‘ஏனெனில் சிங்கள பேரினவாத இவ் அரசாங்கம் உங்களை தேவைக்கு பயன்படுத்திவிட்டு தேவை முடிந்ததும் தூக்கி எறிந்து விடும் சிறுபான்மை இன மக்களான நாம் இவ்வேளையில் எம் அடிப்படை உரிமையை பாதுகாத்துக் கொள்வதும் அவசியமானதாகும்’.
“தம்புள்ளை பகுதி புனித பிரதேசம் என்ற வகையில் ஒரு சிறுபான்மை இன மக்களான இஸ்லாமிய மக்களின் பள்ளிவாசலை தங்கள் சுயநலம் கருதி பௌத்த மதகுருமார்களும், ஹெல உறுமயவும், பௌத்த தீவிரவாதிகளும் அகற்ற முற்படுவதை தமிழ் பேசும் சமூகம் என்ற வகையிலும், சிறுபான்மை இனம் என்ற வகையிலும், ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இவ்வாறான நடவடிக்கைகளை கௌதம புத்த பகவான் பார்த்திருந்தால் தமது பௌத்த போதனைக்கு எதிராக செயற்படும் இவர்களில் செயற்பாடு கண்டு இரத்தக் கண்ணீர் வடித்திருப்பார்” என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அவ்வறிக்கையில் தொடர்ந்து தெரிவிக்கையில்,
‘மகிந்த சிந்தனையில் சிறுபான்மை இன மக்களின் மதச் சுதந்திரத்தை பறித்து அவர்களது மதவழிபாட்டு தலங்களை இடிப்பதும், பௌத்த மத வழிபாட்டு தலங்களை தாபிப்பதும் இடம் பெற்றிருக்க வேண்டும் என தாம் சந்தேகிப்பதாக கூறியதுடன்;. இந்நாடு பௌத்தமத நாடு என கூறிக் கொண்டு சிறுபான்மை சமூகத்தின் அடிப்படை சுதந்திரங்களை பறிப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
இந்நாட்டின் மதவிவகார அமைச்சராக விளங்கும் பிரதமர் அவர்கள் பௌத்த மதத்தின் உரிமையை பாதுகாப்பதிலும், அதை வளர்ப்பதிலுமே கவனம் செலுத்துகின்றனார் என்பதும் ஏனையை இன மக்களின் மத உரிமையை பாதுகாக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்பதையும் அவர் தம்புள்ளை புனித பகுதியில் இருந்த பல வருடங்களாக பழைவாய்ந்த இஸ்லாமிய வழிபாட்டுத்தலம் அகற்றப்பட்டு வேறு இடங்களில் அமைக்கப்பட வேண்டும் என கட்டளை பிறப்பிப்பதன் மூலம் அறிய முடிகின்றது.
இவ்வகையில் இஸ்லாமிய அரசியல் வாதிகள், மற்றும் தமிழ் அரசியல் வாதிகள் இன மத கட்சி பேதமின்றி அரசாங்கத்தின் திட்டமிட்ட இச்சதிச் செயலுக்கு எதிராக குதித்தெழ வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின் இந்து ஆலயங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல இடங்களிலும் இடித்து தமது பௌத்த விகாரைகளை தாபித்த அரசாங்க ஹெல உறுமய கட்சியும், பௌத்த பிக்குகளும், அடுத்த படியாக இஸ்லாமிய வழிபாட்டு தலங்களில் தமது மகிந்த சிந்தனை திட்டத்தை முன்வைத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் குஞ்சிதபாதமலை பாலமுருகன் ஆலயம், கல்லடி நீலியம்மன் ஆலயம், கன்னியா வெந்நீர்ஊற்று விநாயகர் ஆலயம், சிவன் ஆலயம் உட்பட பல இந்து ஆலயங்களை இடித்து அங்கு பௌத்த விகாரைகளை அமைத்ததுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலும் குடும்பிமலை சந்தி, புணாணை, குடும்பிமலை உட்பட சில இடங்களில் உள்ள இந்து ஆலயங்களை அகற்றி தமது பௌத்த விகாரையை தாபித்ததுடன் புதிதாக 23 பௌத்த விகாரைகளை ஏற்படுத்தி உள்ளனர்.
அத்தோடு அம்பாறை மாவட்டத்த்ப்ல் சங்கம கண்டி விநாயகர் ஆலயத்தை நீக்கி பௌத்த விகாரை தாபிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்துக்களின் பூர்வீக பாரம்பரிய இடங்களின் அடையாளங்களை தொல்பொருள் பகுதியாக பிரகடனப்படுத்தி அதனை பௌத்தர்களின் வாழ்விடங்களாகவும், வணக்கஸ்தல பகுதியாகவும் மாற்ற முற்படுகின்றனர்.
இவ்வாறே வடக்கு தமிழர் தாயக பகுதிகளில் பௌத்த மதத்தலம் தாபிக்கும் நடவடிக்கையும், இந்து ஆலயங்களை உடைக்கும் நடவடிக்கையும், தமது படயினரை பயன்படுத்தி இந்து வணக்கத்தலங்களின் புனிதத் தன்மையை சீரழிக்கும் நடவடிக்கையையும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
ஹெல உறுமய கட்சியினரும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பகுதியில் கவனம் செலுத்துவதை நீக்கி வடக்கு கிழக்கு பகுதிகளிலே தமது மதப்பரப்பல், இனப்பரப்பலை ஏற்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டி அரசாங்க அமைச்சர்கள் மூலமும், அரச படைகள் மூலமும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வடக்கே கொக்குளாய் விநாயகர் ஆலயம், திருக்கேதீஸ்வர புனித பகுதியில் பௌத்த விகாரை தாபிக்கப்படுவதுடன் இன்னும் பல பௌத்த விகாரைகள் முளைக்கின்றது. இவ்வாறான நடவடிக்கையை கௌதம புத்த பகவான் பார்த்திருந்தால் தமது பௌத்த போதனைக்கு எதிராக செயற்படும் இவர்களில் செயற்பாடு கண்டு இரத்தக் கண்ணீர் வடித்திருப்பார்.
இவ்வேளை ஹெல உறுமயவில் உள்ள பௌத்த பிக்குகள் சிலர் பௌத்த மதகுருவாக இருந்து கொண்டு இனவாதமும், மதவாதமும் கக்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இந்துக்களை வேதனைப்படுத்தியதுடன் இஸ்லாமிய மக்கள் மீதும் கை வைத்துள்ளனர்.
இதனடிப்படையில் இஸ்லாமிய இன மக்களின் வழிபாட்டு தலங்களாக விளங்கிய இரத்தினபுரி பள்ளிவாசல், அநுராதபுரம் பள்ளிவாசல் போன்றவை இவ் பௌத்த தீவிரவாதிகளால் தீவிரமாக தாக்கப்பட்டது. தற்போது தம்புள்ள பள்ளிவாசலுக்கு வந்துள்ளனர். இன்னும் பல பள்ளி வாசலில் கை வைக்கமாட்டார்கள் என்று கூற முடியாது.
எனவே அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய அரசியல்வாதிகள் தங்கள் சுயநலங்களை பாராது இஸ்லாமிய மக்களின் அடிப்படை மத உரிமையாக அமைந்த நீண்டகால வரலாறு கொண்ட பள்ளிவாசலை தம்புள்ளையில் இருந்து அகற்ற எடுக்கும் நடவடிக்கைக்கு தங்களது பூரண எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்க முன்வர என வேண்டுகின்றேன்.
அதுமட்டுமின்றி மகிந்த சிந்தனையில் இஸ்லாமிய அரசியல் வாதிகளை தமது கையாளாக மாற்றி தமது இலக்கை அடைய முயற்சிக்கும் சிங்கள பேரினவாத அரசாங்கம் ஒரு காலத்தில் தமிழர் நிலை ஓரளவு முன்னேற்றம் கண்டதும் தமது திட்டம் தோல்வி காணும் வேளையில் தம்முடன் இணைந்துள்ள இஸ்லாமிய அரசியல் வாதிகளையும், மக்களையும் தூக்கி எறிவார்கள் என்பது அசைக்க முடியாத உண்மையாகும்.
இதை இஸ்லாமிய அரசியல்வாதிகள் உணர்ந்து எதிர்க்கட்சியில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுடன் இணைந்து சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திலும், அதற்கு அப்பாலும் பெறும் முகமாக மேற்கொள்ளும் நடவடிக்கையில் இணைந்து செயற்பட முன்வரவேண்டும்.
ஏனெனில் சிங்கள பேரினவாத இவ் அரசாங்கம் உங்களை தேவைக்கு பயன்படுத்திவிட்டு தேவை முடிந்ததும் தூக்கி எறிந்து விடும் சிறுபான்மை இன மக்களான நாம் இவ்வேளையில் எம் அடிப்படை உரிமையை பாதுகாத்துக் கொள்வதும் அவசியமானதாகும்.
ஆகவே தம்புள்ளையில் உள்ள இப்பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற விடாது இஸ்லாமிய வழிபாட்டு உரிமையை பாதிக்க செய்யும் இவ் அரசாங்கத்துக்கு எதிராக எல்லா இஸ்லாமிய மக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டு இவ்விடயத்தில் வெற்றி காண வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
-Tamilmirror
Leave a comment