-P.M.புன்னியாமீன்
இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் ரம்பாவெல – மிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் எமது முகநூல் நண்பர் பௌசுல் ஹசன் (நூரானியா ஹசன்) ஸ்தளத்திலே மரணமடைந்த செய்தி கேட்டதும் …கன நேரம் நான் ஸ்தம்பிதமடைந்து விட்டேன். ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்ட துயரம் நீங்க பல காலம் செல்லலாம்.
நான் முகநூலில் ஈடுபடத்தொடங்கிய காலத்திலிருந்தே தனிப்பட்ட முறையிலும், முகநூல் மூலமும் பல கருத்துக்களை தெரிவித்து என்னை ஊக்குவித்துவந்தவர். 3 தினங்களுக்கு முன்பு கூட அவர் என்னோடு தொலைபேசியில் கதைத்த நேரத்தில் எனது வெளியீட்டுப் பணியகமான சிந்தனைவட்டத்திற்கென ஒரு தனியான முகநூல் பக்கத்தை ஆரம்பித்து சிந்தனைவட்டத்தின் அனைத்து செயற்பாடுகள் குறித்தும் பதிவுசெய்தால் சிறப்பாக இருக்குமென ஆலோசனைத் தெரிவித்தார்.
அவரின் ஆலோசனைக்கமைய நேற்றிரவு நேரத்தில் சிந்தனைவட்ட முகநூல் பக்கத்தினை ஆரம்பித்தேன். ஆனால், அப்பக்கத்தை அவர் பார்ப்பதற்கு தற்போது இல்லை என்பதை நினைக்கும்போது மனதுக்குள் விசாலமான அழுத்தமொன்றை உணரக்கூடியதாக உள்ளது.
மனிதனின் வாழ்க்கை இதுதான். மரணம் என்பதை ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாழிகையிலும் நினைவில் கொள்ளல் வேண்டும். அவ்வாறு மரணத்தை நாம் அச்சம் கொள்வோமாயின் எம்முள் எத்தனையோ பாவச் செயல்களிலிருந்து தவிர்ந்துகொள்ளலாம். போட்டி பொறாமைகளிலிருந்து விடுபட்டு மனித உணர்வுகளை மதித்து அனைவருடனும் அன்பாக பழகலாம். நான் முகநூலில் இணைவதற்கு முன்பே நண்பர் பௌசுல் ஹசன் என்னுடைய நீண்டகால நண்பர். பழகுவதற்கு இனியவர். அமைதியான சுபாவம் கொண்டவர். இலகுவில் எவருடைய மனதையும் கவர்ந்துகொள்ளக்கூடியவர். மரணிக்கும்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வர்த்தகத்துறை பணிப்பாளரான கடமைபுரிந்துவந்தார். எத்தகைய உயர்பதவிகளை வகித்தாலும் ஆணவம் என்பதை அவரிடம் எப்போதுமே காணமுடியாது.
இலங்கையில் முக்கியமான அரச விருதுவழங்கும் தெரிவுக்குழுவொன்றில் நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அச்சமயம் இவரின் நடுநிலைமை அணுகுமுறை உரியவருக்கு உரிய விருது கிடைக்க வேண்டுமென்பதில் காட்டிய ஆர்வம் ஆகியவற்றினை என்னால் என்றும் மறப்பதற்கியலாது.
உயன்வத்தை நூரானியா மகாவித்தியாலயம், மாவனல்லை சாஹிராக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவரான அவர் தான் ஆரம்பத்தில் கல்விகற்ற பாடசாலை பெயரையே தன்னுடைய புனைப்பபெயராகவும் இணைத்துக்கொண்டார். ‘உயிருள்ள ஒவ்வொரு ஜீவனும் என்றோ ஒருநாள் மரணத்தை அடைந்தே ஆக வேண்டும்’ என்பது அல்குர்ஆன் வாக்காகும். அன்னார் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனபதி கிடைக்க வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்வோம்.
![14443_100212336671792_100000490773143_3072_2058810_n[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/14443_100212336671792_100000490773143_3072_2058810_n1.jpg?w=87&h=128)
Leave a comment