தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரிய்யா பள்ளிவாயல் சம்பந்தமான நாம் அறியாத பல உண்மைகளும் மற்றும் பள்ளிவாயல் உடைப்பு ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றியும், இப்பள்ளிவாயல் விடயமாக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றியும் மிகத் தெளிவாக ‘சுஐப் எம். காசிம்’ என்பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை இன்றைய தினகரன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. எமது அபிமான வாசகர்களுக்காக அவற்றை இங்கு பிரசுரிக்கின்றோம்.
(நன்றி: தினகரன்)
இஸ்லாம் சாந்தியைப் போதிக்கும் மார்க்கம். சமாதானத்தை விரும்பும் மார்க்கம். பிற மதத்தவரையும் இனத்தவரையும் மதிக்கும் மார்க்கம். அந்த மார்க்கத்தை பின்பற்றும் இந்த நாட்டிலே வாழும் முஸ்லிம்கள் இதுகாலவரை எந்த மதத்தினரையும் தூஷித்ததில்லை. முஸ்லிம்கள் எங்கு வாழ்கின்றார்களோ அங்குள்ள ஏனைய இன மக்களை சோதரர்களாகவும் நண்பர்களாகவும் மதித்து உடன் இருந்து வாழும் கொள்கையுடையவர்கள். கொழும்பிலும் சரி தம்புள்ளையிலும் சரி முஸ்லிம்கள் இவ்வாறே வாழ்ந்து வருகின்றனர். வாழவும் விரும்புகின்றனர். தம்புள்ளையில் வாழும் சிங்கள மக்களோடு அங்குள்ள முஸ்லிம்களும் வர்த்தகர்களும் மிகவும் நெருக்கமாகவும் அந்நியோன்யமாகவும் வாழ்ந்து வருகின்றனர் என்பதை அண்மையில் நடந்த விரும்பத் தகாத அசம்பாவிதங்களின் போது அங்கு பூர்வீகமாக வாழ்ந்து வரும் சிங்கள மக்களின் உணர்வுகளில் இருந்து புரிந்துகொள்ள முடியும்.
தம்புள்ளை கந்தளம சந்தியில் அமைந்துள்ள கைரியாப் பள்ளிவாசல் 1902 ஆம் ஆண்டில் தொழுவதற்காக உருவாக்கப்பட்டது. கந்தளம கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விவசாய மையமென்பதால் அங்கு முஸ்லிம் வியாபாரிகள் வருவதும் போவதுமான செயற்பாடுகள் கடந்த நூறு ஆண்டுகளாக நடைபெறுகின்றன. முஸ்லிம்களின் இன்றியமையாத கடமையான தொழுகையை நிறைவேற்றுவதற்கு இந்தப் பள்ளி பயன்பட்டு வந்தது. வருகின்றது. இது மட்டுமின்றி கிழக்கிலிருந்து கொழும்பு, குருநாகலுக்கு செல்லும் பயணிகளும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வரும் பயணிகளும் தொழுகைக்கான நேரம் வந்ததும் கந்தளமவில் இறங்கி கைரிய்யாப் பள்ளியில் தொழுகை செய்வர். ஹஜ்ஜுக்கு செல்வோரும் தமது தொழுகையை நிறைவேற்றுவர். நீண்ட காலமாக முஸ்லிம்கள் சுஜுது செய்து வந்த இந்தப் பள்ளிவாசல் 2009 இல் ஜும்ஆ பள்ளியாக வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டது.
ஜெனீவா விவகாரம் இலங்கைக்கு பாதகமாக அமையக்கூடாது என்பதற்காகவும் நாட்டின் பாதுகாப்பு கருதியும் அங்குள்ள முஸ்லிம்கள் கைரிய்யா பள்ளிவாசலில் தொழுகை நடத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அத்தகைய பள்ளிக்குள் அத்துமீறிச் சென்று அங்கு ஜும்ஆத் தொழுகைக்காக ஒன்றுகூடியிருந்தவர்களை வெளியேறச் செய்தமை துரதிஷ்டவசமானது.
முஸ்லிம்கள் இந்த நாட்டில் மிகச் சிறுபான்மையினர். பெரிய இனங்களுடன் மோதும் ஆற்றல் அவர்களுக்கில்லை. இதுகாலவரை அவர்கள் மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபட்டதில்லை. கருத்து வேற்றுமைகள் இனங்களுக்கிடையே ஏற்படுவது வழக்கம் தான். அவை வன்முறையில் தீர்க்கப்பட வேண்டியவை அல்ல. சமாதானமாக பேசி சுமுகமான தீர்வுக்கு வருவதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு. அதைவிட்டு ஓர் இனத்தை ஒட்டுமொத்தமாகப் புண்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளமையையிட்டு முஸ்லிம்கள் பெரிதும் விசனப்படுகின்றனர்.
நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களின் மனங்கள் புண்பட்டுள்ளன என்பதை ஆங்காங்கே நடைபெறும் ஆர்ப்பாட்டங் களும் கண்டனப் பேரணிகளும், கடை யடைப்பு ஹர்த்தால்களும் வெளிப் படுத்துகின்றன. பேசித் தீர்க்க வேண்டிய ஒரு சிறிய விடயம், சம்பந்தப்பட்டவர்களின் பலாத்காரப் போக்கால் பாரிய மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம்கள் எதையும் தாங்கிக் கொள்வார்கள், அல்லாஹ்வை அனுதினமும் தொழுகின்ற பள்ளி மீது ஏற்படுத்தும் தீங்கினை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள ஆயத்தமாகவில்லை.
தம்புள்ளை கைரிய்யாப் பள்ளி சட்ட விரோதமாக அமைக்கப்பட்டதென இனாமலுவ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அரச அதிகாரிகளின் அறிக்கை தேரரின் கூற்று தவறானது எனச் சுட்டிக்காடுகின்றது.
கைரிய்யாப் பள்ளிவாசல் ரஜமகா விகாரையிலிருந்து 500 மீற்றர் தூரத்திலே அமைந்திருக்கின்றது. அதன் அருகே ஒரு மதப் பாடசாலையும் உள்ளது. பள்ளி அமைந்த காணியின் உறுதி தனியாரின் உரிமையாக இருந்து பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது. 84 – 3 இலக்க வரிப்பணச் சீட்டு 23.11.2001 இல் தம்புள்ளை பிரதேச செயலகத்தால் மஸ்ஜிதுக் காணி எனக் குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ளது. மஸ்ஜிதுல் கைரிய்யா ஜும்ஆப் பள்ளி எனும் பெயரில் மின்சாரக் கட்டணம் அறவிடப்பட்டுள்ளது.
பொருளாதார மத்திய நிலையம் இங்கிருப்பதால் பல பிரதேசங்களுக்கும் இந்நகருக்கூடாக பயணிக்கும் முஸ்லிம்கள் பள்ளியிலே தொழுகையும் ஜும்ஆவும் நடத்தி வருகின்றனர்.
பள்ளி அமைந்த இடம் புனித பூமி என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட போதும் புனித பூமியின் எல்லை இன்னும் சரியாக இனங்காணப்படவில்லை.
பள்ளிக் கட்டடம் அமானா சீற் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. 23 முஸ்லிம் குடும்பங்கள் இங்கு வாழ்கின்றன. பொருளாதார மத்திய நிலையம், பஸ் நிலையத்தில் 100 வரையான முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் இங்குள்ளன. 500 க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் இங்கு கடமை புரிகின்றனர். பிறருக்கு துன்பம் விளைவிக்கக் கூடாதென்பதற்காக பள்ளியில் ஒலிபரப்பு பாவனை இல்லை. முஸ்லிம்கள் அந்நியோன்யமாக ஏனையவர்களுடன் வாழ்கின்றனர். எனவே பிரச்சினைகளுக்கு முடிவுகாண விகாராதிபதி சம்பந்தப்பட்டோருடன் கலந்துபேசி சுமுகமாகப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். என அதிகாரிகளின் அறிக்கை தெரிவிக்கின்றது.
வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்து பள்ளிவாசலை முற்றுகையிட்டனர். குர்ஆன் பிரதிகள் உட்பட பல பொருட்கள் சேதமாக்கப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேறிய பின்னர் பொலிசார் மூடினர்.
அன்றைய ஜும்ஆத் தொழுகை நடைபெறவில்லை. சம்பவம் தொடர்பாக ஜம்இய்யதுல் உலமா ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டது. சம்பவத்தை அறிந்த முஸ்லிம் அமைச்சர்களான ஏ. எச். எம். பெளசி, ரிசாட் பதியுதீன், பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், மாத்தளை மேயர் ஹில்மி, ஹுனைஸ் பாரூக் எம்.பி., முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என். எம். அமீன் ஆகியோர் அடுத்த நாள் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று நிலைமைகளை அறிந்து கொண்டனர். பள்ளியை திறந்து தொழுகையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
கைரிய்யா பள்ளிவாசல் சட்டவிரோத கட்டடம் என ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தம்புள்ளை பிரதேச செயலாளருக்கு தமது கண்டனத்தை அமைச்சர்கள் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் நேர்மையாக நடந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர். பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா மகாநாயக்க தேரரைச் சந்திக்க முயன்றபோதும் அது முடியவில்லை.
சம்பவம் நடந்த மறுநாளான சனிக்கிழமை மாலை ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உலமாக்கள், முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். முக்கியமான 4 விடயங்கள் உட்பட எட்டுத் தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
1) சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் சம்பவத்தைக் கண்டித்து எழுதப்பட்ட கடிதத்தில் ஒப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
2) அசம்பாவிதங்களில் சம்பந்தப்பட்டவர்கள் இனங்கண்டு அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசைக் கோருதல். அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுதல்.
3) தம்புள்ளை பள்ளி விவகாரம் தொடர்பாக அரசியல்வாதிகளும் அமைப்புகளும் ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையில் கூட்டாக இயங்குவது.
4) பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றவும் வேறு இடத்தில் நிர்மாணிக்கவும் அனுமதியளிக்காதிருத்தல்.
ஞாயிறு காலை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தம்புள்ளை சென்று விடயங்களைக் கேட்டறிந்தார். பள்ளிவாசல் விவகாரத்தில் நீதியாகச் செயற்பட்ட அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
இதேவேளை வண. தலகம தம்மரன்ஸி தேரர் தலைமையிலான சர்வ மதக் குழு தம்புள்ளை சென்று அங்குள்ள முஸ்லிம் மக்கள் மற்றும் சிங்கள மக்களைச் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன் பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கும் வகையில் தம்மாலான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தது. இந்த குழுவில் சிவஸ்ரீ சுப்ரமணியக் குருக்கள், ஜனாதிபதி ஆலோசகர் ஹஸன் மெளலானா, அருட் தந்தை சரத் ஹெட்டியாராச்சி ஆகியோர் பங்கேற்றனர்.
தம்புள்ளை பள்ளி விவகாரம் தொடர்பாக மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் காணி, காணி அபிவிருத்தி அமைச்சருமான ஜனக பண்டார தென்னக்கோன் அவர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே இடம்பெறுகின்றன.
இனங்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம் தான். இப்பிரச்சினையை சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். பள்ளி சட்ட விரோதமானதல்ல. இந்தப் பள்ளிவாசல் நான் பிறப்பதற்கு முன்பிருந்தே இருக்கிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் நடந்து கொண்ட விதம் பிழையான வழிமுறை என்றே நான் கூறுவேன். சம்பவம் நடந்த அன்று அங்கே தொழுகைக்காக வந்த மக்களை வெளியேற்றியமையும் தவறானது. இத்தகைய வன்முறைப் போக்கு இனங்களுக்கிடையிலான நல்லுறவை பெரிதும் பாதிக்கும். நாடளாவிய ரீதியில் பெரிதும் விரிசலை ஏற்படுத்தும். தம்புள்ளை வாழ் சிங்கள் மக்கள் இந்த சம்பவத்தை விரும்பவில்லை. பள்ளி அகற்றப்படக்கூடாது என்பதை பிரதமருக்கும் பாதுகாப்புச் செயலளாருக்கும் தெரிவித்துள்ளேன். ஜனாதிபதி வெளிநாடு செல்லும் முன்னர் இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீருங்கள் பெரிதுபட விடவேண்டாம் என்றே கூறிச் சென்றார் என்று குறிப்பிட்டார்.
ஜனாதிபதியவர்கள் தமது ஆட்சிக் காலத்திலே எந்த இனத்தையும் இரண்டாந்தரமாகக் கருதவில்லை. எல்லோரும் இலங்கையர், ஒரே இலங்கை மாதா பெற்ற பிள்ளைகள். நமக்குள்ளே பிரச்சினைகள் தேவையில்லை. நாம் ஒற்றுமையாக உடனிருந்து வாழ வேண்டும் என்ற கொள்கையுடன் செயற்படுபவர். அத்தகைய பெருமனம் கொண்ட ஜனாதிபதி இந்நாட்டு முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்த மாட்டாரென்றே முஸ்லிம்கள் பெரிதும் நம்புகின்றனர். முஸ்லிம்களின் ஆன்மீக இயக்கமான ஜம்இய்யதுல் உலமா சபை ஜனாதிபதி மீதும் அரசின் மீதும் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளது. ஜம்இய்யதுல் உலமா நாட்டுப் பற்றுடன் செயற்படுகின்றது. எனவே தான் இலங்கை தொடர்பான பிரச்சினை ஜெனீவாவில் நடைபெற்ற போது இலங்கையை ஆதரிக்குமாறு முஸ்லிம் நாடுகளை வேண்டிக் கொண்டது. அது போலவே ஜம் இய்யா இந்தப் பள்ளிப் பிரச்சினையை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தது. அது மட்டுமல்ல, இந்தப் பிரச்சினையை முஸ்லிம்கள் அமைதியாகத் தீர்க்க வேண்டுமேயொழிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக் கூடாது. எந்தக்காலமும் இந்த நாட்டில் வாழும் சிங்கள சகோதரர்களோடு நாம் ஒற்றுமையாக வாழ வேண்டியவர்கள். ஒற்றுமையைக் கடைப்பிடிப்போம் என இந்நாட்டு முஸ்லிம்களை ஜம்இய்யா உருக்கமாக வேண்டிக்கொண்டது. அது மட்டுமல்ல முஸ்லிம் பாராளுன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் இயக்கங்களும் ஜம்இய்யாவின் ஆலோசனைக்கிணங்கவே நடவடிக்கையில் இறங்க வேண்டுமென வேண்டிக்கொண்டது.
பள்ளி என்பது புனிதமானது, அது இறைவனைத் தொழும் இடம். அதை பின்னர் நிர்மாணம் செய்யும் கைங்கரியத்துக்கு அல்லாஹ்வே போதுமானவன். முஸ்லிம்களாகிய நாம் பொறுமை காப்போம். தொழுகையில் ஈடுபடுவோம். நோன்பு நோற்போம். எமது உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பளிக்குமாறு இறைவனை வேண்டி நிற்போம் என ஜம் இய்யா முஸ்லிம் உலகத்தை வேண்டி நிற்கிறது. ஜம் இய்யா போல ஒரு நிதானமான அமைப்பு முஸ்லிம்களின் நலனுக்கு செயற்படுவதையிட்டு நாம் பெருமையடைகின்றோம்.
தம்புள்ளை விடயத்தை கருப் பொருளாகக்கொண்டு குட்டையைக் குழப்ப சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் கங்கணம் கட்டி நிற் கின்றன. முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தாம் ஒரு இஸ்லாமியன் என்ற அடிப்ப டையிலும் சமூகத்தின் மீதுள்ள பற்றின் காரணமாகவும் தெரிவிக்கும் கருத் துக்களை பூதாகரமாக்கி சிண்டு முடியும் கைங்கரியங்களில் சில ஊடகங்கள் ஈடுபடுகின்றன. அரசுக்கும் அரசு சார்ந்த அமைச்சர்களுக்கும் உறுப்பினர்களுக்குமிடையே கருத்து முரண்பாட்டையும் பகைமையையும் ஏற்படுத்த சந்தர்ப்பவசமாக சோடிப்புச் செய்திகளை ஊடகங்கள் வெளியிடு கின்றன. எதிரணி சார்ந்த சில அரசியல் வாதிகள் கூட அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்ற வினாவெழுப்பி மக்களை திசை திருப்புகின்றனர். இத்தகைய போக்குக்கு எடுபடுவது முஸ்லிம்களின் ஒற்றுமையை சிதைக்கும் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். வன்முறை நமக்கு வேண்டாம். சன்மார்க்க வழிநின்று சாதனை புரிவோம்.
Leave a comment