தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக திங்கட்கிழமை தன்னால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளால் ஏதாவது தவறான உணர்வுகள் மற்றும் சிந்தனைகள் ஏற்பட்டிருந்தால் மனம் வருந்துகின்றேன் என பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
குறித்த ஜும்ஆ பள்ளிவாசலுக்கு எந்த சேதமும் விளைவிக்கப்படவில்லை என பிரதியமைச்சர் ஹிஸ் புல்லா கூறியதாக திங்கட்கிழமை செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த அறிக்கைக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒவ் ஸ்ரீலங்கா ஆகியன இணைந்து கண்டனம் தெரிவித்தன.
இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா இரு தரப்பினருக்கும் இடையில் சுமுகமான நிலையை ஏற்படுத்துவதற்காக பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில், பள்ளிவாசல் இடித்து தகர்க்கப்பட்டது என ஊடகங்கள் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றன. இது தொடர்பாக சிங்கள ஊடகமொன்று தொடர்பு கொண்டு பள்ளிவாசல் உடைத்து நொறுக்கப்பட்டமை தொடர்பில் உங்களது கருத்து என்ன என சிங்களத்தில் வினவியது. இதற்கு சிங்களத்திலேயே பிரதி அமைச்சர் பதிலளித்த போது, பள்ளிவாசல் இடித்து நொறுக்கப்படவில்லை என்று சொன்னார்.
ஆனால் உண்மையிலேயே அந்த பள்ளிவாசல் சில பெளத்த தேரர்கள் தலைமையில் வந்த குழுவினரால் தாக்கப்பட்டதுடன் பொருட்களும் சேதமாக்கப்பட்டன. ஆனால், பள்ளிவாசல் இடித்து நொறுக்கப்படவில்லை என்ற செய்தியை தான் அவர் சொன்னார். ஆனால் ஊடகங்கள் அச்செய்தியை திரிபுபடுத்தி வெளியிட்டிருந்தன.
எனவே, இது தொடர்பாக ஏதாவது தவறான உணர்வுகள் மற்றும் சிந்தனைகள் ஏற்பட்டிருந்தால் மனம் வருந்துவதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
-Thinakaran
Leave a comment