தம்புள்ளை ஹைரியா ஜம்ஆ பள்ளி மீண்டும் வழமையான நடவடிக்கைகளில்!
பிரதேச மக்களுடன் சுமுக உறவை வளர்க்கும் நல்லெண்ண பேச்சின் எதிரொலி!
தம்புள்ளையில் அமைந்துள்ள 60 வருட கால பழமைவாய்ந்த ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அந்தப் பகுதிக்கு அமைச்சர் பெளஸி தலைமையில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஹுனைஸ் பாரூக் எம்.பி., முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என். எம். அமீன், வக்பு சபைத் தலைவர், முஸ்லிம் கலாசார பணிப்பாளர் நவவி அடங்கிய உயர் மட்டக்குழு ஒன்று விஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்ததுடன் அங்குள்ள சிங்கள, முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயம் தொடர்பாக நேற்று முன்தினமிரவு இந்த அமைச்சர்களுடன் கலந்துரையாடல் நடத்திவிட்டு குழுவை அங்கு அனுப்பி வைத்தார்.
நேற்றுக்காலை அங்கு சென்ற குழுவினர் பள்ளிவாசல் தர்மகர்த்தாக்கள், பொதுமக்கள் ஆகியோருடன் பள்ளிவாசலில் கூட்டம் ஒன்றை நடத்தினர் அதன் பின்னர் பிரதேச சிங்கள மக்களுடன் கலந்துரையாடியபோது அவர்கள் இந்தத் தாக்குதலுக்கும் தமக்கும் எத்தகைய தொடர்புமில்லையெனவும் இது வெளியாரின் ஒரு நடவடிக்கையே எனவும் தாங்கள் இதனை வெறுப்பதாகவும் தெரிவித்தனர். முஸ்லிம்களுடன் நாங்கள் காலா காலமாக அந்நியோன்யமாகவே நடந்து வருகின்றோம். இது திட்டமிட்ட செயலெனவும் கூறி வருத்தம் வெளியிட்டனர்.
அங்கு அமைச்சர்களின் உயர்மட்டக் குழுவினர் மேற்கொண்ட கலந்துரையாடல் களின் பின்னர் நேற்று பிற்பகல் லுஹர் தொழுகைக்காக பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஜனாதிபதியிடம் அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதாகத் தெரிவித்த அமைச்சர்கள், சேத விபரங்கள் பற்றியும் தெரியப்படு வதாகவும் அரசு இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதன் பின்னர் நேற்று நண்பகல் அளவில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தம்புள்ளைக்குச் சென்று அந்த பள்ளிவாசலில் லுஹர் தொழுகையை நடாத்தியதுடன் மக்களை அமைதியாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
இதேவேளை நேற்று தம்புள்ள பகுதி யில் அமைதி நிலவியது. பொலிஸாரும் இராணுவத்தினரும் கூட்டாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த பள்ளிவாசலில் மேற்கொண்ட அராஜக முயற்சியின் காரணமாக பள்ளிவாசலின் ஒரு பகுதி சேதமடைந் துள்ளது. தொழுகை நடத்தும் மிம்பர் சேதமாக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் சுவர்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து இன ஐக்கியத்தை விரும்பும் அனைவரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். அமைச்சர்கள் குழுவும் அங்கு மக்களை அமைதிகாக்கு மாறும் ஜனாதிபதியைச் சந்தித்த பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.
-Thinakaran
![n2[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/n21.jpg?w=300&h=200)
Leave a comment