2012 ஆம் ஆண்டு ஆரம்பமாகி மூன்று மாதங்கள் முழுமையாக கடந்த நிலையில் வீதி விபத்துகளினால்
600 பேர் இதுவரை மரணமாகியுள்ளனர்.
1290 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
590 வாகன விபத்துகள் நடைபெற்றுள்ளன.
வீதி விபத்துகள் அதிகரித்து வருவது ஆரோக்கியமானதல்ல.
இதற்கான காரணம் என்ன? சாரதிகளின் கவனயீனமா? அல்லது பாதசாரிகளின் கவனயீனமா? அப்பாவி பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.
வீதி விபத்துகள் கடந்த வருடங்களை விட அதிகரித்துள்ளனவா? இவை பற்றி கேட்டறிந்துகொள்வதற்காக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகரும், சட்டத்தரணியுமான அஜித் ரோஹணவை பொலிஸ் தலைமையகத்திலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.
வீதி விபத்துகள் அதிகரித்துள்ளமைக்குக் காரணம் என்ன?
இதற்கு இதுதான் காரணம் என குறிப்பிட்டு சொல்ல முடியாது. பல காரணங்கள் உள்ளன.
குறிப்பாக இப்போது அனைத்து பகுதிகளிலும் வீதி கட்டமைப்பு சிறந்த முறையில் இருக்கிறது.
வேகக்கட்டுப்பாட்டை பொருட்படுத்துவதில்லை,
வீதி போக்குவரத்து விதி முறைகளை பின்பற்றாமை,
மது போதையில் வாகனம் செலுத்துதல்,
தூக்க மயக்கம், களைப்புடன் வாகனம் செலுத்துதல்,
தனியார் பயணிகள், பஸ் வண்டிகளின் சாரதிகளின் கவனயீனம்,
மோட்டார் சைக்கிலோட்டிகள், முச்சக்கர வண்டிச் சாரதிகளின் ஒழுங்கற்ற வாகனமோட்டுதல்,
பாதசாரிகளின் கவனயீனம், செலியூலர் தொலைபேசியில் கதைத்தபடி செல்லுதல்,
வீதியை கடத்தல், செலியூர் தொலைபேசியூடாக பாடல்கள், ரேடியோவை செவிமடுத்தபடி செல்லுதல் போன்ற காரணங்கள் விபத்துக்கள் அதிகரிப்புக்கு காரணமாக அமைகின்றன.
2006 ஆம் ஆண்டிலிருந்து நாம் பார்த்தால் 2006 ஆம் ஆண்டு 33,757 விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதில் 2238 பேர் மரணமானதுடன், 5812 பேர் படுகாயங்களுக்கும் 16,720 பேர் சிறுகாயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
2007 இல் 31,982 விபத்துகளில் 2402 பேர் மரணம், 6521 பேர் படுகாயம், 16,619 பேர் சிறு காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். 2008 ஆம் ஆண்டில் 29,864 விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதில் 2328 பேர் மரணமானதுடன், 6213 பேர் படுகாயமடைந்தும் 16,105
பேர் சிறு காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
2009 இல் 33,094 விபத்துகளில் 2413 பேர் மரணம், 6811 பேர் படுகாயமடைந்தும் 16,058 பேர் சிறு காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
2010 ஆம் ஆண்டு 37,657 விபத்துகள் 2721 பேர் மரணம், 7931 பேர் படுகாயமடைந்ததுடன் 18,916 பேர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். 2011 ஆம் ஆண்டு 40,000 விபத்துகள் 2721 பேர் மரணம் 6124 பேர் சிறு காயங்களுக்கும் 2012 மார்ச் மாதம் முடிவடையும் வரை 590 விபத்துகளும், 600 பேர் மரணம், 1290 பேர் படுகாயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். இது ஆரோக்கியமானதல்ல. உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மழை காலங்களிலும் வேகமாக செல்லுதல் மிக மோசமான செயல்தான். செலுத்தும் வாகனத்தைப்பற்றிய முழுமையான அறிவின்மை. இரவு வேளைகளில் எதிர் எதிராக வாகனங்கள் வரும்போது மின் விளக்கை டிம் செய்யாமல் செல்லுதல். இவை சாரதிகளின் மோசமான செயல்கள்.
நகரை அண்டிய பகுதிகளில் இரவு வேளைகளில் வாகனம் செலுத்தும் போது, மின் விளக்கை டிம் செய்ய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறதுதானே?
சட்டம் இருக்கிறது. சட்டத்திலிருந்து தப்புவதற்காக மட்டுமே டிம் செய்கிறார்களே தவிர எதிர் எதிராக வருபவர் விபத்துக்குள்ளாகக் கூடாது என்று எல்லாம்
இல்லையே. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ஹெல்மட் போட்டுச் செல்ல வேண்டும். அது அவர்களது பாதுகாப்புக்காக செய்ய வேண்டிய ஒன்று. எனினும் சட்டத்திலிருந்து தப்புவதற்கும் பொலிஸாருக்கு தண்ணி காண்பிப்பதற்காகவுமே ஹெல்மட் போடுகிறார்கள்.
வீதி விதி முறைகளை மீறுபவர்களை பிடிப்பதற்காக பொலிஸார் ஆங்காங்கே இருக்கிறார்கள். ஆனால் ஒரு வாகனம் அல்லது இரண்டு வாகனத்தை மட்டுமே பிடிக்க முடியும். வாகன சாரதிகள் சமிக்ஞை மூலம் தகவல் கொடுத்து விடுகிறார்கள். இதனை தடுக்க முடியாதா?
தவறு செய்பவர்களுக்கு துணை போதல் தவறு செய்வதைவிட தவறானது. சட்டத்தை மீறும் செயலாக அமையும். விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். வாகனம் ஓட்டுபவர்கள் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.
தற்போது போக்குவரத்து அமைச்சர் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் புதிய நடைமுறையொன்றை கொண்டுவரவுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளதுடன், பாராளுமன்றத்தின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
தவறு செய்யும் சாரதியின் அனுமதிப்பத்திரத்தில் ஒவ்வொரு தவறுக்கும் புள்ளிகள் வழங்கப்படும். சாரதி அனுமதிப்பத்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள சிம் கார்டில் இவை பதிவாகும். அதிக புள்ளிகளை பெறும் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்படலாம்.
வருடமொன்றுக்கு 5 இலட்சம் வாகனங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டும் 10 வீத வாகனங்களே வீதியிலிருந்து ஒதுக்கப்படுகின்றன. உட்கட்டமைப்பும் தேவை. இவைக்கு ஏற்ற விதத்தில் அதிக வேகம் கவனயீனம் என்பனவே வாகன விபத்துகளுக்குக் காரணம்.
கொழும்பிலுள்ள ஒருவர் கண்டிக்கு சென்றிருந்த போது தவறு செய்து விட்டதற்காக போக்குவரத்து பொலிஸாரிடம் சிக்கிக்கொண்டால் அவரது சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொண்டு அவரது தண்டனைக்குரிய பணத்தை செலுத்த வேண்டிய ரசீதை வழங்குகிறார்கள்.
அவர் தண்டப்பணத்தை செலுத்தி சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்காக மீண்டும் கண்டிக்கே செல்ல வேண்டும். கண்டிக்கு போகும் போது சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டவர் பொலிஸ் நிலையத்தில் இருக்கமாட்டார். அலைச்சல்தான் மிகுதியாகும். இதனை போக்க முடியாதா?
முடியும். இப்போது பொலிஸ் திணைக்களம் புதிய நடைமுறை ஒன்றை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளது. ஒரு சாரதி எங்கு எந்த இடத்தில் பிடிபடுகிறாரோ அதே இடத்தில் இருந்தவாறு உடனடியாக தனது செலியூலர் தொலைபேசியை பயன்படுத்தி எஸ்.எம்.எஸ். ஊடாக தண்டப்பணத்தை செலுத்த முடியும். அவர் தபால் அலுவலகங்களை தேடிச் செல்ல வேண்டியதில்லை.
அவர் அனுப்பும் எஸ்.எம்.எஸ். பொலிஸ் தலைமையகத்தில் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் தரவுகளுக்கு வந்து சேர்ந்துவிடும். இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
-thinakaran
னமே காரணம்
Leave a comment