ஜெனிவா மாநாட்டு தீர்மானம் நடந்து கொண்டிருக்கின்ற இந்த தருனத்தில் மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் உருவச் சிலை உட்பட நான்கு உருவச் சிலைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் தருகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“இன்று அதிகாலை மட்க்களப்பு நகரில் மிகவும் நீண்ட காலமாக இருந்து வந்த எல்லோராலும் மதிக்கப்படும் மாமனிதர் மகாத்மா காந்தியின் உருவச் சிலை மற்றும் சாரனிய ஸ்தாபகர் வேடன் பவல் ஞாபகார்த்த சிலைகள் உள்ளிட்ட நான்கு சிலைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதுடன் ஆழ்ந்த கவலையையும் தெரிவிக்கின்றது. மட்டக்களப்பு நகரில் அதுவும் பொலிஸ் நிலையமுள்ள இடத்திலிருந்து சொற்ப தூரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதை செய்தவர்களை கண்டுபிடித்து உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்துவதுடன் இவ்வாறான சம்பவம் நடைபெறாமல் எதிர்காலத்தில் பார்க்க வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு தரபபினருக்குண்டு.
தென் கிழக்கு ஆசியாவின் சாரணியர் ஜம்போரி இலங்கையின் தம்புள்ள நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் மட்டக்களப்பில் சாரணியரின் தந்தை என வர்ணிக்கப்படும் வேடன் பவுளின் உருவச்சிலை உடைக்கப்பட்டிருப்பதானது வேதனையை தருகிறது” என்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் கருத்து தெரிவிக்கையில்,
“இச்சிலைகள் உடைப்பினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கண்டனங்களையும் கவலைiயும் தெரிவிக்கின்றோம். இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பொலிஸ் மா அதிபருடன் இன்று காலையில் உடனடியாக தொடர்புகொண்டு விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகம் மேலோங்கி மக்கள் மகிழ்ச்சியாக தத்தமது வாழ்க்கையினை அச்சரீதியின்றி மேற்கொண்டு வரும் இவ்வேளையில் இவ்வாறாக திட்டமிட்ட சில விசமிகளின் செயற்பாடு ஒட்டுமொத்த மக்களினையும் மீண்டும் குழப்ப நினைக்கும் முயற்சியாகவே நாம் பார்க்கின்றோம்.
இச்சிலைகளை உடைத்து சேதமாக்கிய விஷமிகள் எந்த நோக்கத்திற்காக திட்டமிட்டு செய்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறாத வண்ணம் பொதுமக்கள் பொறுமை காத்து குற்றவாளிகளை கண்டறிவதில் பொலிஸாரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கோரி நிற்கின்றது” என்றார். இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் விவேகானந்த பிரதீபன் கருத்து தெரிவிக்கையில்,
“சாரணர் இயக்கம் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டு 100 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை நகரில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் மட்டக்களப்பில் சாரண ஸ்தாபகரின் ஞாபகார்த்த சிலை உடைக்கப்பட்டமையானது மன வேதனையை தருகிறது.
இது குறித்த துரித விசாரணைகள் நடத்தப்பட்டு இதற்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இது சம்பந்தமாக மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன், பிரிகேடியர், மட்டக்களப்பு தலைமையக பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்களுக்கும் தொலைபேசி மூலம் அறிவித்தள்ளேன்” என்றார்.
-tamilmirror
Leave a comment