அதிகரிக்கும் விபத்துகள்: வெகுவாக கட்டுப்படுத்த கடும் ஒழுங்கு விதிகள்

* பொருத்தமில்லாத வாகனங்களை அப்புறப்படுத்தல்

* குற்றச் செயல்களுக்கு தண்டனைப்புள்ளி

* தரக்கட்டுப்பாட்டுச் சோதனை

* பாதசாரிகளுக்கு விழிப்புணர்வுத் திட்டம்

நாட்டில் இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களைக் குறைக்கும் பொருட்டு புதிய ஒழுங்கு விதிமுறைகளை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் பூரண ஒத்துழைப்புடன் புதிய ஒழுங்கு விதிமுறைகளை வெகுவிரைவில் அமுல்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எஸ். எச். ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.

பாவனைக்குப் பொருத்தமில்லாத வாகனங்களை வீதியிலிருந்து அப்புறப்படுத்தல், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் குற்றச் செயல்களுக்கு புள்ளி வழங்குதல், வாகனங்களின் தரக் கட்டுப்பாட்டு பரீட்சைகளை மேம்படுத்தல், சாரதி பயிற்சி பாடசாலைகளின் பயிற்சிகளை மேம்படுத்தல் மற்றும் வாகனச் சாரதிகள், பாதசாரிகளுக்கு விழிப்புணர்வு திட்டங்களை வழங்குதல் போன்ற புதிய விதிமுறைகளையே அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய விதிமுறைகளை நடை முறைப்படுத்துவதாயின் ஆளணிப் பலம் மிகவும் இன்றியமையாததாகும் என்று தெரிவித்த அவர், அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதன் ஓர் அங்கமாக கடந்த வாரம் மோட்டார் வாகன பரிசோதகர்கள் 52 பேரை புதிதாக திணைக்களத்திற்கு சேர்த்துக் கொண்டதுடன் இவர்களுக்கு இந்தத் துறை தொடர்பாக 2 மாத கால விசேட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என்றார். வீதி விபத்துக்கள் மூலம் நாளொன்றுக்கு ஆறு பேர் உயிரிழப்பதாகப் பொலிஸ் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட தகவல்கள் மூலம் தெரியவருகின்றது. அத்துடன் 80 வீத விபத்துக்கள் அலட்சியம் காரணமாகவும், நாளாந்தம் நூற்றுக்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. அவற்றில் 45 வீதமானவை மிகவும் மோசமான விபத்துக்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்தே இந்த வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த இந்த புதிய விதிமுறைகளை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய ஒழுங்கான முறையில் பேணப்படாத வாகனங்கள் மற்றும் பாவனைக்கு பொருத்தமில்லாத வாகனங்களை வீதியில் செலுத்துவதிலிருந்து அப்புறப்படுத்துவதுடன், அந்த வாகனத்திற்கான அனுமதிப்பத்திரமும் மீளப்பெறப்படும்.

சாதாரண தரத்திற்கு உட்பட வாகனங்களின் அனுமதிப்பத்திரங்கள் மாத்திரமே புதுப்பிக்கப்படும். அதேசமயம் பொருத்தமில்லாத வாகனங்களை திருத்தி, பாவனைக்கு உகந்தது என்பது உறுதிப்படுத்தும் பட்சத்தில் மாத்திரம் அனுமதிப் பத்திரம் புதுப்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றார்.

இதேவேளை, வீதிபோக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகளை மீறும் குற்றச் செயல்களுக்காக சாரதிகளிடமிருந்து சாரதி அனுமதிப் பத்திரம் கைப்பற்றப்படும் ஒவ்வொரு தடவைகளுக்கும் புள்ளிகள் வழங்கும் திட்டத்தை திணைக்களம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு குற்றச் செயல்களுக்காக வழங்கப்படும் புள்ளிகளும் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஷிணிதிஞிஹி விதிஞிளி’ ல் பதிந்து அவை மதிப்பீடு செய்யப்படவுள்ளது. மேற்படி அட்டையில் அந்த சாரதியின் சகல தகவல்களும் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்றார். உதாரணமாக 2 வருடங்களுக்கு 24 புள்ளிகள் என்ற அடிப்படையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த அவர், அவ்வாறு ஒழுங்காக செயற்படாதவர்களின் சாரதி அனுமதிப்பத்திரம் மீளப்பெறப்படும்.

இந்த நடைமுறை வீதி ஒழுங்கு விதிமுறைகளை சாரதிகள் மதிப்பதற்கும், விதிமுறைகளை மீறும் விடயங்களை குறைக்கவும் ஆர்வமூட்டுவதாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தராதரமற்ற சாரதிகள், பாவனைக்கு பொருத்தமில்லாத வாகங்கள், வசதியற்ற வீதிகள் என்பவற்றாலே கூடுதல் விபத்துக்கள் இடம் பெறுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் வீதிச் சூழலை உடனடியாக மாற்றியமைக்க முடியாது. எனினும் சாரதிகளாலும், வாகனங்களாலும் இந்த மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்றார்.

அதேசமயம், மோசமான வீதி விபத்துக்களை தவிர்க்கும் பொறுப்பு சாரதிகள், பாதசாரிகள் ஆகிய இருதரப்பினரிடமும் உள்ள விடயமாகும் என்று தெரிவித்த அவர், அவர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இதேவேளை 2011ம் ஆண்டில் மாத்திரம் 39 ஆயிரத்து 700 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தவிர 2010ம் ஆண்டில் மாத்திரம் இடம்பெற்ற விபத்துக்களில் 2721 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7931 பேர் படுகாயமடைந்தும், 18916 பேர் சிறு காயங்கள் அடைந்தும் உள்ளதுடன் 2579 மோசமான விபத்துக்கள் பதிவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

வீதி ஒழுங்கு விதிமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிப்பதன் மூலம் இதனை தவிர்க்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

-Thinakaran

Published by

Leave a comment