ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவில் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி பிரார்த்தனை செய்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ் மீர் நகரில் புகழ்பெற்ற குவாஜா மொய்னு தீன் சிஸ்டி தர்கா உள்ளது. அங்கு பிரார்த் தனை செய்வதற்காக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி நேற்று முன்தினம் இந்தியா வந்தார். தனி விமானத்தில் டில்லி வந்த அவர் அங்கு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார்.
பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் பிற்பகலில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய் ப்பூருக்கு சென்றார். சர்தாரியுடன் அவரது மகன் பிலாவல், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் மற்றும் குழு வினரும் சென்றனர். மத்திய மந்திரி பவன்குமார் பன்சாலும் சர்தாரியுடன் சென்றார். பிற்பகல் 3.15 மணி அளவில் ஜெய்ப்பூர் போய்ச் சேர்ந்த சர்தாரியை விமான நிலையத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் விமான நிலையத்தில் உள்ள மிக முக்கிய பிரமுகர் களுக்கான அறையில் சிறிது நேரம் தங்கி இருந்த சர்தாரி, அங்கு முதல் மந்திரி அசோக் கெலாட்டுடன் தேனீர் அருந்தினார். அதன் பிறகு சர்தாரியும் அவரது குழு வினரும் ஹெலிகொப்டர்களில் அஜ்மீர் புறப்பட்டு சென்றனர்.
அங்கு குகாரா என்ற இடத்தில் உள்ள தளத்தில் அவர்கள் சென்ற ஹெலிகொப் டர்கள் தரை இறங்கின. அங்கு சர்தாரியை உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து சர்தாரியும் மற்றவர்களும் கார்களில் அஜ்மீர் தர்காவுக்கு சென்றனர்.
அங்கு சர்தாரி 42 சதுர மீட்டர் சிவப்பு நிற புனித துணியும், மலர் போர்வையும் வழங்கி பிரார்த்தனை செய்தார். அவரது மகன் பச்சை நிற புனித துணியை வழங்கினார். பிரதமர் மன்மோகன் சிங் சார்பில் மந்திரி பவன்குமார் பன்சால் புனித துணி வழங்கினார்.
அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் சர்தாரி கருத்தை எழுதினார். “இந்த புனித தலத்துக்கு வந்தது எனக்கு மிகுந்த ஆன்மிக மகிழ்ச்சியை அளிக்கிறது. மனித குலத்தின் நன்மைக்காக இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று அவர் எழுதி இருக்கிறார்.
மேலும் அஜ்மீர் தர்காவுக்கு சர்தாரி ரூ. 5 கோடி நன்கொடை வழங்குவதாக அறிவித்தார். இதை அவருடன் வந்த குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக அஞ்சுமன் கமிட்டியின் துணைத் தலைவர் சையத் கலிமுதின் சிஸ்டி கூறினார். இது சமீப காலத்தில் வழங்கப்பட்ட மிகப்பெரிய நன்கொடை என்றும் அவர் தெரிவித்தார்.
அஜ்மீர் தர்காவில் பிரார்த்தனை முடிந்ததும் அஜ்மீரில் இருந்து ஹெலிகொப்டரில் மீண்டும் ஜெய்ப்பூர் வந்த சர்தாரி பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் பாகிஸ்தான் புறப்பட்டு சென்றார்.
சர்தாரி வருகையையொட்டி ஜெய்ப்பூர் நகரிலும், அஜ்மீர் தர்காவிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஹெலிகொப்டர் தளத்தில் இருந்து அஜ்மீர் தர்கா வரை வழி நெடுகிலும் பொலிஸார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
இதற்கு முன் கடந்த 2005 ஆம் ஆண்டு சர்தாரி தனது மனைவி பெனாசிருடன் அஜ்மீர் தர்காவுக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-Thinakaran
Leave a comment