சிங்களப் பேரினவாதமும் சிறுபாண்மை முஸ்லிம்களும்

சிங்களப் பேரினவாதத்தின் மற்றுமொரு நிகழ்வுதான் நேற்று (20-04-2012) வெள்ளிக்கிழமை தம்புள்ளையில் இடம்பெற்ற பள்ளிவாயல் உடைப்பும் ஆர்ப்பாட்டமுமாகும். அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் உள்ள முஸ்லிம் தலைவர்கள் வாய்மூடிய பொம்மைகளாகவே சம்பவம் நடைபெற்றதிலிருந்து தற்பொழுது வரை கதிரைக்காக குரல்வளை பிடுங்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.

இலங்கையின் அரசுக்கு சார்பான ஊடகங்களிலும் கூட வண்மையாகக் கண்டிக்கப்பட்டிருக்கும் பேரினவாத காட்டுமிராண்டித் தனத்துக்கு சோற்றில் அச்சாறு தொட்டு சாப்பிடுவது போல் ‘லேபல்’ முஸ்லிம்களாக வாழும் ஓருசில அரசியல்வாதிகள் பள்ளிவாயல் உடைப்பைக் கண்டிக்காமல், பாதுகாப்பு பற்றி அறிக்கைவிட்டிருப்பது இவர்களது வெகுளித்தனத்தை வெளிக்காட்டி இருக்கின்றது.

உலக முன்னணி ஊடகங்களான அல்-ஜெஸீரா, பி.பி.சி, கல்ப் நியூஸ் ஆகியவற்றில் பள்ளிவாயல் உடைப்பு பற்றி கண்டித்து செய்திகள் வெளியிட்டிருப்பதானது இலங்கையில் மனித உரிமைகள் எனும் தத்துவம் செல்லாக்காசாக மாறி இருப்பதை பறைசாட்டுகின்றது. இந்தியத்தூதுக் குழுவினர் வந்திருக்கும் இத்தருணத்தில் இலங்கையில் வாழும் சிறுபாண்மையினர் எவ்வாறு சுதந்திரமாக வாழ்கின்றனர் என்பதற்கு இதுவும் ஓர் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

‘இது சிங்களம்-இது சிங்கள நாடு, சிங்களவர்களுக்கே உரியது’ போன்ற துவேச வார்த்தைகளைக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட இவ் ஆர்ப்பாட்டம் அதிகாரம் இருந்தும் அதிகாரத்தரப்பு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. தாய் நாட்டுக்காக என்றும் விசுவாசமாக இருந்துவரும் முஸ்லிம்கள் மஹிந்த இராஜபக்ஷ அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த மனித உரிமை மீறல் பிரேரணைக்கு இக்கட்டான நிலையில் அரசுக்கு ஆதரவளித்த இலங்கை முஸ்லீம்களும், உலக முஸ்லிம் நாடுகளுமே என்பதை மதிப்புக்குரிய ஜனாதிபதி, அவரது அரசாங்கம் மறந்து விட்டது. முஸ்லிம்களுக்கு செய்த நன்றிக் கடனும் இதுவாகும்!

எனினும் எதிர்காரத்தில் முஸ்லிம்களை சமாதானப்படும் வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெறலாம். முஸ்லிம் தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்துகளும் கொடுத்து உலக ஊடகங்களுக்கு இரட்டை வேடம் போடலாம். வாய்மூடிய முஸ்லிம் இயக்கங்களும் அரசியல் தலைவர்களும் எமது நாட்டில் இருக்கும் வரை, முஸ்லிம்கள் சிறுபாண்மை எனும் ஒரே நோக்கத்துக்காக மென்மேலும் நசுக்கப்படலாம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

Published by

Leave a comment