80 வருடகால வரலாறு கொண்டிருக்கும் தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைறாத் ஜூம்ஆ பள்ளிவாயல் சில அமைச்சர்களுடனும் தம்புள்ளை மற்றும் மாத்தளை அரசியல் பிரமுகர்களுடனும் ஏற்பாட்டில் கொழும்பு அழுத்தங்களுக்குப் பின்னர் தற்பொழுது மீண்டும் திறக்கப்பட்டிருப்பதாகவும் தொழுகைகள் இடம்பெறுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘உறங்காத நகரம்’ என அழைக்கப்படும் தம்புள்ளை நகரம் நேற்றிரவு உறங்கி இருந்தது. தற்பொழுது வழமைக்குத் திரும்பி இருப்பினும் பதட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களும் தம்புள்ளைக்கு அமைச்சர் குழுவினருடன் சென்றுள்ளதாகவும் அங்குள்ள பள்ளிவாயல் பிரதிநிதிகளையும் முஸ்லிம்களையும் சிங்கள தலைவர்களையும் சந்தித்து சமரச ஏற்பாடுகள் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றெல்லாம் உலகமெங்கும் கொதித்தெழுந்த பள்ளிவாயல் உடைப்புக்கு அரசியல் தரப்புக்களிடமிருந்தோ எமது முஸ்லிம் தலைமைகளிடமிருந்தோ கண்டணங்கள் எழாத போதும், இன்று காலை அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதும் தம்புள்ளை ரங்கிரி பீடாதிபதிகளை அமைதிப்படுத்தி இருப்பதும் இலங்கைக்கான உலக அழுத்தங்களின் வெளிப்பாட்டை நிரூபிக்கின்றது.
இந்திய சட்டசபை உறுப்பினர்கள் இலங்கையில் தங்கி, சிறுபாண்மை மக்களைச் சந்தித்து அவர்களுக்கான உரிமைகளையும் தேவைகளையும் பற்றி ஆராய்ந்துவரும் இத்தருணத்தில் இச்சம்பவம் நடந்திருப்பது இலங்கை அரசுக்கு மீண்டும் ஓர் நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கின்றது. இதைவிட உலக நாடுகளின் ஊடக அழுத்தங்கள், முஸ்லிம் உலகம் போன்றன இன்று உலகில் வெளியாகி இருக்கும் அச்சுப் பத்திரிகைகளில் இலங்கை அரசை விமர்சித்திருக்கின்றன. இணையத்தள ஊடகங்களும் காடைத்தனத்தின் காணொலிகளையும் புகைப்படங்களையும் பிரசுரித்திருக்கின்றன.
எப்படி இருந்தும் மீண்டும் பள்ளிவாயல் திறக்கப்பட்டிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்! உடைத்து சேதமாக்கப்பட்ட கட்டடங்கள் மீண்டும் மீளமைக்கப்பட வேண்டும். அங்கு வாழும் முஸ்லிம்களுக்கும் இந்நாட்டு அரசியல் சட்டம் கூறும் உரிமைகள் வழங்கப்படல் வேண்டும். இரு சமூகங்களுக்குமிடையில் புரிந்துணர்வும் சமரசமும் ஏற்பட வேண்டும்.
Leave a comment