-BBC Tamil
இருபதாவது தடவையாக அனுட்டிக்கப்படும் உலக தகவல் சுதந்திர தினத்தில் தாம் எதிர்கொள்ளும் கட்டுப்பாடுகளை, சிரமங்களை பிரதிபலிப்பவர்களில் இலங்கை செய்தியாளர்களும் அடங்குகிறார்கள்.
இலங்கையின் தொடர்புசாதன ஊழியர்கள், அச்சுறுத்தல்களை, கடத்தல்களை, கொலைகளை எதிர்கொள்கிறார்கள்.
கடந்த 12 மாதங்களில் இங்கு செய்தியாளர்கள் எவரும் கொல்லப்படவில்லை என்ற போதிலும், வடக்கே யாழ்ப்பாணத்தில் தமிழ் செய்திப் பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
இரு வருடங்களுக்கு முன்னதாக ஒரு கேலிச்சித்திரக் கலைஞர் கடத்தப்பட்டமை, 2006 இல் ஒரு மாணவர் குழு கொலை செய்யப்பட்டமை குறித்து செய்தி வெளியிட்ட ஒரு தமிழ் செய்தியாளர் கொல்லப்பட்டமை உட்பட பல பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் எவரும் தண்டிக்கப்படவில்லை.
பிரச்சினை இல்லை என்று கூறும் அரச ஊடகங்கள்
ஆனால், இலங்கையில் பிரச்சினை இருக்கிறது என்பதை ரூபவாஹினியைச் சேர்ந்த மோஹான் சமரநாயக்க போன்ற அரச ஆதரவு அரச ஊடகங்களின் தலைவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.
”இந்த நாட்டில் 7 அல்லது 8 தினசரி செய்தித்தாள்களும், பல வாரப்பத்திரிகைகளும் இருக்கின்றன. இவற்றில் சில ஆக்கிரோசமாக அரசாங்கத்தை எதிர்க்கின்றன. சில சமயங்களில் அவர்கள் அரசாங்க தலைவர்களை பல காரணங்களுக்காக எதிர்க்கிறார்கள்” என்கிறார் மோஹான் சமரசிங்க.
ஆனால், பதில் நடவடிக்கைகளுக்கு பயந்து செய்தியாளர்கள், தாமாகவே சுயதணிக்கை செய்து கொள்வதாக உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
”தாய் நாட்டுக்கு துரோகம் செய்தவர்கள்” என்று தான் கூறும் செய்தியாளர்களை அண்மையில், அரசாங்க தொலைக்காட்சி கண்டித்திருந்தது.அதேவேளை, சில செய்தியாளர்களின் பெயரைச் சொல்லி ஒரு அமைச்சர் அவர்களது கைகால்களை உடைப்பேன் என்று கூறியிருந்தார்.
ஆபத்தான சூழல்
தொடர்பூடகங்களுக்கான சூழ்நிலை மிகவும் ஆபத்தானதாக இருப்பதாக, சுயாதீன இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் தலைவரான இம்ரான் பர்ஹான் கூறியுள்ளார்.
சிறிலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் சிறி லங்கா டெலிகொம் உட்பட முன்னர் தனியாரால் நடத்தப்பட்டு தற்போது அரசுக்கு சொந்தமாக இருக்கும் பெரிய விளம்பரதாரரிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் அழுத்தங்களை எதிர்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஊடக சுதந்திர தினத்தை அனுட்டிக்கும் வகையில், இலங்கை பத்திரிகை சபை ஒரு கருத்தரங்கை நடத்தியுள்ளது. அங்கு பலவிதமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இப்படியான நடவடிக்கைகள் கூட இங்கு ஆபத்தானவைதான். மூன்று வருடங்களுக்கு முன்னதாக இப்படியான ஒரு கருத்தரங்கில், பேசிய போத்தல ஜயந்த என்பவர் சில வாரங்களின் பின்னர் கடுமையாக தாக்கப்பட்டார்.
அவரும், அவருடன் அன்று உரையாற்றிய குறைந்தபட்சம் மற்றும் ஒருவரும் தற்போது நாடு கடந்து வாழ்கிறார்கள்.
Leave a comment