விருந்தோம்பல்

– அபூ அப்துல்லாஹ் :

மேலும், அ(வ்விறை)வின் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். (76:8)

”அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காகவே நாங்கள் உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து கூலியையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்றும் கூறுவார்கள். (76:9)

யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் தன் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம்.

”யாராவது ஒருவர் ஒரு சமூகத்தினரை விருந்தினராக ஏற்கும் போது அவர்கள் வறுமைக்குட்பட்டவராக இருந்தால் அவர்களுக்கு உதவுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். தனது பொருள், தனது விவசாயத்திலிருந்து அவர்களுக்கு விருந்து கொடுத்து உதவ வேண்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூதாவூத், அஹமத்

யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசிக்கின்றாரோ அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். விருந்தாளிக்குப் பரிசு ஓர் இரவும் ஒரு பகலும், அதிகப்படியாக விருந்து உபசரிப்பு மூன்று நாட்களாகும், அதற்கு பின்னால் உள்ள உபசரிப்பு தர்மமாகும். விருந்தாளி விருந்து கொடுப்பவருக்கு கஷ்டம் கொடுக்கும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது. குவைலித் பின் அம்ர்(ரலி) : புகாரி, முஸ்லிம்

வானவர்கள் சிலர் என்னிடம் வந்து, ”இவருக்கு உதாரணம் கூறுங்கள்” என்று தமக்கிடையில் கேட்டு கொண்டார்கள். ஒருவர் ஒரு வீட்டைக் கட்டி அதில் விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். விருந்துக்கு அழைக்கவும் ஒருவரை அனுப்பிவைக்கிறார். யார் அந்த அழைப்பை ஏற்றார்களோ, அவர்கள் அவ்வீட்டில் நுழைந்து விருந்து உண்பார்கள். யார் அழைப்பை ஏற்கவில்லையோ அவர்கள் வீட்டிற்குள் நுழைய மாட்டார்கள். விருந்தும் உண்ணமாட்டார்கள். இதுவே இவருக்கு உதாரணமாகும் என்று கூறினார்கள். வீடு என்பது சுவர்க்கமாகும். அழைக்கச் சென்றவர் முஹம்மத்(ஸல்) அவர்களாவார் என வானவர்கள் விளக்கம் அளித்தனர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி) : புகாரி

”யார் விருந்தழைப்பை ஏற்க மறுக்கிறாரோ அவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்டார்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரலி) : புகாரி

யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் மதுபானம் பரிமாறப்படும் விருந்துகளில் கலந்து கொள்ளவேண்டாம், என நபி(ஸல்) கூறினார்கள். ஜாபிர்(ரலி) : அஹமத்

செல்லவந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்து தான் விருந்துகளில் மிகக் கெட்டதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரலி) : புகாரி)

விருந்து மூன்று நாட்களாகும். ஒருவரது உரிமை ஒரு பகல் ஒரு இரவாகும். அதன் பின்னர் செலவு செய்பவை தர்மமாகும். விருந்துக்குச் செல்பவர், விருந்தளிப்பவருக்கு சிரமமளிக்கும் அளவுக்குத் தங்குவது ஹலால் இல்லை. அபூஹுரைரா(ரலி) : திர்மிதீ

ஒரு கூட்டத்தாரிடம் விருந்தாளியாகச் செல்பவர் அவர்களின் அனுமதியின்றி நோன்பு வைக்கக்கூடாது. ஒரு கூட்டத்தினரின் இல்லத்தில் நுழைபவர் அவ்வீட்டார் அமரச் சொல்லும் இடத்தில் அமரட்டும், ஏனெனில் அவ்வீட்டார் தான் தமது இல்லத்தின் அந்தரங்கம் பற்றி நன்கு அறிந்தவர்கள். அபூஹுரைரா(ரலி) : திர்மிதீ

சல்மான்(ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார் அவருக்காக தன்னிடம் உள்ளதைக் கொண்டு வரச் செய்தார்கள். தனது தோழருக்காக சிரமம் எடுத்துக்கொள்வதை விட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்திருக்காவிட்டால் உமக்காக நாம் சிரமம் எடுத்துக் கொண்டிருப்போம் என்று சல்மான்(ரலி) கூறினார்கள். ஷகீக் பின் ஸலமா(ரலி) : அஹ்மத், தப்ரானி

”அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடியவர் தனது விருந்தினருக்குரிய கடமையைச் செய்து அவரைக் கண்ணியப்படுத்தட்டும்” என்று நபி(ஸல்) கூறிய போது ”அவருக்குரிய கடமை யாது?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ”ஒரு பகல் ஒரு இரவு” என்று விளக்கம் தந்துவிட்டு விருந்து (அதிகபட்சம்) மூன்று நாட்களாகும். அதன் பின்னர் அளிக்கப்படுவது தர்மமாகும் எனவும் கூறினார்கள். அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம்

ஒரு மனிதரிடம் அவரது சகோதரர்களில் சிலர் வரும்போது, தன்னிடம் உள்ள (சாதாரண உணவை) அவர்களுக்கு முன் வைப்பதை இழிவாகக் கருதுவது அவருக்கு நாசமாகும், ஒரு கூட்டத்தினருக்குப் பரிமாறப்படுவதை அவர்கள் இழிவாகக் கருதுவது அவர்களுக்கு அது அழிவாகும். ஜாபிர்(ரலி) : அஹ்மத், தப்ரானி (அவ்ஸத்)

அனஸ்(ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவர்களை நோய் விசாரிக்க சிலர் வந்தனர். ”பணிப்பெண்ணே! நமது தோழர்களுக்காக ரொட்டித் துண்டையேனும் கொண்டு வா” என்று கூறிவிட்டு ”நல்ல பண்புகள் சுவனத்திற்கான அமல்களில் உள்ளவையாகும்” என்று நபி(ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என்றும் கூறினார்கள். ஹுமைத் : தப்ரானி

-சுவனப்பாதை

Published by

Leave a comment