இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான நுராணியா ஹஸன் என்று அழைக்கப்படும் நண்பர் பௌசுல் ஹஸன் வாகன விபத்தில் காலமான செய்தி கேட்டு தான் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன் என தற்பொது கட்டாரிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நுராணியா ஹஸனின் மரணம் தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“நண்பர் நூராணியா ஹஸன் ஒலிபரப்புத் துறையிலும், கிரிக்கெட் நேரடி வர்ணனையிலும், எழுத்துத் துறையிலும், சன்மார்க்க விவகாரங்களிலும், சமூக சேவையிலும் அதிக ஈடுபாடு கொண்டு செயலாற்றியவர்.
எவருடனும் சிரித்த முகத்துடன் பழகும் சுபாவத்தையுடைய நண்பர் ஹஸன், ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய ஒலிபரப்பு சேவைகளிலும், கொழும்பிலும் நீண்ட காலம் பணியாற்றியிருக்கிறார். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் பணிப்பாளராக அவர் பணிபுரிந்த காலத்தில் அதனை பிரபல்யப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது.
உயர் கல்வித் தகைமைகளை பெற்றிருந்த அவர், மிகவும் எளிமையாக நடந்து கொண்டதோடு பின் தங்கிய பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டி வந்தார்.
தமது இறுதிக் காலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பொறுப்பு வாய்ந்த பணியொன்றை பெரும்பாலும் நிறைவு செய்திருந்த நிலையில் அவர் எம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.
அன்னாரின் திடீர் மறைவால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, மக்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் எனது ஆழ்ந்த அனுதாங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து மேலான ஜன்னதுல் பிரிதௌஸ்சுல் அஃலா என்ற மேலான சுவனபதியை வழங்குவானாக” என்றார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் நுராணியா ஹஸனின் மரணம் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினுடைய முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளரும் இன்னாள் சந்தைப்படுத்தல் முகாமையாளரும், சிரேஷ்ட ஒலிபரப்பாளருமான சகோதரர் நூரானியா ஹசனின் அகாலமரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைந்தேன்
நூரானியா ஹசன் மிகச் சிறப்பான, துடிதுடிப்பான ஒரு உத்தியோகத்தர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை மிகவும் பொறுப்புள்ள ஒரு நிறுவனமாக, குறிப்பாக முஸ்லிம் சேவையினுடைய நேரங்கள் அதிகரித்து முஸ்லிம் சேவையை மிகச் சிறப்பான ஒரு சேவையாக ஆக்குவதிலும் அதை வர்த்தக ரீதியிலே ஒரு நல்ல சேவையாக மாற்றுவதிலும் அது பொதுமக்களுக்கும் நேயர்களுக்கும் மிகச் சிறப்பான சேவையை வழங்குவதிலும்; மிகவும் அரும்பாடுபட்ட ஒருவர்.
என்னுடைய காலத்திலே இரவு பகலாக பாடுபட்டு, இலங்கை வானொலியின் வளர்ச்சிக்காக உழைத்தவர். சகோதரர் ஹசனின் திடீர் மரணச்செய்தி கேட்டு நான் மிகவும் ஆழ்ந்த கவலையும் அனுதாபமும் அடைகின்றேன். அல்லாஹூத்தஆலா அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவருக்கு சொர்க்கத்தில் அவரது ஹப்றை சொர்க்க பூஞ்சோலையாக ஆக்குவதற்கு இச்சந்தர்ப்த்தில் எல்லாம் வல்ல அல்லாஹ்வை நான் பிரார்த்திக்கின்றேன். அவருடைய பணி தொடர்ந்து மிகசிறப்பாக நடைபெற நாம் எல்லோரும் பாடுபட வேண்டும்” என்றார்.
news: Tamilmirror
Leave a comment