– வாசகர் மடல்
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் கூட்டு ஸகாத் நிதியத்தினால் ஸகாத் உதவி வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை அந்நாசர் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதன்போது தொழிலுக்காக 70 பேருக்கும், கடன் நிவாரண உதவியாக 70 பேருக்கும், வாழ்வாதார உதவியாக 50 பேருக்கும் ஸக்காத் உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. அல்ஹம்துலில்லாஹ்!
சம்மேளத்தின் இவ்வாறான நடவடிககைகள் உண்மையில் பாராட்டத்தக்கவை. இலங்கையின் முஸ்லிம் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் ஓர் முன்மாதிரியாகத் திகழும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அண்மைக்காலமாக தனது பொது சேவைகளை விஸ்தரித்து உயரிய செயற்பாட்டுடன் தொழிற்பட்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கல்வி, மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு நடவடிக்கைகள், கடன்-வட்டி சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்களை இணங்கண்டு இவர்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளையும் சிக்கல்களையும் அறிந்து உரியவர்களுக்கிடையே சமரச பேச்சுக்களை அல்லது கூட்டங்களை ஏற்பாடு செய்து பிரச்சினைக்கான தீர்வுகளை ஆராய்ந்து நிவர்த்தி செய்து வருவதும் இதன் மற்றுமொரு உயரிய செயற்பாடாக இருக்கின்றது.
காலை தொடக்கம் மாலைவரை வங்கிகளில் எமது பெண்களும் ஆண்களும் அடகு வைக்கும் பிரிவுகளில் நின்று தங்களது நகைகளை கொடுத்து வட்டிக்குப் பணம் பெறும் விடயம் பல வருடங்களாக எமது காத்தான்குடியில் நடந்துவரும் ஒரு செயற்பாடாக இருந்த போதிலும், அண்மைக்காலமாக இதன் செயற்பாடுகள் அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக இருப்பது எமது சமூகத்தின் நிலை அறிந்து நாம் வெட்கித் தலைகுணிய வேண்டியதாக இருக்கின்றது.
சம்மேளனமும் ஜம்மிய்யத்துல் உலமாவும் மிம்பர்களிலும் பொதுக் கூட்டங்களிலும் எவ்வளவோ வட்டி பற்றி கூறியும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே புனித ஜூம்ஆக்களும் பயான் நிகழ்வுகளும் அர்த்தமற்று போயிருக்கின்றன. இவர்கள் ஏன் வட்டி எடுக்கின்றனர்?
1.சீதனம:
திருமணம் முடிக்கும் குமர்கள் இருந்தால் திருமணத்திற்காக அல்லது வீடு கட்டும் செலவுக்காக இருப்பதை வங்கியில் வைத்து வட்டி எடுத்து வீடுகளையோ அல்லது திருமணச் செலவுகளையோ வட்டிப்பணத்தில் நிவர்தத்தி செய்கின்றனர்.
2. வெளிநாட்டுப் பணத்தின் எதிர்பார்ப்பு:
வெளிநாட்டில் இருக்கும் தனது பிள்ளை அல்லது உறவினர் ஒருவரிடம் தனது தேவைகளைக் கூறும்போது, வசதி உள்ளவர்கள் உடனடியாக அனுப்பி வைப்பார்கள். உடன் வசதி வாய்ப்புக்கள் இல்லாதவர்கள் எங்கையாவது பார்த்து சமாளியுங்கள் இரண்டு மாதத்துக்குள் அல்லது அதன் பின்னர் அனுப்பி வைக்கின்றேன் எனக்கூறுவர். எனவே வெளிநாட்டுப் பணம் எப்படியாவது வரும்தானே என நினைத்து இருக்கும் நகைகளை வங்கியில் வைத்து வட்டி எடுத்து தனது தேவைகளை நிறைவு செய்கின்றனர்.
3. குழந்தை பிறப்பும் சாப்பாடும்:
திருமணமாகி பிள்ளை பெற்றெடுத்ததும் ஊர், குடும்பத்திற்கு இடையில் பெருமைக்கு வேண்டி அல்லது தன்மானத்துக்காக நாற்பதுக்கு சாப்பாடு போடுவதற்கும் இவ்வாறான வட்டிகளை எடுத்து ஹராமான உணவை ஊருக்கும் குடும்பத்துக்கும் எத்தனை பேர் இன்னும் ஊட்டுகின்றனர் என்பதும் அறியாத கசப்பான உண்மைகள். பின்னர் குழந்தைக்குக் கிடைக்கும் வசூல் பணத்தின் மூலம் வங்கியில் வைக்கும் இவ்வாறான நகைகள் மீட்கப்படுகின்றன.
4. கல்வி / வெளிநாடு:
குடும்ப உதவிகள் இல்லாதவர்கள் தனது மகனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக ஒரு கற்கைகையப் படிக்க வைப்பதற்காக தங்களது நகைகளை அடகு வைக்கின்றனர். இதேபோல் ‘விசா’ வந்ததும் வெளிநாட்டுக்குச் செல்வதற்கான செலவுகளுக்கும் இவ்வாறு வட்டிக்குப் பணம் எடுப்பதும் மற்றுமொரு விடயமாக இருக்கின்றது.
5. வீட்டு அழகு சாதணப் பொருடகள் அல்லது வாகணங்கள் வாங்குவதற்காக:
எல்லாவீட்டிலும் எல்லாம் இருக்குது. அடுத்தமாதம் அல்லது எப்போதாவது சீட்டு விழும். அதனால் இருக்கும் நகைகளை அடகு வைத்து, வீட்டுக்குரிய பொருட்களை வாங்குவது. இதே போல் மகனுக்கு ஒரு மோட்டார் சைக்கில் வாங்கிக் கொள்வதற்காகவும் இவ்வாறான வட்டிப்பணம் புழக்கத்திற்கு வருகின்றது.
6. தொழில்:
செய்து கொண்டிருக்கும் தொழில் இறுகி சங்கடத்தில் இருக்கும் போதும், புதிய ஒரு தொழிலை ஆரம்பிப்பதற்கும் இவ்வாறு நகைகள் அடகு வைக்கப்படுகின்றன.
7. வட்டி முதலாளிமார்கள்:
வட்டிக்கு கொடுக்கும் எத்தனையோ பேர் ஹாஜியார்ரகளாக, தொழிலதிபர்களாக, உத்தியோகத்தர்களாக எமது சமூகத்தில் வாழ்கின்றனர் என்பதும் இரகசியமான விடயமல்ல! இதனால் ஊருக்குத் தெரியாமல் திரைமறைவில் இவ்வாறான வட்டி முதலாளிமார்களிடம் வட்டிகள் இலகுவாகப் பெறப்பட்டு வருகின்றன.
எனவே ஊரின் கண்ணாக செயற்படும் சம்மேளனம் எமது சகோதர சகோதரிகள் வங்கிகளில் அடகுப்பிரிவுகளில் சென்று வட்டி எடுப்பதைத் தடுக்கவும், ஊரில் பலவாறாக பெருக்கெடுத்துச் செல்லும் வட்டி முதலாளிமார்களை இணங்கண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் இத்தாள் அறியத்தருகின்றேன்.
ஒரு தனிநபராக இவ்வாறான இஸ்லாம் கண்டிக்கும் வட்டிக்கு எதிராக களம் இறங்கி குரல் கொடுப்பதைப் பார்க்கிலும் ஒரு சமூகமாக அல்லது குழுக்களாக சேர்ந்து கண்டிப்பதும் தடுப்பதும் நிச்சயயம் வெற்றியைத்தரும் எனும் எதிர்பார்ப்புடன் அறியத்தருகிறேன்.
நன்றி,
வஸ்ஸலாம்.
அப்துல் சலாம் அப்துல் கபூர்
காத்தான்குடி
Leave a comment