ஊர்பிரமுகர்கள் குரல் கொடுப்பார்களா?

(வாசகர் மடல்)

-A.A. அப்துல் முனாப்

இலங்கையின் சமகால அரசியல் நிலையினையும் இலங்கையில் வாழும் சிறுபாண்மையினரின் உரிமைகள் என்பவற்றைக் கண்டறியவும் இந்தியாவின் அரசியல் பிரதிநிதிக்குழு இலங்கை வந்து, தற்பொழுது பல இடங்களுக்கும் விஜயம் செய்து, மக்களிடத்தில் நேரடியாகச் சென்று குறைநிறைகளைக் கண்டறிவதில் ஆர்வங்காட்டி வருகின்றனர்.

இலங்கையின் சிறுபாண்மையினராக இருக்கும் தமிழர்களும் முஸ்லிம்களும் கடந்த 30 வருடகாலம் இடம் பெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பது உண்மையானதாகும். சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டிருப்பது மறக்க முடியாது.

அன்று தொட்டு இன்று வரை தமிழ்- முஸ்லிம் உறவுகள் எமது மாவட்டத்தில் இறுக்கமான ஓர் பிணைப்புடன் இருந்து வருவதும் எந்த சந்தேகமும் அல்ல! யாழ்ப்பாணம் சென்றுள்ள இவ் இந்தியக் குழுவினர் மட்டக்களப்புக்கும் விஜயம் செய்யவுள்ளனர். இதன்போது விடுதலைப் புலிகளால் அப்பாவி முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் இவர்களிடத்தில் வெளிச்சமிட்டு காட்டுவதற்கு இது ஒரு நல்ல தருணமாக இருக்கின்றது.

இந்தியாவைப் பொருத்தளவில் இலங்கையின் சிறுபாண்மையினர் தமிழர்கள் என்பதாகவே கருதப்படுகிறது. தமிழ் நாட்டில் தமிழ் பேசும் முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் தமிழர்களாகவே கருதப்படுவதால் இங்கும் தமிழர்களாகவே முஸ்லீம் மக்களும் கருதப்படுவதானது, இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டு முஸ்லிம் அமைப்புக்களுக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டி ஓர் விடயம்.

எனினும் இலங்கை முஸ்லீம்கள் தமிழை தாய் மொழியாகக் கொண்டிருந்த போதிலும் இலங்கை வாழ் தமிழர்களால் இலங்கை முஸ்லீம்கள் தமிழர்கள் என்று அழைக்கப்படவுமில்லை. அதே போல் இலங்கை முஸ்லீம்களும் தழிழர்கள் என்று தெரிவிக்கவும் இல்லை.

எனவே இலங்கையில் தமிழ் பேசும் இந்துக்கள் தமிழர்களாகவும், தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் முஸ்லீம்களாகவும், தமிழ் பேசும் கிறிஸ்துவர்கள் கிறிஸ்துவர்களாகவும் அழைக்கப்படுவதே வழக்கமும் உண்மையும் ஆகும்.

எனவே எமது சமூகத்தின் உரிமைக்கும் ஓர் விடிவைப் பெற எமது ஊர் பிரமுகர்கள் முன் வந்து, எமது சமூகத்துக்கு விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட உயிர்ப்பலிகள், கொள்ளைகள், ஆட்கடத்தல் போன்ற மனத உரிமை மீறல்களை எடுத்துக்கூறி, முஸ்லீம் சமூகமும் இந்நாட்டில் குறிப்பாக வட-கிழக்கில் வாழ்கின்ற முஸ்லீம்களும் கடந்த 30 வருடகால யுத்தத்தில் பாதிக்கப்பட்டதை நிருபித்து, முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்கு குரல் கொடுக்க எமது ஊர் உலமாக்கள், அரசியல்வாதிகள், பொது நிறுவன தலைவர்கள் மற்றும் கல்விமான்கள் அனைவரும் முன்வரவேண்டும் என எமது சமூகம் சார்பாக கேட்கின்றேன்.

Published by

Leave a comment