சம்பந்தன் MP ஏந்திய தேசியக் கொடிக்காக மன்னிப்பு கோரிய மாவை;
தமிழருக்கென வேறு தேசியக் கொடியை TNA வைத்திருக்கிறதா என கேள்வி
* இராஜதந்திர கடவுச் சீட்டில் உல்லாச பயணம்
* அரசாங்க புலமைப் பரிசிலில் உறவினர்களுக்கு சலுகை
* பாராளுமன்ற வரப்பிரசாதமாக வீடு, வாகனம்
* உயிரை பாதுகாக்க இலங்கை அரசின் பொலிஸார்
* வருடா வருடம் ஐம்பது இலட்சம் நிதி ஒதுக்கீடு
புலிகள் கூட தேசியக் கொடியை புறக்கணிக்கவில்லை
புத்திஜீவிகள் கண்டனம்
தமிழ்த் தேசிய கூட்டமை ப்பு மீண்டும் தடுமாற்ற அரசியல் செல்நெறிக்குள் தமிழ் மக்களை இட்டுச் செல்வதாக புத்திஜீவிகள் மீண்டும் குற்றஞ்சாட்டுகி றார்கள். கூட்டமைப்புத் தலைவர்களின் தனித்தனியான அரசியல் முன்னெடுப்பும் கருத்து வெளிப்பாடும் தமிழ் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அரசியலில் தெளிந்த நீரோடையென வர்ணிக்கப் படும் இரா. சம்பந்தன் எம்.பியின் தலைமைத்துவ செல்நெறியும் அவரைச் சூழ உள்ளவர்களின் போக்கும் தமிழ் மக்களை ஸ்திரமற்ற ஓர் அரசியல் அநாதைகள் என்ற நிலைக்கு இட்டுச் சென்றுவிடுமோ என்றும் தமிழ்ப் புத்திஜீவிகள் தரப்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. பேரினவாத பெரும்பான்மை தலைமைத்துவத்தைக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சியினருடன் யாழில் கூட்டு மேதினத்திற்குத் துணைபோக வேண்டாமென்று புத்திஜீவிகள் மாத்திரமன்றிப் பொதுமக்கள் தரப்பிலும் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் அக்கட்சியுடன் ஒன்று சேர்ந்தது. சரி எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோட்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தாவது தமிழ் மக்களின் நிலைப்பாட்டை சம்பந்தன் சர்வதேசத்திற்கு மீண்டும் தெரிவித்து விட்டார் என்று தமிழ் மக்கள் நிம்மதியடைந்தார்கள். சிங்கள அரசாங்கம், ஸ்ரீலங்கா அரசு என்றும் இந்த அரசாங்கத்தின் மீது எமக்கு அக்கறை இல்லையென்றும் விலகி விலகி அன்னியப்பட்ட அரசியலை நடத்தி வந்த கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து யாழில் சிங்கக் கொடியை ஏந்தி தமிழ் மக்களின் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தி யிருந்தார்.
சிங்கக் கொடி என்பது ஸ்ரீலங்காவின் கட்சிக்கொடி அல்ல. அது எமது தாய் நாட்டின் தேசியக்கொடி. தேசிய இனம் போற்றி மதிக்க வேண்டிய கொடி. அதனை மதிக்க வேண்டியது தமிழ் மக்கள் மட்டுமல்ல, சம்பந்தன் எம். பி. அல்ல நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரசையினதும் தலையாய கடப்பாடு. எனவே சம்பந்தன் தேசியக்கொடியை ஏந்தி விட்டார் என்பது ஆச்சரியப்படக்கூடிய விடயமன்று. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிங்கக் கொடியை ஏந்தியமை வரலாற்றில் இதுதான் முதன் முறையன்று. உள்ளூராட்சித் தேர்தல்களின் பின்பு சபைகளின் நிர்வாகப் பணிகளைத் தேசிய கொடியை – சிங்கக்கொடியை ஏற்றித்தான் ஆரம்பித்திருக்கிறார்கள்.
எனினும், யாழ்ப்பாணத்தில் சம்பந்தன் சிங்கக்கொடியை ஏந்தியமை தொடர்பில் கடும் போக்காளர் கட்சியொன்று பிழை யான விமர்சனத்தை முன்வைத்திருந்தது. அஃது அவர்களின் கருத்தியல் வாதம்!
என்றாலும், நாட்டின் தேசியக் கொடியை ஏந்துவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டு கொடியை ஏந்தச் செய்துவிட்டாரென்றும் மாவை சேனாதிராசா எம். பி. தெரிவிக்கிறார். அதே நேரம், சிங்கக் கொடியைக் கூட்ட மைப்பு ஏந்தியமைக்காக தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரு வதாகவும் அறிவித்திருக்கிறார். இது தமிழ் மக்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக் கியுள்ளது.
என்னவோ தீண்டத்தகாதவொன்றை சம்பந்தன் கரம் பற்றிவிட்டதைப் போல் மாவை சேனாதிராசா தெரிவித்திருக்கும் கருத்து இந்நாட்டுச் சிங்கள மக்கள் தமிழ் மக்களை இன்னமும் சந்தேகக் கண்கொண்டு நோக்குவதற்கே இடமளித் திருக்கின்றது.
தேசியக்கொடியை ஏந்தியமைக்குத் தமிழ் மக்கள் மன்னிக்க வேண்டுமென்றால், தமிழ் மக்களுக்கு வேறு தேசிய கொடியொன்று இருப்பதாக மாவை எம். பி. சொல்கிறாரா? அப்படி தமிழ் மக்களுக்கே தெரியாத அந்தக் கொடி யாதென்று மாவை சேனாதிராசா பகிரங்கமாக அறிவிப்பாரா? அல்லது சிங்கக்கொடி தவிர்ந்த ஒரு தேசிய கொடியைத் தாங்கும் ஓர் அரசியல் தீர்வை சம்பந்தனுக்குத் தெரியாமல் கூட்டமைப்பில் உள்ள வேறு சிலர் மறைத்து வைத்திருக்கிறார்களா? அல்லது சம்பந்தன் எம்.பியும் சேர்ந்துதான் தமிழர்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றகிறார்களா? இப்படி பல கோணங்களில் தமிழ் மக்களுக்கே கேள்விகள் எழுகின்ற நிலையில் நாட்டின் பெரும்பான்மையினத்தவர்களுக்கு எவ்வாறெல்லாம் சிந்தனை ஓடக்கூடும் என்று புத்திஜீவிகள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாவை சேனாதிராசா மட்டுமன்றி இந்நாட்டின் அரசியல் கட்டமைப்புக்குக் கட்டுப்பட்டுத்தான் சகல பிரஜைகளும் வாழ்கிறார்கள். எம். பியாகவோ, மாகாண சபை, உள்ளூராட்சி சபை உறுப்பினராகவோ இந்த அரசியலமைப்பின் கீழ் தான் சத்தியப்பிரமாணம் செய்கிறார்கள். இதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்தவோர் இடத்திலும் விதிவிலக்காக செயற்பட்டதில்லை. செயற்படவும் முடியாது. தேசிய அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், கடவுச்சீட்டு முதலான ஆவணங்களையும் எம். பிமார் சம்பளத்தையும் பெறுவது இந்த அரசாங்கத்தில்தான் என்பதை மறந்துவிட்டா மாவை எம். பி. பேசுகிறார்? தமிழர் களுக்கென்று ஏதாவது ஒரு விடயத்தை தனித்துவமாக, அவர்களின் கலாசார, பண்பாட்டு, விழுமியங்களைத் தவிர தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொடுத் திருக்கிறதா?
புலிகள் அமைப்பினர் கூட வன்னியில் சில காலம் நிர்வாகம் செய்தாலும், அரசுக்கெதிரான பயங்கரவாத செயற்பாடு களை முன்னெடுத்த போதிலும் தமிழ் மக்களை அரச நிர்வாகக் கட்டமைப்பிலிருந்து அன்னியப்படுத்தவில்லை. அரச நிர்வாக வலையமைப்பையும் பொறிமுறைகளையும் தமிழ் மக்களுக்காகப் பயன்படுத்தினர் என்பதுதான் உண்மை. புலிகள் கூட இலங்கையின் தேசிய கொடியைப் புறக்கணிக்குமாறு எச்சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.
ஆனால் இன்று நாடு தேசிய நல்லி ணக்கத்தை நோக்கி பயணித்துக் கொண்டி ருக்கும் போது, மாவை சேனாதிராசா எம். பி. இவ்வாறு தமிழ் மக்களை குழப்பத்திலும் சிக்கலிலும் தள்ளிவிடுவது பற்றி புத்திஜீவிகள் கடும்விசனத்தைத் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், தமிழ் அரசியல் செல்நெறி இன்று முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பினர் வெவ்வேறு விதமான கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டுமென்று கோரியுள்ள புத்திஜீவிகள் கருத்துக்களைத் தெளிவாகத் தெரிவிக்க முடியாத வயது கோளாறு எனின், இளையவர்களுக்கு வழிவிட்டு கண்ணியமாகவும் கெளரவமாகவும் ஒதுங்கிக்கொள்வது தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமாக இருக்குமென்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
-தினகரன்
Leave a comment