ஹக்கீமின் அனுசரணை முயற்சியும் சம்பந்தனின் ஐக்கிய இலங்கையும்

-தினகரன் வாரமஞ்சரி ஆசிரியர் தலையங்கம்

இலங்கை வந்திருந்த இந்திய பாராளுமன்றக் குழுவிற்குத் தலைமை தாங்கியிருந்த இந்திய எதிர்க் கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வைப்பதற்கு ஏற்பாட்டாளராகச் செற்பட்டு உதவுமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் நேரடியாகவே கேட்டிருந்தார்.

இந்தச் செய்திக்கு அநேகமாக அனைத்து ஊடகங்களிலும் ஓரளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இது நடைபெற்று இரண்டு வாரங்களாகப் போகிறது. ஆனால் இப்போதுதான் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இவ்விடயம் தெரிய வந்திருக்கிறது என்பது வேடிக்கையானது எனினும் உண்மை யானதும் கூட.

இப்போதுதான் அவர்கள் ஒவ்வொருவராக அறிக்கை மூல மாகவும் பேட்டிகளில் கருத்துக்களையும் தெரிவித்து வருகின் றனர். தமிழ்க் கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இது சுஷ்மா விற்கு தேவையற்ற விடயம் என்பதுபோன்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அதேபோன்று கூட்டமைப்பின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பி னரான ஏ. சுமந்திரன், அரசுடன் நாம் பேச புரோக்கர் தேவையில்லை என்பதாக தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் கூறுவது உண்மைதான். ஆனால் அவர்கள் அவ்வாறு நடந்துகொள்வதி ல்லையே. அதனால்தான் சுஷ்மா அவர்கள் ஒரு நல்லெண்ணத்தில் இதனைத் தெரிவித்திருக்கலாம். முதலில் தமிழ்க் கூட்டமைப்பு தமக்கிடையே ஒற்றுமையை வளர்க்க வேண்டும். கூட்டமைப்பிற்குள் இப்போது பிரதேச வாதம் தலைவிரித்தாட ஆரம்பித்துள்ளது. இதனைச் சிலர் இப்போது தமது இருப்புக்கான ஆயுதமாகப் பாவிக்கத் தொடங்கியுள்ளனர்.

சுஷ்மா சுவராஜ் அவர்களை ஓரணியில் சென்று சந்தித்துத் தமது ஒற்றுமையையும், பலத்தையும் காட்ட முடியாத தமிழ்க் கூட்டமைப்பு மூன்று அணிகளாகப் பிரிந்து ஓரணியை மற்றைய அணி சாடுவது போன்றும் ஒன்று தெரிவித்த கருத்தை மறுதலித்து அடுத்த அணி போட்டுக் கொடுத்தும் பலம்மிக்க தமது அணியைப் பலமில்லாதவொரு சுயலாபம் கொண்ட அணியாக காட்டிக்கொடுத்துள்ளது.

இதன் காரணமாகவே தமிழ் பேசும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை கூட்டமைப்பின் நட்பு மிக்க சகோதர அணியாகக் கருதி சுவராஜ் அந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்க வேண்டும். தமக்கிடையே ஒற்றுமையில்லாத இவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் அணியுடன் ஒற்றுமைப்பட்டு செவிமடுப்பார்களா என்பது நான்கு நாட்கள் மட்டுமே பழகிய சுஷ்மாவிற்கு தெரிய வாய்ப்பில்லை.

பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசுடன் நீங்கள் நேரடியாகப் பேச வேண்டும் அல்லது சுஷ்மா தெரிவித்தது போன்று இருபக்கமும் பொதுவான நட்புடன் அதேவேளை, அதிகாரத்துடன் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் துணையுடன் பேச முனைய வேண்டும். ஆனால் இன்று உண்மையில் இரண்டுமே நடந்தபாடாக இல்லை.

பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகாண விருப்பமில்லை எனில், நீங்களே ஒரு தீர்வைத் தமிழ் மக்களுக்கு வழங்குங்கள் என்று அரசாங்கத்திடம் பொறுப்புக் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடுவதே தமிழ்க் கூட்டமைப்பிற்கு நல்லது. யுத்தம் நடைபெற்ற காலத்தில் புலிகளை வைத்துப் பிழைப்பு நடத்திக் காலத்தைக் கடத்தியவர்கள் இன்று பேச்சுவார்த்தை என்று காலத்தைக் கடத்து கின்றனர். இறுதி யுத்தம் நடைபெற்று புலிகள் அழிக்கப்பட்டு இன்று மூன்று வருடங்களாகிவிட்டன. தமிழ் மக்களுக்கு ஈழம் பெற்றுத் தருவதாகக் கூறிய புலிகள் முள்ளிவாய்க்காலுக்குள் முடக்கப்பட்டுவிட்டனர். இப்போது தமிழருக்கு தீர்வு பெற்றுத் தருகிறோம் என்று புறப்பட்ட தமிழ்க் கூட்டமைப்பை நம்பி வாக்களித்த மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது.

பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு வாருங்கள், பிரச்சினைகளை பேசித் தீர்ப்போம். அனைத்துக் கட்சிகளும் ஒரு குடையின் கீழிருந்து பேசி காணப்படும் தீர்வு எதிர்காலத்தில் சிக்கல்களை தோற்றுவிக்காது என்பதே அரசாங்கத்தின் கருத்தாக உள்ளது. இதனைத் தமிழ்க் கூட்டமைப்பு புரிந்துகொள்வதாக இல்லை.

தமிழ் மக்களுக்கே பிரச்சினை உள்ளது. தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் நாம் மட்டும்தான். அதனால் எம்முடன் மட்டுமே தனியாகப் பேசி தீர்வை வழங்க வேண்டும். இதில் எதற்காக ஏனைய கட்சிகளை உள்வாங்கி கருத்தறிய வேண்டும். அவர்கள் வந்தால் தீர்வு கிடைக்காது. மாறாக கலகமும் குழப்பமுமே காணப்படும் என்பது தமிழ்க் கூட்டமைப்பின் குற்றச்சாட்டாகஉள்ளது. கூட்டமைப்பின் ஒரு கருத்தை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். பிரச்சினை தமிழ் மக்களுக்கே உள்ளது. யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழ் மக்களே. இது உண்மையாக இருக்கலாம். ஆனால் தீர்வு என்று காணப்படும் போது நாட்டிலுள்ள ஏனைய இனங்களையோ, கட்சிகளையோ ஒருபோதும் புறந்தள்ளி ஒதுக்கிவிட முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழருக்குத்தான் பிரச்சினை என்று தீர்வை வெறுமனே வழங்கிவிட்டால் எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துவிட்டதாக இருந்துவிட முடியுமா? ஜனநாயக நாட்டில் ஏனைய கட்சிகளுக்கும், இனங்களுக்கும் அது குறித்து அறிவிக்க வேண்டும. காணப்படும் தீர்வு ஏனைய இனங்களைப் பாதிப்பதாக அமைந்துவிடக்கூடாது. அதனால்தான் ஒரே தடவையில் அனைத்துக் கட்சிகளினதும், இனக் குழுக்களினதும் கருத்துக்களை அறிய வேண்டிய தேவை ஏற்படுகிறது.

காணப்படும் இறுதித் தீர்வை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அனைவரதும் அனுமதி பெற்றப்பட வேண்டும். அரசாங்கமும் தமிழ்க் கூட்டமைப்பும் மட்டும் பேசி எடுக்கப்படும் தீர்மானத்தை எல்லாக் கட்சிகளும் ஏற்கும் என எதிர்பார்க்க முடியாது. அல்லது ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று ஒருபோதும் வற்புறுத்த முடியாது. அவ்வாறு செய்தால் அது முப்பது வருட கால யுத்தத்தை விடவும் மோசமான நிலையை நாட்டில் உரு வாக்கிவிடும்.

அதனால்தான் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தது போன்று முஸ்லிம் காங்கிரஸ் போன்ற பொதுவான தமிழ் பேசும் கட்சி ஒன்றின் அனுசரணையுடன் இணைந்து சென்று அரசுடன் பேச்சு நடத்துவது பொருத்தமானது. எல்லோரையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது நல்லதல்ல. முஸ்லிம் காங்கிரஸ¤டன் இணைந்து தமிழ்க் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவது தமிழ்த் தரப்பிற்கு மேலும் பலம் சேர்க்கும் என்றுகூட சுஷ்மா மறைமுகமாக விரும்பியிருக்கலாம்.

எனவே இனியும் காலத்தை கடத்தி தமிழ் மக்களை மனம்கோண வைக்காது, ஏதாவது ஒரு தீர்க்கமான முடிவிற்கு வரவேண்டியது தமிழ்க் கூட்டமைப்பின் முன் னாலுள்ள பாரிய பொறுப்பாகும். அதற்காக முஸ்லிம் காங்கிரஸ¤டன் கைகோர்த்துச் செயற்படுவதில் எவ்விதமான தப்பும் இல்லை. அவ்வாறில்லை எனில், ஏ. சுமந்திரன் எம்.பி. தெரிவித்தது போன்று எமக்குத் தரகர் தேவையில்லை என்று கூறிவிட்டு நேரடியாகவெனினும் பேச்சை ஆரம்பித்து ஒரு முடிவினைக் காணுங்கள். இதேவேளை ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகாணத் தமிழ்க் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக சம்பந்தன் ஐயா அண்மையில் தெரிவித்த கருத்து சகல தரப்பினராலும் வரவேற்கப்பட்டுள்ளது. இதனை இவர் தெரிவித்தது மட்டுமல்லாது யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டு மே தினத்தில் இலங்கையின் தேசியக் கொடியை ஏந்தி அதற்கான சமிக்ஞையையும் காட்டியுள்ளார். சம்பந்தன் ஐயாவின் கூற்று காற்றில் பறந்து மறைய முன்னதாக அரசாங்கம் அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முனைய வேண்டும். சம்பந்தன் ஐயா இதனை யாரையும் திருப்திப்படுத்துவதற்காக கூறியதாகத் தெரியவில்லை. தற்போதுதான் உண்மையான யதார்த்தத்தை அவர் புரிந்துள்ளார். அதனை அரசாங்கமும் பயன்படுத்திக் கொண்டால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடும்.

Published by

Leave a comment