மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கல்வி கோட்டத்திலுள்ள காவத்தமுனை அல் – அமீன் வித்தியாலய மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை வகுப்புக்களை பகிஷ்கரித்து; ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
இப்பாடசாலையில் காணப்படும் ஆசிரிய ஆளணி பற்றாக்குறை நிவர்த்தி செய்ய கோரியே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாடசாலை அதிபர் எம்.யூ.எம்.நசீர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் அலியார் மீராசாகிப்,
“இப்பாடசாலைக்கு 35 ஆசிரியர்கள் தேவைப்பட்ட போதிலும் 22 ஆசிரியர்களே தற்போதுள்ளனர். கடந்த மூன்றரை வருடங்களில் ஏழு ஆசிரியர்கள் இப்பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனினும் அதற்கு மாற்றீடாக எந்தவொரு ஆசிரியரும் நியமிக்கப்படவில்லை.
இப்பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதால் மாணவர்கள் கல்வி கற்பதில் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இப்பாடசாலைக்கு ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு பல தடவைகள் மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளர் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டும் அவை நிறைவேற்றப்படவில்லை. இதனாலேயே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்” என்றார்.
மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காவத்தமுனை பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-tamilmirror
–
Leave a comment