ஐ.சி.சி.நிறைவேற்றுக் குழுக் கூட்டம் ஆரம்பம்: சுயாதீன கிரிக்கெட் சபை தொடர்பில் முக்கிய தீர்மானம்

‘அணி ஒன்றுக்கு ஆண்டொன்றுக்கு வழங்கப்படும் சர்வதேச இருபது-20 போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரியிருந்தது. அதில் தற்போது அணி ஒன்றுக்கு ஆண்டொன்றுக்கு வழங்கப்படும் 12 இருபது-20 சர்வதேச போட்டிகள் 15ஆக அதிகரிக்க வேண்டும்’ என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

-சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் (ஐ. சி. சி.) நிறைவேற்றுக்குழுக் கூட்டம் நேற்று டுபாயில் ஆரம்பமானது. இதில் சுயாதீன கிரிக்கெட் சபை மற்றும் எதிர்கால போட்டி அட்டவணை என முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வுள்ளன.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய ஐ. சி. சி. அங்கத்துவ நாடுகளின் கிரிக்கெட் சபைகள் சுயாதீனமாக இயங்குவது தொடர்பிலான லோட் வுல்ப் தலைமையிலான குழுவின் 60 பக்க அறிக்கையை ஐ. சி. சி. ஆய்வு செய்யவுள்ளது. இந்த அறிக்கையில் 65 பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக வலுவான தலைமையொன்று டனான சுயாதீன கிரிக்கெட் சபை, அங்கத்துவ நாடுகளின் ஒழுங்குவிதி, அங்கத்துவ நாடுகளின் உரிமைகள், ஐ. சி. சியின் உதவிகளை அதிகரித்தல் குறித்து இந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

இதில் 2012-2014 ஆண்டுக்கான ஐ.சி. சி. துணைத் தலைவர் பதவிக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் முஸ்தபா கமாலின் பெயர் பரிந்துரைக்கப்படவுள்ளது. பங்களாதேஷ், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சார்பிலேயே இந்த பரிந்துரை செய்யப்படவுள்ளது. தற்போது ஐ. சி. சி. துணைத் தலைவராக இருக்கும் அலன் இஸாக் 2014 ஆம் ஆண்டில் ஐ. சி. சி. தலைவராக நியமனம் பெறவுள்ளதாலேயே முஸ்தபா கமால் அந்த பதவிக்கு பரிந்துரைக்கப்படுகிறார்.

தவிர 2012 ஜூன் மாதத்துடன் தற்போதைய ஐ. சி. சி. நிறைவேற்று அதிகாரி ஹாருன் லோர்காட்டின் பதவிக்காலம் முடிவடைகிறது. எனவே அவருக்கு பதில் தகுந்த ஒருவரை இந்த பதவிக்கு நியமிப்பது குறித்து ஆலோசனைகள் ஐ. சி. சி. நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. ஏற்கனவே ஐ. சி. சி. நிறைவேற்று அதிகாரி பதவிக்கு தகுந்த ஒருவரை தேர்வு செய்யும் பொறுப்பு எகிகான் சென்டர் இன்டர்னஷனல் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த மார்ச்சில் நடந்த நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் பரிந்துரை செய்த இருபது-20 போட்டிகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் குறித்து இந்த நிறைவேற்று குழு கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. குறிப்பாக 2014 ஆம் ஆண்டு இருபது-20 உலகக் கிண்ணப் போட்டிக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின் எண்ணிக்கையை 16 ஆக அதிகரிக்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது.

தவிர, அணி ஒன்றுக்கு ஆண்டொன்றுக்கு வழங்கப்படும் சர்வதேச இருபது-20 போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரியிருந்தது. அதில் தற்போது அணி ஒன்றுக்கு ஆண்டொன்றுக்கு வழங்கப்படும் 12 இருபது-20 சர்வதேச போட்டிகள் 15ஆக அதிகரிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் 2018 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் கொல்கொஸ்டில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டையும் உள்ளடக்குவதற்கான விண்ணப்பம் சமர்ப்பிப்பது குறித்து இம்முறை ஐ. சி. சி. நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

ஐ. சி. சி. நிறைவேற்றுக் குழு கூட்டம் இன்று முடிவடையவுள்ளது.

-Thinakaran

Published by

Leave a comment