பொறுமை காத்து துஆ பிரார்த்தனையில் ஈடுபடுமாறு முஸ்லிம் தலைவர்கள் வேண்டுகோள்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் வழிகாட்டலுக்கு அமைய முஸ்லிம்கள் பொறுமை காத்து துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டுமென முஸ்லிம் அமைச்சர்களும், பிரதியமைச்சர்களும், எம்.பிக்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

துஆ பிரார்த்தனை தவிர்ந்த வேறு எதுவித ஆட்சேபனை நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தம்புள்ள கைரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் கடந்த வெள்ளியன்று சிறு குழுவினரால் தாக்கப்பட்டது தொடர்பாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி தலைமையில் கடந்த 25ம் திகதி கூடி ஆராய்ந்தனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம். அதாவுல்லா, மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, பிரதியமைச்சர்கள் ஏ.ஆர்.எம். அப்துல் காதர், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.எச்.எம். அஸ்வர், எம்.ரி. ஹஸனலி, ஹுனைஸ் பாரூக், பைசல் காசிம், முன் னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் கையெழுத்திட்டு மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளனர். இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குறித்த பள்ளிவாசல் மீதான தாக்குதலானது திட்டமிட்டு ஒரு சிறிய கும்பலினால் மேற்கொள்ளப்பட்டிருப்பது இலங்கை வாழ் முஸ்லிம்களின் மனதை வெகுவாகப் பாதித்துள்ளது.

மிக விரைவில் முஸ்லிம் அமைச்சர்கள், ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் நிருவாகிகள் அடங்கிய குழு ஜனாதிபதியைச் சந்தித்து எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுக்கு வருவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, முஸ்லிம் மக்கள் பொறுமை காத்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டலிற்கமைய துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும், இது தொடர்பில் வேறு விதத்தில் எமது எதிர்ப்புகளைத் தெரிவித்து ஏனையவர்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தா வண்ணம் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளுவ தெனவும் முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

-Thinakaran

Published by

Leave a comment