தம்புள்ளை பள்ளிவாயலை அகற்றக்கோரி புதுவகையான செய்திகள் தினம் தினம் ஒன்றுக்கு ஒன்று மாற்றமாக வெளியாகி வருகின்ற நிலையில், இந்நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் மக்களிடையே பாரிய சந்தேகங்கள் எழுந்தவண்ணமிருக்கின்றன.
மிக இக்கட்டான தீர்வுகள் எடுக்கவேண்டிய இத்தருணத்தில் கௌரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தென்கொரியாவுக்கு பயணம் செய்துள்ளார். ஜனாதிபதி அவர்கள் இக்கட்டான நிலையை எதிர்நோக்கியபோது அவருக்கு தோள்கொடுத்த இந்நாட்டு முஸ்லிம்களுக்கு அவர் என்ன பிரயத்தனம் செய்வார் என்பதையும் எதிர்பார்திருக்கும் நிலையில், ஜனாதிபதி அவர்களிடமிருந்து இதுவரைக்கும் தம்புள்ளை பள்ளிவாயல் உடைப்பு மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி எந்தக் கருத்துக்களும் வெளியாகவில்லை என்பதும் ஓர் கவலையான விடயம்.
இதற்கிடையில் சென்றவாரம் இலங்கைக்கு வருகை தந்திருந்து செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்ட பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் சென்று ஒரு வாரத்திற்கிடையில் இலங்கை- இஸ்ரேல் பேச்சுசவார்ததைகள் அண்மையில் இடம்பெற்று வருவதும் இன்னுமொரு சந்தேகத்தை இலங்கை முஸ்லிம்களிடத்தில் தோற்றுவித்துள்ளது.
பிரதமரின் ஆலோசனைக்கிணங்க மறைமுகமான சில விடயங்கள் தம்புள்ளை பள்ளிவாயல் விடயமாக இரகசியமாக ஆராயப்பட்டிருந்தும் அரசில் அங்கம் வகிக்கும் முன்னணி அமைச்சர்களான A.H.M. பௌசி, அலவி மௌலான மற்றும் பிரதி அமைச்சர் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் மேற்படி கூட்டம் பற்றி தமக்குத் தெரியாது என்றே ஊடகங்களுக்கு பதில் அளித்திருந்தனர்.
இதற்கிடையில் 3 மாதம் வரைக்கும் எந்தப்பிரச்சினையும் இல்லாமல் குறித்த பள்ளிவாயல் இயங்க முடியும் என்பதாகவும், ஆறுமாதத்துக்குள் வேறு இடத்தில் பள்ளிவாயல் அமையப் பெறும் எனவும் வேறுபட்ட செய்திகள் அரச தரப்பால் தெரிவிக்கப்பட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.
இலங்கையின் பிரதான முஸ்லிம் அமைப்புக்களான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, தரீக்கா அமைப்புக்கள், தப்லீஹ் ஜமாஅத், தௌஹீத் ஜமாஅத் போன்றனவை இன்னும் இந்த பள்ளிவாயல் உடைப்பு அல்லது அகற்றல் சம்பந்தமாக எந்த அதிருப்திகளையும் வெளியிடாமல் மௌனம் காப்பதும் பல சந்தேகங்களைத் தோற்றுவித்திருக்கின்றது. ஆனால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தம்புள்ளை பள்ளிவாயல் உடைப்பு பற்றி கூறிய அவரது கருத்துக்கு மாத்திரம் ஓர் கண்டண அறிக்கையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நேற்று வெளியிட்டிருந்தது.
இலங்கையில் உள்ள முஸ்லிம்களிடம் காலில் விழும் அளவுக்கு இலங்கை பேரின அரசாங்கமும் அதில் அங்கம் வகிக்கும் எமது முஸ்லீம் அமைச்சர்களும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை அணுகி, வெள்ளிக்கிழமை ஜூம்ஆ பிரசங்கங்கள் ‘நாட்டுப்பற்று’ என்ற தொணியில் இலங்கையிலுள்ள சகல ஜூம்ஆ பள்ளிவாயல்களிலும் இடம்பெறச் செய்யுமாறு கேட்டனர். அதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் சம்மதித்து இலங்கையிலுள்ள அனைத்துப் பள்ளிவாயலுக்கும் ‘நாட்டுப்பற்று’ எனும் தொணியில் ஜூம்ஆ இடம்பெறச்செய்ய கேட்டுக்கொண்டது. மிம்பர்களும் முழங்கின! ஆர்ப்பாட்டங்கள் கொதித்தெழுந்தன. அரபுநாடுகளும் தோள் சேர்ந்தன! தலைநகரிலும் முஸ்லிம் ஊர்களிலும் அரசாங்க ஆசனங்களில் அமர்ந்திருக்கும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், பொம்மை எரிப்புக்களும் இலங்கையின் பலபாகங்களிலும் இடம்பெற்றன. அமெரிக்க எதிர்ப்புக்களும் உணர்வுகளும் தூண்டப்பட்டன.
ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ அவர்களின் பிறந்தநாளுக்கும் அவரது சுகத்துக்கும், அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இலங்கை வெற்றிபெறவும் சங்கைக்குரிய உலமாக்களால் துஆப் பிரார்த்தணைகளும் இடம்பெற்றன!
ஆனால்…. கண்ணுக்கு முன்னால் தெட்டத்தெளிவாக பள்ளிவாயல் உடைப்பு, ஆர்ப்பாட்டக்காரர்களும் சிங்கள மதகுருமாரும் அத்துமீறி பள்ளிவாயலுக்குள் நுழைதல் போன்ற ஆதாரபூர்வமான ஒளிநாடாக்கள், புகைப்படங்கள், மக்கள் சாட்சிகள் இருந்தும் உண்மைகள் மறைக்கப்பட்டு வருகின்றன. சம்பவங்கள் திரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. ‘நடந்துவிட்டது… எங்களால் எப்படி வாய் திறப்பது?’ என்று எமது முஸ்லிம் அமைச்சர்கள் பலர் தனக்குத்தானே கேட்பதும் மக்களுக்கு புரியாததல்ல!
எனவே தற்பொழுது மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்கள் இலங்கையில் இல்லாததால், இந்த விடயத்தை முன்னெடுத்துச் செல்ல யாரும் முன்வரமாட்டார்கள். இதேபோல் ஜனாதிபதி அவர்கள் வந்த பின்னரும் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு அமையும் என்பதும் தெளிவற்ற ஒன்றாகவே இருக்கும். ஏனெனில் ‘புனித பூமி’ யை விட ‘மஞ்சல்காவியுடை’ இந்நாட்டில் சரித்திர மாற்றங்களைத் தோற்றுவிக்கும் என்பது எழுதப்படாத சட்டம்!
Leave a comment