சிறையில் இருப்பது மிகவும் கொடுமையானது – ஆமீர்

மற்ற எதையும் விட சிறையில் இருப்பது மிகவும் கொடுமையானது. என்னைப் போல இனி யாரும் தவறு செய்ய வேண்டாம் என பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஆமீர், வீரர்களுக்கு அறிவுரை செய்துள்ளார்.

லோர்ட்ஸ் டெஸ்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட, இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், 6 மாத சிறைத் தண்டனை பெற்றார். லண்டன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்ட இவர். நன்னடத்தை காரணமாக மூன்று மாதத்தில் விடுதலையானார். இதனிடையே, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குழு இணைந்து கிரிக்கெட் வீரர்களுக்காக 5 நிமிடம் ஓடக்கூடிய சூதாட்ட அறிவுரை வீடியோ ஒன்று வெளியிட்டது. இதில் தோன்றும் ஆமிர் இளம் வீரர்களை எச்சரிக்கை செய்கிறார். அந்த வீடியோவில் ஆமிர் கூறியது:-

லோர்ட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினேன். ஆனால் அடுத்து சில மணி நேரங்களில் நான் வீசிய இரண்டு ‘நோ -பால்’ காரணமாக வாழ்க்கையே மாறிப்போனது. கிரிக்கெட் வாழ்க்கையே கேள்விக்குறியானது.

நான் செய்தது ஏமாற்றும் வேலை என்று தெரியும். மூத்த வீரர்கள் தந்த நெருக்கடியில் சிக்கி இருந்ததால் வேறு வழியில்லாமல் அப்படி செய்தேன். இதை யாரிடமும் சொல்லாமல் இருந்தது முட்டாள்தனம். எனது தவறை உணர்ந்து கொண்டேன். பின் நடந்த ஐ.சி.சி. விசாரணையில் உண்மையை சொல்ல ஆசைப்பட்டேன். ஆனால் இதற்கான தைரியம் வரவில்லை. பொலிஸார் கைது செய்த போது கதறி அழுதேன்.

இனிமேல் கிரிக்கெட் விளையாடக்கூடாது என்று அப்போது நினைத்துக் கொண்டேன். ஒரு நாள் புகழின் உச்சியில் இருந்த நான், மறுநாளே எல்லோரும் ஏமாற்றுக்காரன், சூதாட்டக்காரன் என்று அழைத்தனர். இந்த துன்பத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சூதாட்டத்துக்காக ஒரு சிலர் உங்களை அணுகலாம். உடனடியாக நீங்கள் ஐ.சி.சி. மற்றும் அணி நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் உங்களை இந்த சிக்கலில் இருந்து கட்டாயம் காப்பாற்றுவர் என்றார்.

-thinakaran

Published by

Leave a comment