![19%20april%2012%20anuradhapura%20accident%201[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/1920april201220anuradhapura20accident2011.jpg?w=300&h=225)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பணியாளரும், சிரேஷ்ட அறிவிப்பாளருமான ‘பௌசுல் ஹஸன்’ என அழைக்கப்படும் நூராணியா ஹஸன் அவர்கள் தனது 49வது வயதில் இன்று அகாலமரணமானார்கள்.
‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன்’
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளை தொகுப்பதற்காகவும் மேற்பார்வை செய்வதற்காகவும் சென்றுகொண்டிருந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபண உத்தியோகத்தர் குழுவினரின் வேன் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ரம்பாவ பகுதியில் லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் நூராணியா ஹஸன் அவர்கள் உடன் பலியானார்கள். 6 பேர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழக பட்டதாரியான நூராணியா ஹஸன் அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து அன்றைய நாட்களில் வழங்கி வந்தது இன்றும் பல்லாயிரம் இதயங்களில் அவரது குரல் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் உலகமெங்கிலும் அன்னாரது மறைவு குறித்து அனுதாப அலைகள் அனைவரது உள்ளங்களிலும் இருந்து எழுந்தவண்ணமிருக்கின்றன.
அனுபவமுள்ள மூத்த அறிவிப்பாளரான இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபண முஸ்லிம் சேவைக்கும் மற்றும் தென்றல் நிகழ்ச்சிக்கும் பணிப்பாளராகவும் இருந்து வந்தார். ஊடகத்துறை மாத்திரமன்றி விளையாட்டுத் துறையிலும் அதிக பங்காற்றி வந்தார். இதனால் சர்வதேச கிரிக்கட் வர்ணணைகளை அன்றைய நாட்களில் இலங்கையில் வழங்கி வந்தார்.
‘உங்கள் காத்தான்குடி’ இணையத்தளமும் அதனது அபிமானிகளும் அன்னாரது மறைவு குறித்து ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. அன்னாரது குடும்பத்தினர் உறவினர்கள் அனைவருரடனும் இழப்பிட முடியாத இந்த சோகத்தில் பங்கெடுக்கின்றது.
அல்லாஹ் அன்னாருக்கு ‘ஜன்னத்துல் பிர்தௌஸ்’ எனும் சுவனத்தை வழங்குவானாக.
இன்றைய தினகரன் பத்திரிகையில் வெளியாகி இருக்கும் மேலதிக தகவல்கள் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.
இன்று 20ம் திகதி வடமராட்சி நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் நாளை மறுதினம் 22ம் திகதி சாவகச்சேரியிலும் நடைபெறுகின்ற புதுவருட திருவிழா விளையாட்டுப் போட்டிகள், இன்னிசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளர் நூராணியா ஹசன் தலைமையில் குழுவொன்று நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கு புறப்பட்டது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டாளர் ஆர். யோகராஜன், அறிவிப்பாளர்கள் ஏ.எல். ஜபீர், ஜெகன் மோகன், சந்தைப்படுத்தல் பிரிவு உத்தியோகத்தர்களான சந்தன, உபாலி யாப்பா ஆகியோருடன் யோகராஜனின் மனைவி சாந்தி யோகராஜன், மகன் பவித்ரன் ஆகியோரும் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். குறித்த வான் மோதி விபத்துக்குள்ளான லொறிச் சாரதியான நாச்சியாதீவு நZம் என்பவரும் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வானில் பயணித்த மூவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை 4.00 மணியளவில் ரம்பாவ என்ற இடத்தை அண்மித்த போது ரம்பாவைக்கும் இக்கிரிகொல்லாவ என்ற இடத்துக்கும் இடையே அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் மணல் ஏற்றிவந்த லொறியொன்று சோதனை செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
லொறியின் சாரதி சோதனைச் சாவடியில் தனது சாரதி அனுமதிப் பத்திரத்தை காண்பித்து விட்டு லொறியை நோக்கி வந்து கொண்டிருந்த போது லொறியின் பின்பக்கமாக வந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வான் லொறிச் சாரதியையும் மோதித் தள்ளிவிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது வானின் முன்புறம் சுக்குநூறாக நொருக்கிக் கிடந்ததை காணக்கூடியதாக இருந்தது.
சாரதியின் ஆசனத்துக்கு இடதுபக்கமாக அமர்ந்திருந்த நூராணியா ஹசன் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சுமார் 30 நிமிட நேரம் உயிருக்கு போராடியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த நிலையிலிருந்த நூராணியா ஹசனை வெளியே எடுப்பதற்கு முடியாத நிலையில் வானின் கதவுகள் வெட்டப்பட்டு பின்னரே அவர் வெளியில் எடுக்கப்பட்டார். வான் சாரதி இரண்டு கால்களும் முறிந்த நிலையில் மீட்கப்பட்டார்.
சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.எல். ஜபீர் முகத்திலும், கைகளிலும் உடலிலும் படுகாயம் அடைந்த நிலையில் வெளியே எடுக்கப்பட்டார். யோகராஜாவும் கால்கள் இரண்டிலும் காயங்களுடனும் யோகராஜாவின் மனைவி வலது கை முறிந்த நிலையில் மகன் சிறுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
சாரதி ஆசனத்துக்கு பின்புறமாக அமர்ந்திருந்த சந்தைப்படுத்தல் பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். முன்னாலுள்ள லொறிச் சாரதி வானில் மோதுண்டு இடதுபக்க வீதியோரத்தில் மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டார்.
இவர்கள் உடனடியாக ரம்பாவ ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர்.
கால்களில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த யோகராஜா நேற்று விபத்து நடந்த இடத்துக்குச் சென்று பொலிஸாரின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்.
அதிகாலை 4.00 மணியளவில் நடந்த இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில் வானின் சாரதியின் தூக்க கலக்கம் காரணமாகவே இவ்விபத்து நடைபெற்றிருக்கலாம் என தெரிவித்தனர்.
அதிகாலை விபத்து நடைபெற்றதாக கிடைத்த தகவலையடுத்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க உட்பட ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உயரதிகாரி பணிப்பாளர்கள் உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மரணமான நூராணியா ஹசனின் ஜனாஸாவை உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான சகல நடவடிக்கைக ளையும் தலைவர் ஹட்சன் சமரசிங்க மேற்கொண்டிருந்தார். காயமடைந்தவர்க ளையும் அவர் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
நூராணியா ஹசனின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று இரவு மாவனல்லை, ஹிங்குள்ஓயா மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பெருந்திரளான மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
உயிரிழந்த ஊடகவியலாளர் நூராணியா ஹஸன்
ரம்பாவ விபத்தில் உயிரிழந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பெளசுல் ஹஸன் 1964 ஆம் ஆண்டு மாவனல்லை உயன் வத்தையில் பிறந்தார். உயன்வத்தை நூராணிய்யா மகா வித்தியாலயம், மாவனல்லை ஸாஹிரா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் ஊடகவியல் துறையில் சிறந்து விளங்கினார்.
லேக்ஹவுஸ் நிறுவனத்தில் மாவனல்லை தினகரன் நிருபராகப் பணியாற்றிய இவர், பின்னர் லேக்ஹவுஸ் நிறுவனத்தில் இணைந்து தினகரன் ஆசிரியர் பீட ஒப்புநோக்கு பிரிவில் சேவையாற்றி வந்துள்ளார். தினகரன் பத்திரிகையில் விளையாட்டுத்துறை பகுதியில் கட்டுரைகளையும் எழுதி வந்துள்ளார்.
பெளசுல் ஹஸன் என்ற பெயருடைய இவர் ‘நூராணிய்யா ஹஸன்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வரும் அதேசமயம் அதே பெயரிலேயே கட்டுரைகள் எழுதியுள்ளதுடன் வானொலியிலும் அறிமுகமாகியுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரியான இவர், முகாமைத்துவ உதவியாளராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிதிப் பிரிவில் இணைந்து கொண்டார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை, இலங்கை வானொலி தென்றல், இலங்கை வானொலி மலையக சேவை ஆகியவற்றின் பணிப்பாளராக பணியாற்றிய இவர் மரணிக்கும் போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளராக பதவி வகித்து வந்தார்.
முஸ்லிம் சேவையிலும், தென்றல் அலைவரிசையிலும் சமகாலத்தில் பணிப்பாளராக செயற்பட்டவர் இவராவார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உதவிச் செயலாளராக பதவி வகித்த நூராணியா ஹஸன் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
கிரிக்கெட் வர்ணனையாளரான இவர் கிரிக்கெட் வர்ணனை தொடர்பான புத்தகம் ஒன்றை அச்சிட்டு வெளியிட்டு ள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment