உதிரத்தையே பாலாக்கி உயிரூட்டும் சக்தியான தாய்ப்பாலை விட மேலானதொன்றும் இல்லை

‘தங்கள் உடலை கட்டாக வைத்து, வசீகரமாக காட்சியளிக்க வேண்டு மாயின், தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் ஓரிரு மாதங்களில் கைவிடப்பட வேண்டும் என்று இன்றைய நவீன உலகின் தாய்மார் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். அவர்கள் தாய்ப் பாலை கொடுப்பதற்கு பதில் தங்கள் குழந்தைகளுக்கு வெளிநாடு களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவை கரைத்து போத்தல்களின் மூலம் பிள்ளைகளுக்கு ஊட்டுகிறார்கள்’.

-தினகரன் ஆசிரியர் தலையங்கம்

தாய்ப்பாலூட்டும் மாதம் இலங்கையில் கடந்தாண்டு முதல் ஆரம்பமாகியது. ஒரு குழந்தை பிரசவிக்கப்பட்ட ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னர் அதற்கு முதற்தடவையாக தாய்ப்பால் ஊட்டப்படுகின்றது. இந்த தாய்ப்பால் பச்சிளங்குழந்தை களுக்கு ஒரு போஷாக்கு உணவாக இருப்பதுடன், பலதரப்பட்ட நோய்களை தடுக்கும் ஒரு அருமருந்தாகவும், இயற்கை மனித குலத்திற்கு பெற்றுக் கொடுத்துள்ளது.

கண்களில் சிவப்புத்தன்மை அல்லது ஏதாவது சிறு காயங்கள் ஏற் பட்டால் இன்று நாம் உடனடியாக வைத்தியசாலைகளுக்கு விரை ந்து சென்று, ஏதாவது மருந்தை எடுத்து குணப்படுத்துகின்றோம். சுமார் 80 அல்லது 100 ஆண்டுகளுக்கு முன்னர் எந்த வகையான கண்நோய்களுக்கும் தாய்ப்பாலே மருந்தாக பயன்படுத்தப்பட்டது. தாய்ப்பாலிலுள்ள ஏதோ ஒருவித அபூர்வ சக்தியினால், இரண்டு அல்லது மூன்று துளி, பாதிப்பிற்குள்ளான கண்களில் விழுந்த வுடன், அந்த கண்நோய் மறுவிநாடியிலேயே மறைந்துவிடும். அந் தளவிற்கு தாய்ப்பால் அபூர்வமான சக்தியைக் கொண்டிருக்கிறது.

இலங்கையிலுள்ள தாய்மார்களில் 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் தாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு முதல் மாதத்தில் தாய்ப் பாலை ஊட்டுகிறார்கள். தெற்காசிய நாடுகளிலேயே தாய்ப்பால் ஊட்டும் பழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. வறுமை மற்றும் தாய்ப்பாலை ஊட்டும் பழக்கம் தெற்காசிய நாடுகளில் பாரம்பரிய மாக இருந்து வருவதே இதற்கான இரண்டு பிரதான காரணங்களாகும்.

இலங்கையில் பாரம்பரிய முறையில் ஒரு தாய் குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு அடுத்த பிள்ளை பிறக்கும் வரை தனது பிள்ளைக்கு தாய்ப்பாலை ஊட்டுவார். இவ்விதம் தாய்ப்பாலை ஊட்ட தயங்கும் பெண்களுக்கு அன்று சமூகத்தில் எவ்வித மதிப்பும் இருப்பதில்லை. பணிக்கு செல்லும் பெண்கள் கூட காலையிலும், மாலையிலும் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டி விட்டு செல்வதுடன் பணி நேரத்திலும் காலையிலும், மாலையிலும் ஒவ்வொரு மணித்தியாலம் விசேட சலுகை விடுமுறையும் வழங்கக் கூடிய வகையில் இலங்கையின் சட்டங்கள் காணப்படுகின்றன.

ஒரு தாய் தனது குழந்தைக்கு பாலூட்டுவதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து பால்மாவை இறக்குமதி செய்வதை குறைக்கக்கூடிய வகையில் நாட்டிற்கு உதவி செய்கிறாள். எனினும் நாகரீகம் என்ற சாத்தான் இன்று பாரம்பரியங்களை தாய்மார் மறந்துவிடச் செய்யு மளவிற்கு வலுப்பெற்று விளங்குகிறது.

தங்கள் உடலை கட்டாக வைத்து, வசீகரமாக காட்சியளிக்க வேண்டு மாயின், தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் ஓரிரு மாதங்களில் கைவிடப்பட வேண்டும் என்று இன்றைய நவீன உலகின் தாய்மார் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். அவர்கள் தாய்ப் பாலை கொடுப்பதற்கு பதில் தங்கள் குழந்தைகளுக்கு வெளிநாடு களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவை கரைத்து போத்தல்களின் மூலம் பிள்ளைகளுக்கு ஊட்டுகிறார்கள்.

செயற்கை பாலை ஊட்டுவதை கூட தாய்மார் இன்று சரியாக செய் வதில்லை. அந்த பொறுப்பையும் தன்னுடைய தாய்க்கு அல்லது வீட்டிலுள்ள ஒரு பணிப்பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு, குழந் தையை பெற்றெடுத்த தாய் அவசரமாக பணிக்கு சென்றுவிடும் அல்லது ஓய்வெடுத்துக் கொள்ளும் பழக்கத்திற்கு அடிமையாகி யுள்ளார்கள்.

இதனால்தான் தாய்க்கும் சேய்க்கும் இடையே இருக்கும் தாய்ப்பாசம் குறைந்து, அந்தப் பிள்ளை தன்னை பராமரிக்கும் வேறொரு பெண்ணிடம் தாய்க்கு கொடுக்க வேண்டிய அன்பையும் பாசத்தை யும் செலுத்துகின்றது. ஒரு குழந்தைக்கு மூன்று முதல் நான்கு வருடங்கள் வரை தாய்ப்பால் தொடர்ச்சியாக ஊட்டி வளர்த்தால் அப்பிள்ளையின் மூளை வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் பேருதவியாக இருக்குமென்று சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப் பட்ட வைத்திய ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

குழந்தைப் பருவத்தில் சரியாக தாய்ப்பாலை குடிக்கும் வாய்ப்பை இழந்தவர்கள், பிற்காலத்தில் பெரியவர்களானவுடன் அதிகம் ஆத்திரமடைந்து வன்முறைகளில் ஈடுபடக்கூடிய மனோபாவத்தை கொண்டிருப்பார்கள் என்றும் வைத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

கருப்பையில் இருந்த தன் குழந்தைக்கு தன் உதிரத்தை இரத்தமாக ஊட்டி வளர்த்த தாய்மார் பிரசவத்தின் பின்னரும் போலி நாகரீக பழக்கவழக்கங்களை தூக்கியெறிந்துவிட்டு, தாய் என்ற கிடைப்ப தற்கரிய பெருமை தனக்கு கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தனது ஆசாபாசங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு, தான் பெற்றெடுத்த பிள்ளையை நல்ல முறையில் பாலூட்டி வளர்த்து அவர்களை எதிர்காலத்தில் நாட்டுக்கு பயன் தரக்கூடிய பிரஜைகளாக உருவாக்குவது அவசியமாகும்.

Published by

Leave a comment