மலேரியா நோய்க் கிருமிகள் மருந்துக்கு அழியாமல் போகும் எதிர்ப்பு சக்தியைப் பெற்று வருகிறது என்றும், இதனால் அந்த நோய் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக உருவெடுத்துவிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.
இந்த வகையான நோய்க்கிருமிகள் முதலில் தென்பட்டிருந்த இடத்துக்கு 800 கிலோமீட்டர்கள் அப்பால் பர்மா தாய்லாந்து எல்லைப் பகுதியில் தற்போது காணப்படுவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவ சஞ்சிகையான தி லான்செட்டில் இவர்களது ஆராய்ச்சி பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2010 என்ற ஒரு வருடத்தில் மட்டுமே உலகெங்கும் பார்க்கையில் 6,55,000 பேர் உயிரிழக்க நேர்ந்திருந்தது. இதில் பெரும்பான்மையானோர் குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் ஆவர்.
மலேரியா நோய்க் கிருமியானது கொசுக்கடி மூலம் பரவுகிறது.
இந்த கிருமிக்கு எதிராக பலகாலமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் மருந்துக்கு கட்டுப்படாமல் போகிற ஒரு தன்மையை இக்கிருமிகளிடையில் மூன்று ஆண்டுகளுக்கு முன் முதல் தடவையாக கம்போடியாவில் விஞ்ஞானிகள் அவதானித்திருந்தனர்.
“ஒழிந்துவருகின்ற ஒரு நோய் என்பதிலிருந்து புத்துயிர் பெற்று பரவுகின்ற ஒரு நோயாக மலேரியா உருவெடுத்துவிடும்.””
-ஆராய்ச்சியாளர் பிரான்சுவா நோஸ்டன்.
அவ்வகையான நோய்க்கிருமி மற்ற மற்ற இடங்களுக்கும் பரவாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனாலும் முதலில் காணப்பட்ட இடத்திலிருந்து 800 கிலோமீட்டருக்கு அப்பால் பர்மீய எல்லைப் பகுதியில் தற்போது இவ்வகை கிருமி காணப்படுகிறது.
-BBC Tamil
Leave a comment