-MJ
பல வாரங்களாக இழுபட்ட நிலையிலும் உட்கட்சிகளின் தலையீடுகளிலும் தாமதித்த இந்திய எம். பிக்கள் குழுவினர் இலங்கை புறப்பட்டுள்ளதாக. டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன ‘இந்த குழு இலங்கை செல்வது கண்துடைப்பு நாடகம்’ என்று குற்றம் சாட்டிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதிமுக சார்பில் அந்த குழுவில் இடம் பெற்றிருந்த ரபி பெர்னாட் விலகுவதாக அறிவித்தார். திமுகவும் குழுவில் இருந்து விலகுவதாக திமுக தலை வர் கருணாநிதி அறிவித்தார்.
எனினும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவினர் நேற்று புறப்பட்டதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குழுவில் இருந்து கடைசி நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி.க்கள் விலகிவிட்டனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவ ராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை டெல்லியில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கை தமிழர் பகுதிகளில் இந்தியா மேற்கொண்டுள்ள நலதிட்டப்பணிகளை எம்.பி.க்கள் பார்வையிடுவார்கள். வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட தமிழர் பகுதிகளுக்கு எம்.பி.க்கள் செல்வார்கள். இந்த குழுவினர் இலங்கையில் 6 நாட்கள் சுற்றுப்பயணம் செய்வார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குழுவில் திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் கடைசி நேரத்தில் விலகிவிட்டனர். இலங்கை சென்றுள்ள குழுவில், தமிழகத்தை சேர்ந்த எம்.கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன், மாணிக்க தாகூர், என்.எஸ்.வி.சித்தன் (காங்கிரஸ்), டி.கே.ரங்கராஜன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆகிய 5 பேர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த 2 பெரிய கட்சிகள் புறக்கணித்த போதும் திட்டமிட்டபடி குழு இலங்கை செல் லும் என்று அறிவிக்கப்பட்டது.
Leave a comment