இம்மாத இறுதியில் குறுகிய கிரிக்கெட் சுற்றுப்பயணமொன்றை பாகிஸ்தானுக்கு மேற்கொள்ள பங்களாதேஷ் அணி சம்மதித்துள்ளது. ஓர் ஒருநாள் சர்வதேசப் போட்டி மற்றும் ஒரு டுவென்டி டுவென்டி போட்டியில் பங்குபற்றவே பங்களாதேஷ் அணி சம்மதித்துள்ளது.
2009ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பாகிஸ்தானுக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து அதற்குப் பின்னர் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகள் எவையும் பாகிஸ்தானில் நடத்தப்பட்டிருக்கவில்லை. எனவே பங்களாதேஷ் அணியின் சுற்றுப்பயணம் பாகிஸ்தானுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.
ஒருநாள் சர்வதேசப் போட்டி ஏப்ரல் 29ஆம் திகதியும், டுவென்டி டுவென்டிப் போட்டி ஏப்ரல் 30ஆம் திகதியும் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு போட்டிகளும் லாகூரிலுள்ள கடாபி மைதானத்தில் இடம்பெற முடிவுசெய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் அணிக்கு முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ள சர்வதேசக் கிரிக்கெட் சபை, பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான முழுமையான அறிக்கை கிடைக்கப் பெற்றதும் போட்டி ஊழியர்களை அனுப்புவதா இல்லையா என்பது குறித்து முடிவுசெய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில் முழுமையான தொடரொன்றிற்கு பங்களாதேஷ் அணி சம்மதித்திருந்த போதிலும், சர்வதேச கிரிக்கெட் சபை அத்தொடர் தொடர்பான சில சந்தேகங்களை எழுப்பியதன் காரணமாக பின்வாங்கிக் கொண்டது. குறிப்பாக சர்வதேச நடுவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கு சர்வதேசக் கிரிக்கெட் சபை பின்னடித்ததை அடுத்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபையும் பின்னடித்துக் கொண்டது.
அதற்குப் பின்னர் இத்தொடரில் பங்களாதேஷ் அணி பங்குபற்றாவிடில் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் பாதிக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எச்சரிக்கும் பாணியில் கருத்துக்களை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
-tamilmirror
Leave a comment