நோக்கம் தவறிய ஹர்த்தால்….

தம்புள்ளை பள்ளிவாயல் இடிப்பு சம்பவத்தைக் கண்டித்து அம்பாறை மாவட்டத்திலும் காத்தான்குடியிலும் இன்று (26-04-2012) அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தால் எதிர்ப்புக் கண்டணம் குறிப்பாக இலங்கை முஸ்லிம்களுக்கு தோல்வியில் முடிவடைந்துள்ளது.

வெளிநாட்டிலும் உள்நாட்டிலிருந்தும் இயக்கப்படும் சமூக இணையத்தளங்களின் செய்திகளால் வெளிநாட்டில் வசிக்கும் எமது சகோதர்களுக்கு உள்ளுர் செய்திகளைக்கண்டறிய ஓர் ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் இணையத்தளங்களில் தனது நேரத்தை செலவு செய்து வருகின்றனர். உலக முஸ்லிம்கள் வரை கண்டணம் எழுந்துள்ள தம்புள்ளை பள்ளிவாயல் உடைப்புக்கு இலங்கையில் வாழும் முஸ்லிம் சகோதரர்களைப் பார்க்கிலும் கடல்கடந்து வாழும் முஸ்லிம் சகோதரர்களின் கண்டணங்களும் கவலைகளும் அளவிடாதவை! மெச்சத்தக்தவை!!இன்றைய ஹர்த்தால்பற்றி இணையத்தளங்கள் செய்திகளும் படங்களும் வெளியிட்டிருந்தன. இன்று சுப்ஹூ தொழுகையில் இருந்து ஊரில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய வெளியூரிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான எமது சகோதரர்கள்  இணையத்தளங்களில் முழ்கி இருந்தனர்.

உண்மையில் அப்படி என்னதான் நடந்தது?

இன்று ஹர்தத்தால் மற்றும் நோன்பு நோற்பது பற்றி ஊரில் அரைவாசிப் பேருக்குத் தெரியாது. இது ஒரு கசப்பான உண்மை.
நோன்பா? ஏன்? எதற்கு என பல தாய்மார்களும் சகோதரர்களும் இன்று பிற்பகலில் வினா எழுப்பி இருந்தமையும்   பாடசாலைக்கு தன் பிள்ளைகளை வழமை போன்று அனுப்பி வைத்திருந்தமையும் நல்லதோர் எடுத்துக்காட்டாகும். ஹர்த்தாலுக்கான முன்னேற்பாடுகளோ கண்டண அறிக்கைகள், பதாதைகளோ காணமுடியவில்லை!

நோன்புபற்றியோ ஹர்த்தால் பற்றியோ காத்தான்குடி சம்மேளனமோ அல்லது ஜம்இய்யத்துல் உலமாவோ மக்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்திருக்கவில்லை. சில பள்ளிவாயல்களில் மாத்திரம் அறிவித்திருந்தன. அப்படி அறிவித்திருந்தும் அதாவது வியாழக்கிழமை நோன்பு நோற்கும்படியும் வெள்ளிக்கிழமை ஜூம்ஆவுக்குப் பின்னர் இடம்பெரும் துஆப்பிரார்த்தணை பற்றியும் அறிவித்திருந்து. இருந்தும் வர்த்தக நிலையங்களை திறப்பதா? மூடுவதா? பாடசாலைகள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் திறக்கப்படுமா? என்ற அறிவிப்புக்கள் இடம்பெற்றிருக்கவில்லை. இதனால் மக்கள் தளம்பல் நிலையிலேயே இருந்தனர். இதனால் இந்த ஹர்த்தாலும் நோன்பும் அர்த்தமற்ற செயலாக இன்று காத்தான்குடியை சித்தரித்துச் சென்றிருக்கின்றது.

இதே போன்று  ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பகுதிகளில் ஹர்த்தால் தொடர்பான அறிவித்தல்கள் கிடைக்காத நிலையில் அப்பகுதியில் இன்று காலை முதல் வர்த்த நடவடிக்கைகள் இடம்பெற்றன.

எனினும் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னரே ஏனைய இடங்களில் ஹர்த்தால் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதை கேள்வியுற்று தாமும் கடைகளை பூட்டியதாக ஓட்டமாவடி வர்த்தகர் ஒருவர் தெரிவித்ததாகவும்

முறையான வகையில் உரிமை கோரப்படாமல் இந்த ஹர்த்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாகவே சில இடங்களில் இது தொடர்பிலான அறிவித்தல்கள் கிடைக்கவில்லையென ஓட்டமாவடி பள்ளிவாயலை சேர்ந்த மௌவி ஒருவர் தெரிவித்ததாகவும் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

அரசாங்கத்துக்கு ஆதரவான ஆரப்பாட்டங்களுக்கு முன்வரும் உலமாக்களும் சம்மேளன உறுப்பினர்களும், பிரதி அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது ஆதரவாளர்களும், தவிசாளர், உப தவிசாளர், நகர சபை உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தொண்டார்வ நிறுவனங்களும்  மற்றும் ஊருக்கும் சமூகத்துக்கும் ஒரு முன்மாதிரி அரசியலை ஸ்தாபிக்க வந்த பிரதான எதிர்க்கட்சியான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் தம்புள்ளை பள்ளிவாயல் உடைப்புக்கு குரல் கொடுக்கத்தவறி இருந்தனர்.

இந்நிலையில் பிரதான வீதியில் மூடப்பட்டிருந்த சில கடைகள் பிற்பகல் வேளையில் திறக்கப்ட்டது. உணவுச் சாலைகளும் சிற்றுண்டிச்சாலைகளும் திறக்கப்பட்டன. ஊருக்குள் இருக்கும் அநேகமான கடைகள் வழமைபோல் திறக்கப்பட்டதாகவே காணப்பட்டது.
1990 காலப்பகுதியில் எமது பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்கு தொடர்ந்து 3 நாட்கள் நோன்பிருந்து பிராரத்தணைகளில் ஈடுபடுமாறு சம்மேளனம் மற்றும் ஜம்மிய்யத்துல் உலமா என்பன மக்களை கேட்டுக்கொண்ட போது ஊரில் தொன்னூறு சதவீதமானோர் நோன்பு பிடித்திருந்தனர். இப்தார் ஏற்பாடுகளும் விசேட பிரார்த்தணைகளும் மெத்தைப் பள்ளிவாயலில் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனவே இப்படி ஒரு நிலையே இன்றைக்கும் நடக்கும் என  வெளிநாட்டில் இருப்பவர்களும் வெளியூர்களில் இருப்பவர்களும் தொலைபேசிமூலமாக மணிக்கொரு தடவை கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் ஊரில் இருப்பவர்கள் வழமையைவிட மகிழ்ச்சியாகவே 2 நாட்கள் விடுமுறையை கடற்கரையிலும் சந்திகளிலும் பொழுதைக் களிப்பது அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது.

நாளையுடன் ஒரு வாரமாகும் தம்புள்ளை பள்ளிவாயல் விடயமானது இதுவரைக்கும் முஸ்லிம் இயக்கங்களாலும் முஸ்லிம் அரசியல் தலைவர்களாலும் கண்டிக்கப்படாதது விமர்சிக்கத்தக்கதே!

எனவே இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் இவ்வாறான உணர்வுகளில் பொறுமையைக் கையாண்டு ஊர்த்தலைமைக்கு கட்டுப்பட்டு ஊர்முடிவுக்கு ஏற்ப தங்களது செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ‘உங்கள் காத்தான்குடி‘ உங்களைக் கேட்டுக் கொள்கின்றது. என்னதான் இஸ்லாமிய உணர்வுகள் எங்களிடத்தில் இருந்தாலும் இந்நாட்டில் ஏற்கனவே சிறுபாண்மையாக இருந்தவருகிறோம். இதிலும் இன்னும் தனித்து செயற்படுவது எங்கள் தலையில் நாங்களே மண்ணள்ளிப் போடுவதற்கு சமமாக இருக்கும்

எங்கள் உரிமைக்காக எங்கள் உரிமைகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசாங்க ஆசனங்களில் இருப்போரும், பிரதான எதிர்க்கட்சி ஆசனங்களில் இருப்போரும் ஊர்த்தலைமையும் என்ன முடிவை தம்புள்ளைப் பள்ளிவிடயமாகத் தரப்போகின்றது என்பதை பொறுமை கொண்டு நோக்குவோம்.

யா அல்லாஹ்! எங்கள் சமூகத்தின் நல்லகாரியங்களை அங்கீகரிப்பாயாக!

Published by

Leave a comment