முஸ்லிம் சமூகத்தை ஹிஸ்புல்லா காட்டிக்கொடுத்து விட்டார் முஜீபுர் ரஹ்மான்

-Tamilmirror

தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டமை தொடர்பில் பொய்யான அறிக்கையினை ஊடகங்களுக்கு வழங்கியதன் மூலம் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்து விட்டார் என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார்.
இதன் மூலம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கிழக்கு மாகாண சபை தேர்தல் ஆகியவற்றில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டமை தொடர்பாக முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற போது மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேல் மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், பைரூஸ் ஹாஜி, கலாநிதி நல்லையா குமரகுருபரன், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசிங்க மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய முஜிபுர் ரஹ்மான்,

“இந்த அரசாங்கத்திலேயே அதிக முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர். தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டமை தொடர்பாக இந்த அமைச்சர்கள் அறிக்கைகள் மாத்திரமே வெளியிட்டுள்ளனர்.

ஆனால், இதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறே கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அனுராதபுரத்தில் சியாரம் உடைக்கப்பட்ட போதும் இந்த முஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாறு அறிக்கைகள் மாத்திரமே விட்டனர். அவர்களினால் எதுவுமே செய்யமுடிவில்லை.

இதனால் இந்த முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக அலரி மாளிகைக்கு சென்று தங்களின் அமைச்சு பதவி, பாதுகாப்பு மற்றும் சொகுசு வாகனங்களை கையளித்துவிட்டு வர வேண்டும். இதனையே முஸ்லிம் சமூகம் இன்று எதிர்பார்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்;காவினால் பிரேரணை முன்வைக்கப்பட்ட போது, ஆதரவு தேடி அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களோ, கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையோ ஜெனீவா செல்லவி;ல்லை.

ஆனால் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் மற்றும் பிரதி தலைவர் ஆகியோர் ஜெனீவா சென்று முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை பெற்றுக்கொடுத்தனர். அதற்கு நன்றி கடனாகவே இந்த பள்விலுவாசல் தாக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளிவாசல் உடைக்கப்பட்டு ஐந்து நாட்கள் நிறைவடையும் நிலையில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. உரிய குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவில்லை.

இந்த பள்ளிவாசல் 1963ஆம் ஆண்டு முதல் குறித்த இடத்திலிருந்து இயங்கி வருகின்றது. இப்பள்ளிவாசலினால் பல தசாப்பதங்களாக தம்புள்ளை பிரதேச சபைக்கு வருமான வரி, மின்சார சபைக்கு மின்சார கட்டணம் ஆகியன செலுத்தப்பட்டுள்ளது.

பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய விவகார திணைக்களின் பிரிவான வக்பு சபையில் இந்த பள்ளிவாசல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இந்த பள்ளிவாசலினை சட்டவிரோதம் என எவ்வாறு தெரிவிக்க முடியும். இதன் முஸ்லிம் சமய விவகார திணைக்கள அரச நிறுவனமில்லையா என்ற கேள்வி எழுகின்றது.

இதனால் இப்பள்ளிவாசலினை உரிய இடத்திலேயே அமைய அரசாங்கம் ஆவணம் செய்ய வேண்டும்” என்றார்.

Published by

Leave a comment