சமுர்த்தி கொடுப்பனவு 33 வீதத்தால் அதிகரிப்பு

ஏப்ரல் 1ம் திகதி முதல் அமுல்

* வடக்கு, கிழக்கில் 43,000 குடும்பங்கள் புதிதாக சேர்ப்பு

* முத்திரை முறை நிறுத்தம்; பணம் வங்கியில் வைப்பு

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கான நிவாரண கொடுப்பனவு 33 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டிருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும், தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலப் பகுதி முதல் அதனை சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முர்த்தி நிவாரணக் கொடுப்பனவு இது வரையும் முத்திரை வடிவில் வழங்கப்பட்டு கூட்டுறவு கடைகள் ஊடாக பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. ஆனால் ஏப்ரல் முதலாம் திகதி முதல் சமுர்த்தி உதிவி பெறும் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் இக் கொடுப்பனவு வைப்பிலிடப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.

சமுர்த்தி நிவாரணக் கொடுப்பனவு இதுவரையும் ஒன்பது வகையாகத் தரப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வந்தன. இது புதிய ஏற்பாட்டின் கீழ் இந்த ஒன்பது வகைகளும் மூன்று வகைகளாகத் தரப்படுத்தப்பட்டு நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படவிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே ரூ. 250.00 முதல் ரூபா 615.00 வரை சமுர்த்தி நிவாரணக் கொடுப்பனவு பெற்றவர்களுக்கு ஏப்ரல் முதலாம் திகதி முதல் இக் கொடுப்பனவு ரூ. 750.00 ஆக அதிகரித்து வழங்கப்படும். ஏற்கனவே, ரூ. 900.00 கொடுப்பனவு பெற்றவர்களுக்கு ரூ. 300.00 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ. 1200.00 இவ்வகையினருக்கு வழங்கப்படும். ரூ.1500.00 கொடுப்பனவு தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் அவர் சொன்னார்.

இதே நேரம் சமுர்த்தி நிவாரணக் கொடுப்பனவு திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 42 ஆயிரத்து 638 குடும்பங்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஏற்கனவே நாட்டில் 15 லட்சத்து 41 ஆயிரத்து 323 குடும்பங்கள் சமுர்த்தி நிவாரணக் கொடுப்பனவைப் பெறுகின்றன. புதிய ஏற்பாட்டின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 42 ஆயிரத்து 638 குடும்பங்களுடன் சேர்த்து 15 லட்சத்து 83 ஆயிரத்து 961 குடும்பங்கள் ஏப்ரல் முதல் சமுர்த்தி நிவாரணக் கொடுப்பனவை பெறும் என்றும் அவர் கூறினார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 42 ஆயிரத்து 638 குடும்பங்களை இத்திட்டத்தின் கொண்டு வந்திருப்பதால் 49.5 மில்லியன் ரூபாவை மாதாந்தம் அரசாங்கம் மேலதிகமாக செல்விடவிருக்கின்றது. என்றாலும் புதிய ஏற்பாட்டின் கீழ் மாதா மாதம் 1233 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடவிருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கான நிவாரணக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டிருப்பதால் அரசாங்கம் 3751 மில்லியன் ரூபாவை இதற்கென செலவிடவுள்ளது எனவும் அவர் கூறினார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நண்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்ந்தும் கூறுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவு திட்டத்தின் ஊடாக சமுர்த்தி உதவி பெறுபவர்களுக்கான நிவாரண கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பை மேற்கொள்ளுவதற்கான யோசனையையும் அவர் முன் வைத்தார். இது வரையும் நடைமுறையில் இருக்கும் முறைமையை மாற்றி கொடுப்பனவை பயனாளிகள் வங்கிகள் ஊடாகப் பெற்றுக் கொள் ளுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென பயனாளிகளுக்கு வாங்கிக் கணக்குகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதன் பயனாக பயனாளிகள் தாம் விரும்பியபடி பணத்தை செலவிடக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். அந்தந்த பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு கொடுப்பனவு வைப்பிலிடப்படுவதால் நிதி மோசடிகள் இடம் பெறுவது தவிர்க்கப்படும். தமது செலவுக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளவும், எதிர்கால முதலீட்டுக்காக பணத்தை சேமிக்கவும் கூடிய பண்பு உருவாகும்.

புதிய ஏற்பாட்டின் கீழ் சமுர்த்தி நிவாரண முத்திரைகளை பிரதேச செயலகங்களுக்கு வாகனங்களில் எடுத்துச் சென்று வழங்கவோ, இப் பணிக்கு அதிகாரி ஈடுபடுத்தவோ, சமுர்த்தி முத்திரைகளை பிரதேசங்களில் வைத்து எழுதவோ, அம்முத்திரைகளை கூட்டுறவு கடைகளில் கடதாசிகளில் ஒட்டி பாதுகாக்கவோ இவ்வாறு ஒட்டப்படும் முத்திரைகளை பாதுகாக்கவோ பெரும் தொகை ஆட்களை ஈடுபடுத்தவும் தேவைப்படாது. பாதுக்காப்பான கடதாசிகளில் முத்திரைகளை அச்சிட வேண்டிய தேவையும் ஏற்படாது. இவற்றுக்கான செலவுகளும் மீதமாகும்.

இதேவேளை சமுர்த்தி நிவாரணக் கொடுப்பனவு திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 9936 குடும்பங்களும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 11733 குடும்பங்களும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 13149 குடும்பங்களும், யாழ். மாவட்டத்திலுள்ள மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் வாழும் 3808 குடும்பங்களும், திருமலை மாவட்டத்திலுள்ள வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் 2834 குடும்பங்களும், வன்னி மாவட்டத்திலுள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் வாழும் 1178 குடும்பங்களும் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

இச் செய்தியாளர் மாநாட்டில் தகவல், ஊடகத்துறை பதிலமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி. கணேகல, சமுர்த்தி ஆணையாளர் நாயகம் சந்திராவிக்கிரமசிங்க, பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

-thinakaran

Published by

Leave a comment