூக சேவையாளருமான அல்ஹாஜ்  எம்.ஐ.எம் அபூபக்கர் மௌலவி அவர்கள் இன்று எம்மை விட்டும் மறைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

ஆரம்ப காலங்களில் கொழும்பில் இருக்கும் ஹஜ் முகவர்கள் ஊடாக காத்தான்குடியில் இருந்து ஹாஜிகளை புனித ஹஜ் யாத்திரைக்கும் உம்ராவுக்கும் அனுப்பி வந்தார். காத்தான்குடியில் இருந்து ஹஜ்ஜூக்கும் உம்ராவுக்கும் செல்லும் யாத்திரிகளுக்காக காத்தான்குடியில் முதன் முதலாக மபாஸ் ஹஜ் ட்ரவல்ஸ் என்ற பெயரில் குறுகிய வளத்துடன்  தனது இல்லத்தில் ஹஜ் முகவர் நிலையத்தை நடாத்தி வந்தார். இதனால் காத்தான்குடி ஹாஜிகளுக்கு கொழும்புக்குப் போய்வரும் நேரங்களும் செலவுகளும் தவிர்க்கப்பட்டன. அநேகமான ஹாஜிகள் அன்னாரது முகவர் நிலையம் ஊடாக சென்ற வருடம் வரைக்கும் சென்றுவந்தது அன்னாரது தனிப்பட்ட உழைப்புக்கும் நேர்மைக்கும் கிடைத்த ஓர் வெற்றிப்படியாகும்.காத்தான்குடியின் ஆரம்ப பாடசாலையான அல்ஹிறா வித்தியாலய அபிவிருத்தி சபையிலும் பெற்றார் சங்கத்திலும் ஓர்அங்கததவராக இருந்து   சமூக சேவையில் தன்னை அரப்பணித்து வந்தார். இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு பாடுபட்டு உழைத்தவர்களுள் மௌலவி அபூபக்கர் அவர்களை மறக்கமுடியாது. இதேபோல் தனது மஹல்லாவான மஸ்ஜிதுல் ஹூதா சின்னப்பள்ளிவாயல் நிர்வாக உறுப்பினராகவும் இப்பள்ளிவாயலின் குர்ஆன் மத்ரசா அபிவிருத்துக்கும் பள்ளிவாயல் தேவைகளுக்கும் ஓர் சமூகத்தொண்டனாகவும் தன்னை அர்ப்பணித்து வந்தார். இதேபோல் காத்தான்குடி-5 மீராபாலர் பாடசாலையின் வளர்ச்சிக்கும் தனது பங்களிப்பைச் செய்து வந்தார்.

1980-1990 காலங்களில் காத்தான்குடியில்  உதைப்பந்தாட்டம் அசைக்க முடியாத விளையாட்டாக இருந்தது. அப்போதைய தலை சிறந்த கழகமாகத் திகழ்ந்த காத்தான்குடி யுனைட்டட் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாக உறுப்பினராகவும் அக் கழகத்தின் தலைவராகவும் இருந்து, தனது விளையாட்டு திறமைக்கும் ஆளுமைக்கும் வித்திட்டார். இதைவிட கரப்பந்தாட்டத்தில் அசைக்க முடியாத ஓர் வீரனாகவும் அக்காலங்களில் புகழ்பெற்றார்.

1990-1994 காலப்பகுதிகளில் இலங்கை முஸ்லிம்களுக்கான குரலாக ‘எழுச்சிக்குரல்’ எனும் பத்திரிகை வாரந்தோரும் வெளிவந்தது. இப்பத்திரிகையின் மட்டக்களப்பு மாவட்ட முகவராகவும் நிறுபராகவும் செயற்பட்டு, காத்தான்குடியின் சமூக விடயங்களையும்,  காத்தான்குடி அன்று சந்தித்து வந்த யுத்த பாதிப்புக்களையும்  இலங்கையின் ஏனையமக்களும்   அறிந்துகொள்ள ஓர் களம் அமைத்தார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான அலிஅக்பர் மௌலவி என அழைக்கப்படும் அல்ஹாஜ் எம்.ஐ.எம். அபூபக்கர் மௌலவி அவர்கள் தனது 56வது வயதில் இன்று எங்கள் சமூகத்தைவிட்டும் மறைந்துவிட்டார்கள்.

அன்னாரது அனைத்து நல்ல காரியங்களையும் அல்லாஹ்தஆலா ஏற்றுக் கொண்டு அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்க அன்னாருக்காகப் பிரார்த்திக்கின்றோம்.

Published by

Leave a comment